Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 91 - 100

91.

யாரென்று கூறினால் காதலுக்கு ஆட்டனத்தி 
யாருமாதி மந்தியும் காண்.


92.

நயந்து தெளிதலே நட்புக் கணியாம் 
பயனில் பதருடன் நட்பு.


93.

தாழ்ந்துசெல் எந்நாளும் தீதொன்றும் வாராது
வாழ்ந்திடும் ஆறென் றறி.


94.

கூறுஞ்சொல் குற்றமின்றி நேர்வழியில் சேர்ந்திடில்
வேறெதுவும் தீங்கில்லை காண்.


95.

வீழ்ந்துப்பின் ஏற்றம் விடிவுபெற்றோன் வாழ்வதனில்
ஊழ்வதுவும் தோற்கும் சமர்.


96.

காதலே மேலென்று காய்ந்தே கிடந்திடுவோர்
மாய்தலே காண்பர் அறி.


97.

ஓதுகின்ற நான்மறை ஓர்நாளும் காவாதே
தீதுடன் நின்ற மனம்.


98.

உள்ளத்துப் போர்மூளும் ஊனுருகும் ஆங்கொரு
கள்ளமனம் கொண்டோர் நிலை.


99.

ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின் 
வருமந்தக் காதல் அறி.



100.

கண்டுயிர்த்தேன் காரிகையின் கண்ணிரண்டை அல்லாது
பண்டே மடிந்தேன் அறி.
 

எனது குறட்பாக்கள்..! 81 -90

81.

வியப்பினைத் தந்து விவேகமும் மாய்த்துப்
பயனறச் செய்யுமாம் சூது.


82.

பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்
மூச்சினைக் கொல்பவள் பாழ்.


83.

பணமென்றால் பத்தும் மறந்திடு வோரில்
குணமொன் றமைவது ஏது.


84.

தவிர்க்குஞ் செயல்களை நீக்காது ஆற்றின்
தவிக்கும் நிலைவரும் காண்.


85.

சாவும் பிணியுடன் சார்ந்துவரும் மூதுமையும்
மேவிய மானிடரில் இல்.


86.

சொற்சுவை யாங்கே சுயமாய் நிறைந்ததாய்
பொற்குவையாய் சொக்கும் கவி.


87.

இயக்குவா னிச்சையில் இச்சகம் என்றும்
இயக்குனன் ஈசன் அறி.


88.

ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின் 
வருமந்தக் காதல் அறி.


89.

நாளொன்றில் எண்ணிடா நாழிகை யேதுமில்லை
வாளாய்ப் பிளக்கும்முன் சொல்.


90.

கண்ணிரண்டு பெற்றும் பயனென்கொல் மாலவன்
கண்ணன்தாள் காணா தவன்.

எனது குறட்பாக்கள்..! 71 - 80

71.

நானென்னும் மாயையினை நீங்கியே தாழ்ந்திடில்
மானுடன் காண்ப துயர்வு.


72.

விரைந்துதவா நட்பு வினயமிலாக் காதல்
உரைத்திடின் பூஉலகில் பாழ்.


73.

அன்பெனும் ஆயுதம் ஆற்றாத தொன்றுண்டோ
மன்னும் புகழீட் டுமது.


74.

சேருவோர் தன்குணம் சேறுடன் சேர்ந்திட்ட
நீரன்ன என்றே உணர்.


75.

செப்புமொழி ஆயிரம் செவ்வியன ஆயினும்
ஒப்பில் தமிழதுவே காண்.


76.

கூறிய கூரிய சொற்கள் இருபுறம்
கூரிய வாளுக்கு நேர்.


77.

செப்பிடு வித்தையினில் செல்லுமோர் மாந்தனுக்கு
செப்பிடு நல்லுரை நீ.


78.

பாருட னொத்து பாவனை காவாக்கால்
யாருமே மதியார் போ.


79.

பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்
மூச்சினைக் கொல்பவள் பெண்.


80.

இங்குளன் இல்லையில்லை அங்குளன் என்றின்றி
நெஞ்சுளனை நாளும் நினை.

எனது குறட்பாக்கள்..! 61 - 70

61.

கடன்பெற்றோ ருள்ளம் கலங்கியே நிற்றல்
விடமுண்ட ஓர்பசு அற்று.


62.

துணையாகும் நட்பது ஈர்பக்கத் தீயின்
அணைத்தெறும்பைக் காத்திட லற்று.


63.

வரையின்றி ஈயுமவ் வள்ளலையு மோர்நாள்
வரையின்றித் தூற்று முலகு..


64.

நூறுபெற்றும் நூலோர் அவைதனில் சீர்பெறா
பேறுபெற் றென்ன பயன்.


65. 

தோதுடன் தீயதுவும் நன்றாய்ந்து இன்னலதை
ஏதுவாய் தீர்த்தல் அறிவு.


66.

அரிது செயல்வல்லான் உண்டெனில் ஆங்கே
பெரிதாகப் போற்றப் படும்.


67.

பரிசினை வேண்டா பதவியும் வேண்டா
கரிசனம் கொண்டவர் நட்பு.


68

பயக்குஞ்சொல் பாங்காய் பயற்க பயனில்
மயக்குஞ்சொல் வீணே அறி.


69.

கூற்றுவன் வந்தக்கால் கூவிப் பயனேது
போற்றுதற் கேற்றபடி வாழ்.


70.

வீண்பழியும் பொல்லாங்கும் நேர்பகையும் இம்மூன்றும்
நாணெனக் கொல்லும் எமன்.

எனது குறட்பாக்கள்..! 51 - 60

51.

சேர்ந்திழுக் குங்கால் செழுமை பெறுந்தேர்போல்
ஊர்கூடி வாழ்தல் நலம்.


52.

குடித்துக் குடலில் புழுசேர்த் தவனை
அடித்தே விரட்டி விடு.


53.

நலமின்றி நூறாண்டு வாழ்தலினும் சீராய்
சிலவாண்டு நோயின்றி வாழ்.


54.

துயர்துடைக் குங்கரங்கள் தூயன கொண்டே
அயர்தனைப் போக்கிடும் நட்பு.


55.

யாரெதைச் சொல்லினும் ஏற்றிடும் சிற்றறிவு
பேரதைப் பாழ்த்திடும் பார்.


56.

செயல்வல்லன் சொல்வல்லன் ஆயோ ரிவரினும்
சொல்லிய செய்வன் சிறப்பு.


57.

ஒழிக புறங்கூறல் மற்றோரை அன்றேல்
பழிபெற்றுப் பாழா குவர்.


58.

சற்றேனும் யோசி சடுதியில் செய்யுமுன்
கற்றோர்க் கழகே யது.


59.

பண்பெனும் தெய்வகுணம் கற்றதனால் வாராது
முன்செய் தவத்தால் வரும்.


60.

பொடிதெனினும் சீர்மிகு காரம் குறையா
கடுகில் குறையுண்டோ சொல்.