Sunday, January 24, 2010

மீராவின் கண்ணன் முழுமையாக...


கலைவேந்தனின்.....மீராவின் கண்ணன்!

1.
ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!

2.
என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
நன்றே வந்து நகையாட்டு கண்ணா!

3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!

4.
துயிலாடும் போதென் துகிலாடு மென்று
துணைகாக்க உன்னை தருவாயென் றெண்ணி
துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே என்மாயவனே எனைகாத்திடு கண்ணா!

5.
தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!

6.
பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய்
சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய்
ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
வேதத்தின் மூலனே வெல்எனை கண்ணா!

7.
பார்த்தனின் மயக்கம் தெளிவித் தவனே
தேர்தனை வலித்து தேர்வித தவனே
ஓர்முறையேனும் என்னருகில் வா
மார்பகம் புதைந்துன் மனம்மகிழ் கண்ணா!

8.
பூவிதழ் உந்தன் பூமணம் காண
தாவியுன் செவ்விதழ் சுவைத்திட ஏங்கும்
பாவியென் பாவம் தொலைத்தெனை ஏந்தியே
ஓவிய மாயுறைந் திடவா கண்ணா!

9.
உந்தன் ஓர்முத்தம் பெறவேண்டி நானும்
எந்தன் ஓர்ஜென்மம் இழப்பேனே கண்ணா!
சிந்தும் ஓர்முத்து இதழமுதம் என்றும்
எந்தன் ஓராயுள் காத்திருக்கும் கண்ணா!

10.
கண்ணாடி முன்நின்று பார்த்தே உன்னைப்
பெண்ணாக நான் மாற்றினேனே! நானும்
நீயாக மாறித்தான் போனேன் என்றும்
சேயாக என்னோடு வாழாயோ கண்ணா!

11.
ஆயர் பாடியில் வாழ்ந்திட்ட போதும்
மாயப் போர்வைகள் போர்த்திட்டபோதும்
வேயப் புல்லாங் குழலூதும் போதும்
தூயன் உன்மீதென் காதலென்றுமே கண்ணா!

12.
உலகமே என்னைக் கூறுஇட்ட போதும்
கலகமே செய்தென்னைக் கொன்றிட்டபோதும்
விலகவே சொல்லியே விலங்கிட்டபோதும்
நிலைமாற மாட்டேனே நீங்கேனே கண்ணா!

13.
என்மேனி காத்தது பசலை என்றும்
உன்மேனி தழுவவே உருகினேன் என்னை
தின்னாலும் மண்ணுக்கு தரமாட்டேன் உயிரை
உன்னுடைமை என்றுமே என்னுயிர் கண்ணா!

14.
காதலர் என்றே பலபேரும் சொல்லியே
பாதக காமமே கலந்திட வந்தார்
சோதனை என்றே எத்தனை வந்திடினும்
நாதனே உன்சரண் அடைவேனே கண்ணா!

15.
கட்டாய மென்னுடன் புரிந்திட்ட போதிலும்
சுட்டாலும் என்மேனி பட்டாலும் புண்பல
விட்டாலும் சிறையில் ஏறுடன் தனித்துமே
தட்டாமல் உன்னுடனே கலப்பேனே கண்ணா!

16.
வேதமே மூலமாம் சான்றோர்க்கு என்றென்றும்
சாதமே தெய்வமாம் ஏழைகளுக் கென்றென்றும்
பாதமே கடவுளின் பகதருக் கென்றென்றும்
நாதனே நீயேஎனக் கென்றென்றும் கண்ணா!

17.
தலைசீவிப் பூச்சூட்டும் போதும் மாய
நிலைகாட்டும் கண்ணாடி முன்நின்ற போதும்
குலையாமல் உடையணியும் போதும் உந்தன்
விலையிலா மெய்க்காதல் உணர்கிறேன் கண்ணா!

18.
நடக்கின்ற போதும்உன் நினைவு மஞ்சத்தில்
கிடக்கின்ற போதும்உன் உணர்வு உணவு
படைக்கின்ற போதும்உன் கனவு மரணம்
கிடைக்கின்ற போதும்உன் நினைவுதான் கண்ணா!

19.
நீராடும் போதென் உடலினைத் தழுவிடும்
நீராக நீமாறித் தழுவிட வேண்டும்
சீராக நீவந்து சிக்கெடுக்க வேண்டும்
போராடும் என் கூந்தல் உனக்காக கண்ணா!

20.
நீயூட்ட வாராமல் எந்தன் உணவும்
சேயூட்ட இல்லாத தாய் போல நானும்
தாயூட்ட வாராத சேய் போல நீயும்
ஓயாத போராட்டம் ஏனின்று கண்ணா!

21.
வழிப்பாதை எதிர்பார்த்து நானும் என்றும்
விழிப்போர்வை விரித்திட்டேன் உனக்காக மன்னா!
எழில்கூடும் உன்னுதல் என்றென்றும் என்னை
விழிமூட மறந்திடச் செய்திடும் கண்ணா!

22.
குழந்தையாய் நீ பேசும் போதும் என்னை
மழலையால் தாலாட்டும்போதும் என்றும்
நிழலைப்போல் நீஎன்னைத் தொடர்ந்திட்ட போதும்
பழங்கண்ட மந்தியின் நிலைகொண்டேன் கண்ணா!

23.
ஒருபார்வை உனதென்னைக் கொல்லும் மறுபார்வை
திரும்பவும் உயிர்ப்பிக்கும் இதுவென்ன மாயம்
இரும்பினை கவர்ந்திழுக்கும் காந்தமாய் நீயும்
துரும்பினைப் போலவே நானுமாய் கண்ணா!

24.
நீயாட நான்பாட வேண்டும் சிலநேரம்
ஓயாமல் நீபாடவேண்டும் மயங்கியே
தீயாட்டம் போல்நானும் சதிராட்டம் போட்டு
தேயாத நிலா உன்மேல் விழவேண்டும் கண்ணா!

25.
முகம்வாடி நான் சோர்ந்த போதும் எந்தன்
அகம்வாடி தணலின்மேல் துடித்திடும் போதும்
முகம் தாங்கி என்னையுன் மடிமீது போட்டு
இகம்தாங்கும் பூதேவி போல்காப்பாய் கண்ணா!

26.
இப்புவியை நீங்கிட நான் நினைத்தாலும்
தப்பென்று சொல்லிநீ தடுத்திடு கண்ணா!
எப்போதும் என்னருகில் நீ இருந்தென்னை
தப்பாமல் என்னைநீ காப்பாயா கண்ணா?

27.
நீராடி என்கூந்தல் சிக்கெடுக்கும் போதும்
சீராடிஎன்னுடலை மணமூட்டும்போதும்
ஓராடி முன்நின்று எனைப்பார்க்கும் போதும்
போராடிஉனை விரட்டி உடுத்துவேன் கண்ணா!

28.
உன்பட்டுக் கன்னத்தில் ஓர்முத்தம் பதித்து
மென்பட்டு உதட்டினில் மெல்லமாய் மோதியே
கண்பட்டுப் போகுமுன் கண்ணோட்டம் கழித்து
என்பட்டு உள்ளத்தில் மகிழ்வேனே கண்ணா!

29.
மாறாத அன்பும் மன்னிக்கும பண்பும்
மீறாத சொல்லும் மேம்பட்ட செயலும்
கூராக என்னைக் குத்திடும் பார்வை
மீராவாம் என்னை மயக்குதே கண்ணா!

30.
சுந்தரப் பார்வையால் சுண்டியிழுத் தென்னை
வந்தும யக்கியே வாத்சல்ய மாய்ப்பேசி
நந்த கோபாலனே என்நாயகனே நீயும்
எந்தன் மனம்கவர்ந்தாயே கண்ணா!

31.
மோகனப் புன்னகை யால்சுண்டி யேஎன்னை
மேக வண்ணனே நீயும் மயக்கினாய்
வேகமாய் வந்து உள்ளம் கவர்ந்தாய்
தாகம் தீர்த்தென்னையே ஆட்கொள்வாய் கண்ணா!

32.
நாகத்தின் மீதுன் நர்த்தனம் கண்டே
சோகம் தீர்த்தனர் தேவர்கள் அன்று
மோகம் கொண்டுன் மேல்பாய்ந்தனர் கோபியர்
யோகமே வேண்டினேன் நானுன்னை கண்ணா!

33.
சற்றே தலை சாய்த்து சிரித்திடுவாய் அழகாக
உற்றுநோக்கி கண்ணிமைத்து ஓர்நொடியில் எனைஉருக்கி
குற்றம்புரிந்தவன் போல்நீயுன் முகம் வைத்து
பற்றிலா தவன்போல்எனைப் பார்த்திடுவாய் கண்ணா!

34.
அன்பாய்ப்பேசியே அரவணைப்பாய் அக்கறையாய்
என்பும் உருக்கிடும் உன்பாசப் பொழிவினில்தான்
முன்பே மயங்கினேன் முறுவலில் மெய்மறந்தேன்
உன்பேர் சொல்லியே உறஙகுகிறேன் கண்ணா!

35.
பஞ்சுபோல் உன்கன்னம் பட்டுபோன்ற உன்மார்பு
மஞ்சுபடர் மலைபோல நீலவண்ணம் உன்மேனி
தஞ்சமென வந்தோரைத் தாங்கிடும் தாயுள்ளம்
வஞ்சமிலா வாளிப்பு எனைமயக்கி விடும்கண்ணா!

36.
தாய்போல வந்தாய் எனைத் தோள்தாங்கி நின்றாய்
வாய்பேசிப் பேசியே வாழ்த்திட்டாய் நீஎன்றும்
மாய்மாலம் செய்திடும் இப்புவியில் இருந்தென்னை
தூய்மை யுள்ளத்தோனே எனைத் துணைகொள்வாய் கண்ணா!

37.
எத்தனை சோதனை நீவைத்த போதினும்
அத்தனை காதல் பெருகுதே உன்மேல்
அத்தனைச் சுற்றிடும் பித்தனைப் போலவே
முத்தனை உன்முகம் மறக்கிலேன் கண்ணா!

38.
ராதையை உன்னருகில் பாதியாய் வைத்தாய்
பாதை யறியா புள்ளிமான் போலவே
பேதையாம் என்னையும் உன்னருகே ஓரமாய்
கீதையின் நாயகா சேர்த்துக்கொள் கண்ணா!

39.
கோபியர் பலருண்டு போற்றிடவே உன்னை
பாபியரு முன்னை போற்றிடக் கண்டேன்
தாபத்தில் மகளிரும் சுற்றினர் உன்னையே
கோபாலா உன்மேல் உயிர்வைத்தேன் கண்ணா!

40
சாதனை செய்யும் சாதகன் நீயே
போதனை செய்யும் கீதையும் நீயே
வேதனை தீர்க்கும் வேதமும் நீயே
சா தனை போக்கும் கடவுளே கண்ணா!

41.
என்றும்உன் நலம் காணத்துடிக்கிறேன் நானும்
கன்றினைக் காத்திடும் தாய்ப்பசு போலவே
ஒன்றுமே நேராமல் காத்திடுவேன் உன்னை
அன்றியும் வேறேதும் பணியுண்டோ கண்ணா!

42.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந் தென்னை
காப்பிட்டு காத்திடும் காதலன் நீயே
பூப்போல என்றுமே பேதை நான் உன்னை
காழ்ப்பின்றி காத்திடுவேன் கார்வண்ணக் கண்ணா!

43.
சோர்ந்து சுருங்கியே சோகமாய் நானும்
கார்மழை போலவே கண்ணீரில் மூழ்கினேன்
கூர்ந்து நோக்கியும் குளிர்நகை பூட்டியும்
சேர்ந்தே என்னுடன் சிரிப்பாயே கண்ணா!

44.
ஊனுறக்கம் இன்றியே உன்னினைவில் நானும்
தேனுக்குள் விழுந்திட்ட உன்மத்த வண்டு போல்
வான்மதி கண்டலரும் வண்ணமிகு அல்லிபோல்
நான்உன்னைக் கண்டதும் மலர்கிறேன் கண்ணா!

45.
எத்தனை அலட்சியங்கள் நீ செய்த போதிலும்
அததனை அன்பென் மனதிலே ஊறிடும்!
பித்தி என் கனவுகள் கைகூடா தொழிந்திடினும்
அத்தன் உனை மறவா பக்தை நான் கண்ணா!

46
அம்மையுமாய் அத்தனுமாய் ஆசிதரும் ஆசானாய்
இம்மையும் மறுமையும் இன்மையாக்கும் இறைவனாய்
செம்மையும் வழங்கும்நல் அரசனாய் என்றும் நீ
எம்மையும் நீங்காது இருப்பாயோ கண்ணா?

47.
உன்னையே வழிநோக்கி உருகினேன் நானும்
என்னையே இழந்துநான் உன்னிலே கலந்திட்டேன்
பொன்னையும் பொருளையும் வேண்டிலேன் என்றுமே
என்னையும் கைவிடல் கூடுமோ கண்ணா!

48.
ஆயிரம் கோபியர் ஆர்ப்பரிப்பர் உன்மேன்மை
வாய்நிறைய உச்சரிப்பர் உன்நாமம் என்றும்
ஆயினும் என்னுயிராய் உன்னையே என்றுமே
சாயினும் வாழினும் ஏற்றிருப்பேன் கண்ணா!

49.
நீ சிரிக்க புன்னகை தொற்றிக் கொள்ளும்
பூ விரிக்க மணம்பரப்பும் முல்லைபோலே ;
தாய் சிரிக்க தாவி வரும் குழந்தை போல
தூயவனே நீ சிரிக்க மகிழ்வேன் கண்ணா!

50.
சந்தோஷக் கணங்களிலும் உன் நினைவே என்றும்
என் தோஷக் கணங்களிலும் உந்தன் எண்ணம்
சிந்தனை முழுவதிலும் வியாபிக்கும் உன்னுருவம்
வந்தெனை அணைத்திடவே அருள்வாயே கண்ணா!

51.
நாமமுனை அனுதினமும் செப்பிடுவேன் தளராமல்
காமனும் தானெனைக் கொல்ல அம்பெய்த போதும்
சோமனும்தான் குளிர்விக்க வந்த போதும் உந்தன்
தாமரைப் பாதந்தனை விடுகிலேனே கண்ணா!

52.
காழ்ப்புடன் நம்காதல் மனங்களைப் பிரிக்கவே
தீப்புண்ணாய் வார்த்தைகள் கொட்டிடும் போதும்,
வேப்பெனப் பார்வைகள் கசந்திட்ட போதுமே
காப்பாய் நம் காதலை கார்மேகக் கண்ணா!

53.
கனவுலகில் நீஎன்றும் எனை யணைத்தாய்
நனவுலகில் உனைக் காணக் காத்திருந்தேன்
எனதாக்கி உனைத் தழுவத் துடித்திருந்தேன்
மனமாளும் மாதவனே வாராய் கண்ணா!

54.
சித்திரத்தில் உனை என்றும் கண்டிருக்க
பித்தியாய் உனைக் காணத் தவமிருந்தேன்
சித்திரை வெய்யிலில் கடுமழையாய் நீயும்
முத்துதிரும் சிரிப்புடனே முகிழ்த்தாய் கண்ணா!

55.
உனைக்கண்ட நேரமென் சிந்தை தன்னில்
பனைவெல்லம் ருசிகண்ட மந்தி போலே
தனைமறந்த உன்மத்தம் ஊறக் கண்டேன்
எனையாண்டு எடுத்தணைக்க வாராய் கண்ணா!

56.
சித்திரத்தில் நான் கண்ட கண்ணன் தானோ
சித்தமெலாம் நிறைந்திருந்த மாயன் தானோ
முத்தமிட நான் துடித்த மன்னன் தானோ
பித்தாகி அணைத்திடுவேன் வாராய் கண்ணா!

57.
நான் வாழ ஆதாரம் நீதான் என்றும்
மான் வாழா தம்மிணைதான் மரித்துப்போயின்
தேனூறும் அதரத்தால் முத்தம் தந்து
வான்போல எனை நீயும் காப்பாய் கண்ணா!

58.
மின்னிணைப்பு தந்துவிட்ட பதுமை போலே
உன்னணைப்பு என்றென்றும் என்னைக் காக்கும்
பின்னணைத்து பின்கழுத்து முகர்ந்தாய் நீயும்
என்னினைவு இழந்துவிட்டேன் ஏற்பாய் கண்ணா!

59.
என்மார்பைத் தொட்டணைத்து மகிழ்ந்த போதும்
உன் மார்பை எனக்கரணாய் அளித்தபோதும்
உன் கைகள் என்கூந்தல் அளையும்போதும்
மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தேன் கண்ணா!

60.
ஈருடலும் ஓருடலாய் கலந்த போதும்
தேர்போன்று என்னிடையில் தவழ்ந்தபோதும்
சீராய் நீ காது மடல் வருடும் போதும்
ஓர்மூச்சாய் உன்மூச்சில் கலந்தேன் கண்ணா!

61.
உன்னருகில் நானுரசி நின்ற போதும்
என்னிதழில் நீஉரசி மகிழ்ந்த போதும்
மின்னணுவில் ஓர் மாற்றம் கண்டாற்போல
சின்னதோர் பூகம்பம் உணர்ந்தேன் கண்ணா!

62.
உன் மடியில் எனை யமர்த்தி மகிழ்ந்த போது
பின்முடியில் ஓர்கற்றை உன்மேல் தழுவி
என்மனம்தான் குளிர்ந்துபோய் குலுங்கும் வண்ணம்
உனை இம்சைசெய்தாலும் மகிழ்ந்தாய் கண்ணா!

63.
வானில்லா நிலவாம் நான் நீயில்லாமல்
தேனில்லா மலராய் நான்தேய்ந்தே போவேன்
ஊனின்றி கூட நான் வாழ்ந்திருப்பேன்
நான் வாழ உன்மூச்சு தேவை கண்ணா!

64.
ஓர்நாள் நான் உன்மடியில் துயின்ற போது
கார்மேகம் கலைந்துவந்து கவிழ்ந்தாற் போல
போர்முகத்தில் வெற்றிகண்ட மன்னன் போல
ஆர்ப்பரித்தேன் அகமகிழ்ந்தேன் அழகுக் கண்ணா!

65.
ஓராசை என் மனதில் என்றும் கொண்டேன்
நேராக உனைத்தூக்கி இடுப்பில் வைக்க
பேராசைஎன்றே நான் காத்திருந்தேன்
சீராசை என்றேநீ வந்தாய் கண்ணா!

66.
கண்ணாலே உன்னுருவம் காணும்போது
கண்ணுக்குள் உனைவைக்க முயற்சி செய்தேன்
கண்ணெதிரே நீயின்றி வாடும்போது
கண்ணுக்குள் உன்னுருவம் கண்டேன் கண்ணா!

67.
எழிலூற்றாய் எனக்காய் நீ காட்சியளிப்பாய்
விழிநிறைய உன்னுருவம் பருகித்திளைப்பேன்!
குழலூதிநீ மறைந்தபோது அழுது நிற்பேன்
தழலினில் துடிக்குமெனை காப்பாய் கண்ணா!

68.
மோகமாய் புன்னகைத்து வசமாக்கி கோபியரை
வேகமாய் களித்து நீ விளையாட்டு காட்டுகையில்
தாகமாய் வந்தமான் வறண்டகுளம் கண்டதுபோல்
சோகமாய் ஏங்கிநான் பார்த்திருப்பேன் உனைகண்ணா!

69.
எனக்காய் நீ என்றாவாய் எனைமட்டும் கொஞ்சிடுவாய்
எனக்காத்து ஏங்குகின்றேன் என் குறை நீதீர்ப்பாயா
உனக்காய் மட்டுமே உயிருடனே காத்திருப்பேன்
மனக்காயம் தனைதுடைத்து எனைக்காப்பாய் என்கண்ணா!

70.
கோடைவெயிலுக்குப் பின்வரும் மழைபோல் நீ
வாடிநிற்கும் எனைமீட்க ஓடியே வருவாயா?
வாடைக்காற்றிலே வாட்டமுற்ற மலர்போல் நான்
ஓடிவந் தெனைக்காத்து உயிர்ப்பிப் பாயோகண்ணா!

71.
பாராமுக முந்தன் எனதுயிரை துடிக்கவைக்கும்
சேராதுன் மனதை சேய்பசியால் துடிப்பதுபோல்
நீராவிவெயில்பட்டு மறைவதுபோல் தவிக்கின்றேன்
நாராயணனாம்உன் அடிமையன்றோ நான்கண்ணா!

72.
கொஞ்சமாய் நீ பேசி முகம் நோக்க விலை எனினும்
வஞ்சமே இன்றி நான் வலம்வருவேன் உனைஎன்றும்
தஞ்சமே நானென்றும் உன்னன்பு மடியணைப்பில்
நெஞ்சம் நிறைய உனை காதலிப்பேன் கண்ணா!

73.
மாசில்லா மனத்துடன் தான் மன்னவனே உனைநினைத்தேன்
காசில்லா இதயமிது கருணை செய் கார்முகிலா
நேசமது நான் வைத்தேன் நாகுழறி பேசிவிட்டேன்
பாசமுடன் எனை மன்னித் தருள்வாயா நீகண்ணா?

74.
இத்தனை பாராமுகம் என்னுயிரை உருக்கிடுமே
அத்தன் உனை யன்றி ஆர்பாதம் தொழுதிடுவேன்
பித்தனைப்போல் உன் காலைப்பற்றி நின்றேன் மன்னவனே
முத்தனைய பல்லழகா மன்னித்திடு எனைகண்ணா!

75.
உன்னினைவே எனைநாளும் உயிரூட்டி வாழவைக்கும்
என்னுயிரும் உடலுமுனை அனுதினமும் ஏங்கி நிற்கும்
தன்னினைவே இன்றிஉனை எந்நாளும் போற்றுகின்றேன்
மன்னவனே எனைஏற்று மகிழ்விப்பாய் என்கண்ணா!

76.
என்னசைவில் உனையுணர்ந்தேன் மென்னகையில் மெய்மறந்தேன்
பொன்னனைய உன்கையில் பொம்மையாய் தினம்மகிழ்ந்தேன்
சின்னதொரு உன்னசைவும் சிறப்பாக நானுணர்ந்தேன்
கன்னங்கள் சிவக்க நானும் உன்மடியில் மகிழ்ந்தேன் கண்ணா!

77
வெள்ளையாய் பட்டுடுத்தி வெண்மேகம் போல்தான் நீயும்
கள்ளமில்லா சிரிப்புடன்தான் கவலைகள் மறக்கச்செய்தாய்
தள்ளாத வயதிலும் என் தளர்நடைப் பருவத்திலும்
உள்ளுவேன் உன்னை என்றும் ஓடிவா நீயும் கண்ணா!

78
சித்திரம்போல் சிற்றிடைச் சிலைபோல்தான் நீயுமென்னை
பத்திரமாக என்றும் பாதுகாத்து வந்தாய் அன்பில்
எத்தனை இடர்வரினும் காத்திடும் உந்தன் ஆழி
பத்தரைப் பைம்பொன்னே பவித்திரனே என்கண்ணா!

79
இப்புவியில் முக்கனிகள் இன்சுவை என்றார் மூத்தோர்
தப்பில்லை ஆனால் உந்தன் இதழமுதம் பருகிடாதோர்
செப்பிவைத்த கூற்றென்பேன் உன்னிதழ்கள் பருகியபின்
ஒப்பிலா அழகாஉன்னை வைத்திட்டேன் நெஞ்சில் கண்ணா!

80
கற்பனையில் என்றாலும் உனைமட்டும் சங்கமிப்பேன்
விற்பன்னர் பலபேராய் வந்திடினும் நான் வேண்டேன்
சிற்பம்போல் உன்முன்னே துகிலின்றி நான்நிற்பேன்
கற்பகமே என்னுயிரே கலந்திடவே வாகண்ணா!

81.
நடமாடும் கற்பகமாய் நளினமிகு நாயகனாய்
புடம்போட்ட பொற்சிலையாய் புன்னகையில் எனைமயக்கி
விடமேறும் வேகமுடன் வேந்தனேநீ உள்புகுந்தாய்
சுடர்மிகு வனப்புடனே எனைஆள்வாய் நீகண்ணா!

82.
கீதையு ரைத்தனை பார்த்தனை காத்தனை
பாதை தவறிய மாமனை வென்றனை
போதை அளித்தனை கோபியரைக் களித்தனை
கோதையென் கருத்தினுள் புகுந்தனை கண்ணா..!

83.
உள்மூச்சு உன்பேரைச் சொல்லியே இழுத்தேன்
என்பேச்சு அத்தனையும் உன்னிலே முடித்தேன்
செல்மூச்சு எந்தன் உயிரினில் மிகுந்துமே
நல்மூச்சு வாங்கியே உயிர்த்திட்டேன் கண்ணா..!

84.
நாளொரு போதினில் நான்செயும் கருமங்கள்
தோளொடு உன்னைத் தழுவியே செய்கிறேன்
தாளொடு ஒன்றிய மைபோல் என்னுடன்
கோளறு காலமும் வாழ்ந்திடு கண்ணா..!

85.
முப்போகம் முகிழ்த்திடும் வளமிகு நிலமன்ன
எப்போதும் என்னுள் கரந்தனை மன்னனே
தப்பேதும் என்மீது கண்டிட்ட போதிலும்
அப்பனைப் போலவே காத்திட்டாய் கண்ணா..!

86.
உறவும் பிறவுமெனைப் பிரிந்திட்ட போதிலும்
குறைப் பிறவி யாய்க்கனவு கரைந்திட்ட போதிலும்
வறையின்றித் துன்பங்கள் வருத்திட்ட போதிலும்
குறையேதும் இல்லை கார்முகில் கண்ணா...!

87.
மத்தளமாய் என்மனது இடிபட்ட போதிலும்
கொத்தடிமை யாய்நானும் சோர்ந்திட்ட போதிலும்
செத்துப் பிழைத்தேதினம் வாழ்ந்திட்ட போதிலும்
அத்தனையும் உனக்காகப் பொறுப்பேனே கண்ணா...!

88.
பொல்லாங்கு பலசொல்லும் பலமுக மனிதரும்
இல்லாத கதைசொல்லி எரித்திடும் வீணரும்
நில்லாமை அறியாத நிர்மூல மாந்தரும்
சொல்லாலே கொன்றாலும் என்னுயிர்நீ கண்ணா...!

89.
கற்புக்கு பேர்சொன்ன பலகதை உண்டு
சொற்கணை தாளாத கவரிமான் உண்டு
பற்பல கலைகள்நீ அறிந்தாலும் என்றும்
தற்புகழ் தேடாத தலைவனே கண்ணா...!

90.
நூறாண்டு நான் வாழ்ந்து முடிந்தாலும் அன்றி
போறாமல் இடையில்நான் வீழ்ந்தாலும் என்றும்
மாறாமல் உன்னோடு மாண்புற வாழ்வேன்
வேறாரும் என்ம்னதில் இனி இல்லை கண்ணா...!

91.
முற்றத்தில் நானுன்னை எண்ணியே நின்றேன்
கொற்றவன் சுடுசொல்லும் குத்தியே என்னை
வற்றலாய் வாட்டியே வீசிட்ட போதும்
முற்றிலும் உன்னிடம் மூழ்கினேன் கண்ணா

92.
ஊனாகி உயிருக்கு விருந்தாகி நீயும்
தேனாகி உடலுக்கு மருந்தாகி நின்றாய்
நானாகத் தேடியுன் பதமடைந் தேனே
கோனாகி எந்தன் குறைதீர்ப்பாய் கண்ணா...!

93.
உன்கற்றைக் குழலென் மனம்கட்டிப் போடும்
முன்கற்ற யாவுமே மறந்தொழிந்து போகும்
பின்பற்ற குருவிலா மாணாக்கன் போலே
உன்பற்று தேடியே உருகினேன் கண்ணா..!

94.
ஓதுவார் வேதத்தின் உட்பொரு ளானாய்
சூதுவா தறிந்துநீ பாரதம் வென்றாய்
மாதுக்கள் சூழவே வலம்வந்து சென்றாய்
தீதின்றி நானும்உனைச் சேர்வேனோ கண்ணா...

95.
வெண்ணெயுண் டேநீயுன் வாய்துடைத்த போதும்
கண்ணிலே காதலைக் காட்டி நின்றபோதும்
மண்ணை யள்ளிநீ மகிழ்ந்துண்ட போதும்
பெண்ணிவள் காதலை அறிந்தாயோ கண்ணா..!

96
உண்மை நேர்மை என்கண்ணெனக் கொண்டேன்
திண்மை எனதுள்ளத்துள் அனுதினம் வளர்த்தேன்
கண்மை யுடனுன் காட்சியை வரைந்தேன்
பெண்மை எனதென்றுமுன் சமர்ப்பணம் கண்ணா!

97.
உனையிழக்கும் பயத்தில் என் மனவசமிழந்து
தினையளவு வெறுப்புமென் மனதிலில்லை எனினும்
முனைவே லாயுன் மென்னுள்ளம் சிதைத்தேன்
வினையெனது மறந்து விரும்புவாய் கண்ணா!

98.
உன்னுருவம் உன்குரல் உன்னிசை என்றுமென்
முன்வந்து முகம்காட்டி முறுவலிக்கச்செய்யும்
பொன்முகம் மென்மனம் பொறுத்தருளும் குணம்
என்மனம் வசமாக்க இது போதும் கண்ணா!
99.
தேரைக்கும் கல்லுக்குள் இரையிட்டுக் காப்பாய்
ஈரைந்து மாதங்கள் கருவுக்கும் காவலாய்
ஏரேந்தும் உழவன்போல் நிலந்தனை ஓர்ப்பாய்
மாரினில் மயங்கினேன் காப்பாயோ கண்ணா...!

100
.நூறென்பாய் உன்னாயுள் தும்மினேன் நானெனில்
சேறோடு சேர்ந்துயரும் பங்கயம் போலும்நான்
ஏறொத்த் மார்பனே உன்னுடன் ஒன்றினேன்
வேறேதும் வேண்டிலேன் பதம்போதும் கண்ணா..!

101.
உன்கோபம் நான்றியேன் உன்னூடல் உணர்ந்தறியேன்
முன்கோபம் மாய்ப்பாயோ என்தாபம் தீர்ப்பாயோ
என்சாபம் போக்கியென் முன்பாபம் தீய்ப்பாயோ
சல்லாபம் வேண்டிலேன் சரணேற்பாய் கண்ணா...!

102.
வாராது வந்துஎன் களிதீர்த்த கண்ணனே
சோராது எனைஎன்றும் மார்தாங்கும் மன்னனே
ஆராய்ந்து தெரிந்ததோர் அருஞ்சுவைக் கன்னலே
தாராயோ முக்தியிப் பிறவிதனில் கண்ணா...!

103.
இன்னல்கள் யாவுமிவ் உலகினில் யான்கன்டேன்
மின்னல்கள் பலஎன்னை மாய்த்திடக் கண்டேன்
முன்னமும் என்மனம் தீய்ந்திடக் கண்டேன்
இன்னமும் என்முக்தி மறுப்பாயா கண்ணா..?

104.
ஜனித்ததும் உனக்கெனவே எனையளித்து விட்டேன்
இனியாரும் என‌க்கென‌வே இல்லையென் ற‌றிந்தேன்
இனித்த‌து ஒழித்தேனுன் இன்முக‌ம் ம‌ற்றெல்லாம்
க‌னிய‌து முக்தியே க‌னிந்த‌ருள்வாய் க‌ண்ணா...!

105.
வ‌ளிய‌து இன்றேலிவ் உல‌க‌து நிலைக்குமோ
ஒளிய‌து ம‌றைந்திடில் காட்சியும் அறியுமோ
க‌ளியது ம‌றுத்திடில் குழ‌வியும் வ‌ள‌ருமோ
துளிய‌ருள் முக்திய‌து தருவாயா க‌ண்ணா...!

106.
காரிரு ள‌க‌ற்றியென் கான‌க‌வாழ் வ‌தனை
பாரினில் ப‌ட்ட‌றிந்தேன் ப‌ட்ட‌து போதுமெனக்
காரிருப் பினும் இல்லைஎன் றாயினும்
காரியே முக்திக்கா யருள்த‌ருவாய் க‌ண்ணா..!

107.
என்னுயிர் என்னாக்கை என்மூச்சு என்வாழ்வு
என்னுள்ள‌ம் என்னித‌ய‌ம் என்செய‌ல் நீயே
உன்னுள்ள‌ம் புகுவ‌த‌ன்றி ஓரெண்ண‌ம் இன்றியே
என்னாயுள் த‌னைக்க‌ழித்தேன் முக்திதா க‌ண்ணா...!

108.
ஓமெனும் ம‌ந்திர மெனக்க‌ருள் செய்வாயோ
மாம‌னைப் போலென் ஆண‌வ‌ம் கொல்வாயோ
யாமே யுன‌க்கு யாவுமெனச் சொல்வாயோ
வாமன னாய்வந்து முக்திதரு வாய்க‌ண்ணா...!

மீராவின் கண்ணன் நூற்றியெட்டு நிறைவு.

Saturday, January 23, 2010

கு கி யும் கு பா வும்...! - ஒரு காதல் கதை...!
குட்டிக் கிருஷ்ணன் குட்டிப்பாப்பா
குறைவில்லாத குதூகலத்துடன்
எங்க வீட்டுச் செல்லப்பிராணிகள்....

குட்டிக்கிருஷ்ணன் வந்த கதை
கொஞ்சம் சோகம் கொஞ்சம் சிரிப்புதான்..

என்றோ ஒரு குளிர்நாளில்
சீசனுக்கு உடல்வளைத்த
சீசரும் சிந்தாமணியும்
சிந்தாமல் சிதறாமல் போட்ட
சிறப்பான குட்டி நாய்...

பெயர்கூட பிறகுதான் நாங்கள் வைத்தோம்...

கண் திறவாமல் பூத்த புஷ்பமாய் இருந்த
அழகான கறுப்புக்குட்டி நாய்க்கு
குட்டிக்கிருஷ்ணன் பெயர் மிகவும் பொருத்தம் தான்...

நாளொரு உணவு வகையுடன்
செல்லத்துக்குக் குறைவில்லாமல்....
ஆனால் தனிமை என்னமோ
குட்டிக்கிருஷ்ணனை வாட்டியது....

தாயிழந்த சோகம் முகத்தில் அப்பிநிற்க
துணைஇல்லா கோபம் கொப்பளிக்க
குட்டிப்பிசாசு போல குறும்புகள் பலவுடன்
வளைய வந்துகொண்டிருந்தான் கு கி....

ஆறு மாதங்கள் அழ்காய ஓடின..

வெளிநாட்டு நாய்க்குட்டி ஒன்னு
வெள்ளைப் பனிப்பூ போல
நண்பர் பரிசளித்த போது
முகம் முழுதும் கண்கள் விரிய
முத்தமிட்டு அணைத்துக்கொண்டேன்....

கண்கள் மெல்லத் திறந்து தலை ஒருக்களித்து
பாவமாய்ப் பார்க்கும் பார்வை....
குட்டிப்பாப்பா என்று பெயர்வைக்க தோன்றியது....

குட்டிக்கிருஷ்ணனுக்கு
தன் முன்பிறவி இணையொன்று
தேடித்தன்னை அடைந்தது போல் கிறக்கம்...

பார்த்த முதல் பார்வையில்
குபா தான் தன் இணை என்று குகியின் நிர்ணயம்..

அப்புறமென்ன....

அழகான காதல்கதை
அங்கே அரங்கேறத் தொடங்கியது...

குட்டிப்பாப்பா எங்கே போனாலும்
நன்றியுள்ள பணியாளனாய்
பின் தொடரும் குட்டிக்கிருஷ்ணன்...

குபா எதை முகர்ந்தாலும் அதை முதலில் நக்கிப்பார்த்து
நல்லதென மனசுக்குப்பட்டால்
குபா பக்கம் தள்ளிவிடும் குகி...

குபா உறங்கும் வரை அதன் உடல் முழுதும் உரசி
உறங்கியது உரப்பானால் தானுறங்கும் குகி...

குபாவின் காதுமடல் மெல்ல வருடி நக்கி
சிலிர்த்தெழும் குபா அழகை
குறும்புடன் கண்டு ரசிக்கும் குகி...

மெல்ல மெல்ல குகியின் தொடுகையும் வருடலும் இதமாகி
கிறங்கி நிற்கும் குபா....

ஏதோ கவனத்தில் குகி இருந்தாலோ
தன்பால் கவனம் ஈர்க்க குபாவின் எத்தனங்கள்...
மெல்ல எழும் குபாவின் முனகல்கள்...
பதறிப்போய் பாய்ந்துவந்து
குபாவின் உடல் மேல் தன்னுடல் உரசி
கதகதப்பில் மெய்மறக்கவைக்கும் குகி....

குபாவின் மெல்லிய அசைவும்
குகிக்கு பூகம்பம் தான்....
குகியின் சிரமங்கள் குபாவுக்கு சோகமேகங்கள் ....

ஒருவருக்கொருவர்
உயிர் துறக்கும் பாவனைகள்....
நாய்க்குட்டிகளின் காதல்கள்
மனிதரிலும் மேன்மை தான்....

பொல்லாத பொழுதொன்று விடிந்தது
எமனின் எருமைவாகனம் வீட்டின் முகப்பில் வந்து நின்றது
குட்டிப்பாப்பாவின் அழகு கண்ட ஒருவர்
இதை வளர்க்க கேட்டபோது
காசுக்கு ஆசைப்பட்டு விற்க மனமில்லை என்றாலும்
கேட்டவர் மனைவியின் அண்ணனாய் போனது
வாய்மூடி இருக்கச்செய்தது...

குட்டிப்பாப்பாவின் கதறலும் கெஞ்சலும் கண்ணீரும்
மனிதர்களின் காதுகளில் எட்டவே இல்லை..

குகியின் மனநிலை விவரிக்க இயலா சோகத்துடன்
குபாவை சுற்றிச்சுற்றி வந்து தன் பாசத்தை காட்டியது
எடுத்துப்போகவிடாமல்
தன் கூரிய பற்களால் மிரட்டவும் தொடங்கியது....

குட்டிப்பாப்பா அழுதழுது சோர்ந்தது...
குகி இறுதிவரை தன் போராட்டத்தை தொடர்ந்தது...

குட்டிப்பாப்பா காற்றில் சட்டென மறைவது போல்
மேகத்தின் ஊடே மறையும் நிலா போல்
இருந்த காதல் இல்லாமல் போனது போல்
தாயிடமிருந்து பிரித்த குழந்தை போல்
குபா போனபின் குகிக்கு எல்லாம் கசந்தது....

ஊர் உறங்கியபின் ஊளையிட்டு
தன் சோகம் தொடர்ந்தது....

அங்கே குபாவை பாலில் முக்கி
பனியில் புரட்டி கொஞ்சி விளையாடி
அதன் கவனத்தை திசைத்திருப்பி
தோல்வியே கண்டனர் அறிவிலிகள்...

ஆகாரம் மறுத்தது.... தன் ரோமம் உதிர்த்தது....
அழகாய் இருந்த குபா காண சகிக்காது போனதும்
கொண்டு போய் விட்டுவிடலாம் இந்த சனியனை...
எண்ணிய நிமிடம் பழைய வீட்டின் முன் நின்றது கார்...

பழகிய வீட்டின் காதலனின் வாசம் தேடி
சந்தோஷக் கூச்சலுடன் முனகியபடி
நொண்டி உருண்டு புரண்டு குகியிடம் போய் நின்றது...

யாரோ இது என்று ரோமம் சிலிர்க்க கோபம் கொண்டு உறுமியது
அடையாளம் தெரியாத அசிங்கமாய் ஏதோ ஒன்று
தன்னை உரச வருவதை எதிர்த்து குரைத்து நின்றது
பழகிய வாசனை மூக்கு உணர்ந்ததும்...
கண்களின் ஏமாற்றம் மறைந்து
என் குபா என்று நிமிர்ந்து நோக்கியது....

அன்று கண்ட பனிப்பூ குபா இல்லை இப்போது
அருவெறுக்கும் உடலை எலும்பு மூடிய விகாரமாய்
கண்முன் நிற்பது நம் குபா தானா என்று
அருகே சென்று ஊர்ஜிதம் செய்தது...

குகியின் கண்ணுக்கு குபாவின் விகாரம் தெரியவில்லை
விட்டு மறைந்த காதல்
சட்டென புதுப்பாய்ச்சலுடன் வந்தது...

இனி பிரிவு என்றுமில்லை என்று
அணைத்துக்கொண்டது...

எங்கள் வீட்டு செல்லங்கள் குகி குபா வின் உடல்நலம்
எங்கள் கவனிப்பில் மீண்டும் அழகு பூக்கச்செய்தது...

ஓடிக் களித்து உண்டு உரையாடி
தங்கள் சோகம் வேகம் தொலைத்து
மீண்டும் காதல் பவனியுடன் வளைய வந்தது
குபா குகி இரண்டுமே புது வாழ்க்கை தொடங்கியது....

சுயநலம் இல்லாத குகி குபா காதல்...
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல்
ஒருவர் சோகம் மற்றவர் தீர்த்தல்
தனக்கே உரிய மௌன பாஷையும்
அங்க சங்கேதமும்
நாக்கின் வழியே நலம்விசாரிக்கும் மேன்மையும்
அற்புதமான காதல் காவியம்தான்...
கண்களில் படாமல் மறைந்துபோன ஓவியம்தான்...

Monday, January 18, 2010

அவர்களும் வாழட்டுமே...

படிப்பறி வின்றிதினம் பரிதவிப்போர் நிலைமாற‌
துடித்தெழுந்து இளையரெலாம் துவக்கிவைக்க வேணும்
இடித்துரைத்தும் இனியதாய் எடுத்தியம்பி யும்தினமும்
விடிவுபெறும் நற்கல்வி விளக்கேத்த வேணும்.

இருட்டறையை நொந்துநிதம் இடிந்துபோய் நிற்பதினும்
விருப்புடனே ஓர்விளக்கு ஏற்றி வைக்க வேணும்
பொருட்டெனவே பொலிவிழந்த ஏழைகளையும் நினைந்து
செருக்கின்றி நற்செல்வம் செலவழிக்க வேணும்.

நல்லதொரு மனிதஇனம் நலிவடையா திருந்திடவே
பல்வகையில் முயற்சிதனை பகிர்ந்தளிக்க வேணும்
செல்லாக் காசெனவே செழிப்பிழந்த மனிதக்குளம்
வல்லோரால் தூர்நீங்கித் தூய்மை பெறவேணும்.

வலியோரால் வள‌மிழந்த எளியோரின் வாழ்வுநிலை
புலிவாயில் போய்விடாம‌ல் புதுப்பிக்கப் ப‌ட‌வேணும்
மெலிந்தோரும் மேன்மைபெற ஓருறுதி எடுத்துநாமும்
ஒலிஒளியாய் அவ‌ர்வாழ்வை மாற்றி வைக்க‌ வேணும்.

அன்னையாக மாட்டேனா...?

மழலையீன்ற மணிவயிறென
மற்றோரைச் சொல்வீர்கள்...

விழலில்லா நிலத்தையும்
பூமாதேவி என்பீர்கள்...

குழவியொன் றீந்திடாமல்
குறைபட்ட பாவியாய்

அழக்கூட வலுவில்லாது
அவச்சொல் சுமக்கிறேன்...

நிலம்பழுதென்றே
நிதம் கூவிநிற்பீர்

விதைபழுதா என்றே
விசாரித்திருப்பீரா..?

மாவடு கடித்திட
மனசெல்லாம் உண்டெனக்கு...

ஆவது வழியறியாது
நோன்புகள் நேர்கிறேன்....

போவதுவும் வருவதுவும்
பொல்லாங்கு சொல்லுவதை
வாயது அடைத்தே
வாடிப்போய் நிற்கிறேன்...

நோயல்ல இதுவென்றே
நோகித்தான் பறைகிறேன்..

சேயறியா நாய்களும்
இத்தனை இழிபடுமோ..?

மகவில்லா மாதர்கள்
மாந்தரில் கணக்கில்லையா?

முகவரி இல்லாத
மடல்போல்தான் அலைகிறேன்...

இகமே சரியில்லை
பரலோகம் எனக்கெதற்கு....?

அகம்குளிர அன்னையாய்
அழைக்கப்பட மாட்டேனா..?

தேன் துளிகள் பகுதி - 10

1. மலர்வாய் கொண்டு நீ மணிமுத் துதிர்த்தாலே
பலர்வாய் பொத்தியே உன்குரல் செவிமடுப்பார்
அலர்மேல் வந்துதித்த அரங்கனும் காப்பானுனை
கலங்காமல் கண்வளர்வாய் கண்மணியே என்னுயிரே!

2.என்றுமே உன்னுள்ளம் ஏழையின்பால் இரங்கனும்
ஒன்றே தானேனினும் பகுதியாய் பகிர்ந்து உண்
நன்றே நினைத்து நீ நலங்களை செய்துவந்தால்
குன்றேறி நின்றானுனை காத்திடுவான் என்றென்றும்!

3.கொண்டு நற்குணங் களை நீங்காமல் நீயும்
தொண்டுபல செய்துநல் மனங்களைப் போற்றியே
வண்டுபோல் அலைந்துநல் செல்வங்கள் சேர்த்துநீ
தண்டுடை கமலம் போல் ஒட்டாமல் வாழ்கவே!

4.உன்னாலே நான்உயிர்த்தேன் உன்னாலே தான்ஜனனம்
உன்னால் தான் மரணமெனில் அதுவும் என் வரமே
கண்ணாலே பார்த்தாலே கன்றுபோல் துள்ளிடுவேன்
உன்கண்மையின் ஓரணுவாய் காலமெலாம் வாழ்ந்திடுவேன்!

சில வெண்பாக்கள்...!

1.
வள்ளலே ஞானப் பெருஞ்சுடர் ஜோதியே
அள்ளினும் தேயாத செல்வமே - முள்ளில்
விளைந்திட்ட பூஞ்சோலை போல்யானும் இங்கே
களைத்திட்டேன் காத்திடுவாய் நீ!

2.
நானே அறியா சிதம்பர மந்திரத்தை
தானே அறிந்திட்ட என்மகனே - மானேஉன்
மூவாறு ஆண்டினிலே முற்றிலும் ஆய்ந்தறிந்து
ஏவாது நோய்தீர்ப்பாய் நீ.

3.
நின்றேன் நெடுமரமாய் நானும் உவகையுடன்
ஒன்றேன் இனிஉலகில் எப்பொழுதும் - நன்றே
உனைஎண்ணி வாழ்ந்திடுவேன் நாள்தோறும் அன்பே
பனைமரத்தின் வண்டென நான்.

4.
கேளிரும் வாரார் சடுதியில் மானேயுன்
தோள்சுமை ஏற்றிடவே தோல்வியில் - வாளிப்பு
சற்றே குறைந்திடினும் ஏகிடுவர் தூரமாய்
கற்றே தெளிந்திடு நீ!

5.
அறிந்திடேன் உன்னுள்ளம் ஆய்ந்திடேன் சித்தம்
எறிபந்து பாய்ந்திடும் அன்ன - குறிநோக்கி
தீப்பரவும் வேகமதில் உன்னன்பில் என்மனமே
மூப்புவரை வாழ்ந்திடுவேன் நான்.

ஈழம் - சில வேதனை வரிகள்...!

தமிழரின் வேதனை தீருமோ?


ஊர்க்கூடித் தேரிழுக்க நாளும்
ஒப்பாரி வைத்தழுதுக் கூவி
சேர்ந்தோரை கொண்டிழுக்க வைத்து
செம்மையாய் முயற்சித்தும் அந்தோ
தேர்க்காலில் பலமாகப் பட்டு
தள்ளாடி விழுந்திடுமோ தமிழ்த்தேர்?

கருணையிலா நிதியே!


கூட்டணியாம் பேய்பிடித்து உச்சியிலே ஆடும்
வாட்டமுறும் நம்மினத்தை மறக்கவைத்து நாளும்
ஏட்டளவில் பேச்சுப்பேசி முதுகில் குத்தும் வர்க்கம்
ஓட்டுக்காக வீடெரிக்கும் கழகம்ஒரு துக்கம்!

தமிழர் துயர் தீருமோ?


நெஞ்சைக் கையிலேந்தி நேசத்தை நிறைத்துவைத்து
வஞ்சகர் செயுங்கொடுமை வலியுடன் நிதம்பார்த்து
பிஞ்சுக் குழந்தைகளின் பிணித்திடும் ஓலம்கண்டு
தஞ்சமின்றி பரிதவிக்கும் தமிழனுக்கு விடிவிலையோ?

சாதலில் இல்லை உண்மைக் காதல்!சாதலில் இல்லை உண்மைக் காதல்! கல்லின் மீது தடுக்கிவிழுந்தால்
பஞ்சாய் முன்னால் விரிவது காதல்...

எங்கோ சென்ற காதலன் வரும்வரை
கண்களை வாசலில் பதிப்பது காதல்...

காதலி நனைந்தால் குடையாய் முன்னால்
குளிரில் விறைத்தும் காப்பது காதல்...

வெயிலில் களைத்த காதலன் வருகையில்
குளிர்ந்த மோராய் நிற்பது காதல்...

தாகம் என்று சொல்லும் முன்னே 
நீராய் மாறிப் பொழிவது காதல்...

உடலைப் பார்த்து வருவது காமம்
உள்ளம் பார்த்து உருகுதல் காதல்... 

என்னில் உன்னை உன்னுள் என்னை 
மாற்றி வைத்து மகிழ்வது காதல்...

அவனை அடித்தால் அவளைத் தாக்கும்
வலியில் மாறித் துடிக்கும் காதல்...

இறைமேல் பக்தி ஒருவகை காதல்..

பசியின் போது உணவது காதல்...

வாடிடும் ஏழைக் குதவுதல் காதல்..

தாய்மேல் குழந்தை கொண்டது காதல்...

நீர் மேல் மீன்கள் வைப்பது காதல்...

காதல் காதல் என்றும் காதல்..

சாதலில் இல்லை உண்மைக் காதல்!

என்னைத் தொடராதிரு.....!

என்னைத்தொடர்ந்து
ஏன்வருகிறாய்?
நான் என்ன உனக்கு
ஒட்டா உறவா?
செல்லுமிடமெல்லாம் என்னை
செல்லமாய்த் தொடர்கிறாய்...
நான் குனியும் போது முதுகிலும்
நிமிரும்போது மார்பிலும் தவழுகிறாய்...
என் அருகில் சம்மணமிட்டு உண்கிறாய்..
என் நெஞ்சில் தூளி கட்டி உறங்குகிறாய்...
எனக்கும் முன்னால் போகிறாய்...
எனக்கு முன் எழுகிறாய்...
நான் உறங்கிப் பின் உறங்குகிறாய்...
என்மேல என்ன அததனைப்பாசமா?
என் உயிரைக்குடிக்கும் உன் நேசம் அதிகமா?
ஆனால்
நான் உன்னை விலக்குகிறேன்...
விரும்பவில்லை உன்னை...
போ
போய்விடு
தொடராதிரு என்றுமே.....
என்னைத் தொடர்ந்திடும் துன்பமே......!

என்னுள்ளே சமைந்திரு......!

என் இதயத்திரைக்குள்
ஒளிப்படமாய் வந்து நின்றாய்!
என்னுள் நுழைந்து
என்னில் அதிர்ந்து
என்னை ஆர்ப்பரித்து
வற்றாத ஊற்றாய்
என்னுள் வியாபித்தாய்.....!
சற்றே நான் அசந்த போதும்
கொஞ்சமாய் அசைந்தபோதும்
நிறையவே அதிர்ந்த போதும்
நெருப்புக்குள் குளித்த போதும்
என்னுள் ஒரு நயாகராவை உற்பத்தி செய்தாய்...
நான் உன்னை விரும்பிய போது
சற்றே நீ தனித்து நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்....
உன்னில் என்மேல் கருணைக்கணங்கள்
எப்போது வந்தன என்பதை நானறியேன்..
பின்னர்
நீ அரவணைத்து நிற்கும் போது
துன்பத்தை மறந்து நின்றேன்....!
நான் உனக்கு நன்றி சொல்வதும்
என்னை உனக்கு உணர்த்த முயல்வதும்
இனியும் தேவையா.....?
இல்லைதானே இன்பமே

துளிர் விட்ட காதல்...

அவன் நெஞ்சத்தீயில்
வஞ்சகர்கள் விதைத்த
துரோகச்செடிகளின் இடையே
இந்த
வஞ்சியின் காதல் துளிர்த்தது....!

கொஞ்ச மல்ல
கொடுஞ்சொற்கள்
உற்றவர்கள் வீசியவை...!
அத்தனையும்
பூச்செண்டின் புறவிதழ்களாய்
மாற்றியது அந்த
சுந்தர தேவதையின்
மந்திர வார்த்தைகள்!

சொல்லால் அடிபட்டு
சுருண்டு கிடந்தவனை
நீட்டி முழக்கி
நர்த்தனமிட வைத்தது
அந்த
புன்னகைப்பூவின்
முத்துப் பொழியலும்
முகவிலாச தரிசனமும்!

அங்கம் அரவணைக்கும்
அவள் சங்கமம்
கங்கையின்
புனிதக்குளியலாய்
அவனைப்
புதுப்பித்து வைத்து
புன்னகைக்க வைத்தது!

இனி அவனுக்கு
வதைத்து மாய்த்திடும்
பிரிவுகள் இல்லை
உருக்குலைத்திடும்
துன்பமும் இல்லை...
அவனது உல்லாசக்கூவல்
இதனைக் கூறுவது
கேட்கிறதா...........?

''இறைவா...
இனியொரு பிறவி
எனக்கினிவேண்டிலேன்...
அதுவே விதியெனின்
அவள்பாதக்கொலுசின்
ஓர்முத்தாகிட
வரம் வேண்டும்...!''

காத்திருக்கிறேன்.....!

காத்திருப்பது எனக்குப்பிடிக்கும்...

அந்தக் கணங்கள்
நம்மைப்புடம் போடுவதால்...!

உள்நோக்கிய பார்வையில்
உள்ளக்கிடவுகள் உயிர் பெற்று
ஒளிரும் என்பதால்..!

ஒருவரை
எத்தனை நேசிக்கிறோம் என்பதை
காத்திருக்கும் கணங்கள் தான்
நிர்ணயிப்பதால்...!

புல்வெளி கரைந்தபின்
புதிய புல் முளைத்து வர
காத்திருக்கும் பசுவினங்கள்...!
அவற்றைக் கேளுங்கள்
காத்திருப்பதன் அருமை சொல்லும்..!

தொலை தூர மனித வரிசையில்
கால்கடுக்கக் காத்திருந்து
நம்முறை வரும்போது
காத்திருந்த கணங்களின்
சுமைகள் கரையுமல்லவா?

காக்க வைப்பவர் உயிருக்குள்
சமைந்திருந்தால்....
காத்திருப்பது எனக்குப்பிடிக்கும்...!

சங்கமம்....!

எளிதாய் கிடைத்திடும் ஆனந்தம்
மிதமாய் பருகிடும் அமுதம்
மலரில் பரவிடும் நறுமணம்
பக்தியில் கிடைத்திடும் உன்னதம் -
அது கடவுளுடன் இணைந்திடும் சங்கமம்...!

வழக்கில்லா இனிய வாழ்க்கையும்
வம்பில்லா செல்லச் சண்டைகளும்
தொடராத சந்தேக கேள்விகளும்
தம்பதிகளின் நல்லுறவே இணைத்திடும் -
அது இல்லற சாகர சங்கமம்...!

தமிழில் கொஞ்சும் மொழியுடனும்
அன்னையின் அணைப்பில் அன்புடனும்
மாசில்லா குழந்தையின் மழலையுடனும்
அழகாய் மிளிரும் பந்தனம் -
அது தாய்மை உறவின் சங்கமம்...!

மன்றம் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
முத்தமிழ் மன்றத்தின் நல்வளம் -
அது முததமிழ் சாகர சங்கமம்..!

உன் வேய்ந்தோள்களுக்கு நான் அடிமை...!

உறவுகள் என்னை அலைக்கழிக்கும்போது
அயர்ந்து ஓடிவரும் என்னை அன்போடு
ஒருகணம் தாழ்த்தாது அணைத்திருப்பாய்...!

வெற்றிப்பட்டங்களை நான் வானில் பறக்கவிட்டு
சற்றுத்தளர்ந்து சரிந்து விழும் எனனை
ஓடிவந்து உன்னில் புதைத்துக் கொள்வேன்..!

உன் மெல்லிய தோள்களில் புவிதாங்கும் வலிமை
கடலளவு சோகத்தைக் கரைத்துவிடும் திறமை
என்னுள் புத்துணர்வைப் புதைத்துவைக்கும் திண்மை..!

ஆம் கண்ணே....
உன் வேய்ந்தோள்களுக்கு நான் அடிமை...!

உன் மெல்லிதழ்களுக்கு நான் அடிமை...!

என் சோகப் புண்களுக்கு மருந்திட்டு
அவற்றின் ரணத்தைக் குறைப்பதாலா...?

பழையமுதுக்குத் தவித்தவன் வாயில்
பஞ்சாமிர்தம் நிறைப்பதாலா...?

ஒருமுறை உரசி உடலெங்கும் தீவைக்கும்
புதுவிதத் தீப்பொறியாய் ஆனதாலா..?

வாரியள்ளிப் பருகினாலும் வற்றாத ஜீவ ஊற்றாய்
வஞ்சனையின்றி அமுதம் ஊட்டுவதாலா...?

எவற்றால் என்று பகுத்தறிய வியலாத
விடையறியாப்புதிராய் இருந்தாலும்

உன் மெல்லிதழ்களுக்கு நான் அடிமை என்றுமே...!

உன் மீன்விழிகளுக்கு நான் அடிமை...!

என்றாவது உன் அரவணைப்பு என்னை
உன்மத்தனாக்கிவிடும்...!

அப்போது என்னைத் தெளிய வைக்கும்
அற்புதமருந்து அவற்றில் தான் உண்டு..!

உன் நயனங்களின் சிறு அசைவுகள்
என்னை சாதாரணமாக்கிவிடும்..!

அவற்றில் நீர்த்துளிகளோ.. என்றும்
என்னை சதா ரணமாக்கிவிடும்...!

என்றுமே உன் மீன்விழிகளுக்கு
நான் அடிமை...!

உன் புன்னகைக்கு நான் அடிமை...!

இப்படியே நீ புன்னகைத்துக் கொண்டிரு
என் இதயம் உன் மடியில் விழுந்துவிடும்
கவனம்...

அதை என்றும் கலங்க வைத்து விடாதே
உன் சோக முகத்தால்...!

தீவிரவாதம்...!

தாயவள் உதிரத்தில் உதித்திடுவார் - மனம்
தீயென மாறியே உலகழிப்பார்...!
செந்தழல் கொண்டிங்கு சுட்டெரிப்பார் - தினம்
சந்தன விருட்சங்கள் பொசுக்கிடுவார்...!

சொந்தங்கள் அழுதிட பணிபுரிவார் - இவர்
பந்தங்கள் ஏதுமே விலக்கிடுவார்...!
கொண்டிட்ட கொள்கையில் குறுகிடுவார் - மனம்
கொஞ்சமும் இளகிடா குணம் கொள்ளுவார்...!

நாடென்ன செய்தது நமக்கெனுவார் - சினம்
நாட்டையே அழித்திட வழிசெய்குவார்...!
கூடுகள் சிதைத்திட்டு உயிர் பறிப்பார் - மதம்
கூறிட்டு நாட்டினில் குழிபறிப்பார்....!

மனிதங்கள் புதைபட உயிரழிப்பார் - குணம்
மரத்திட புனிதங்கள் அழித்திடுவார்...!
தாயவள் கருவினை களைந்திடுவார் - பணப்
பேயது ஆட்டிட மதங்கொள்ளுவார்....!

மானிடப் பதரென மதித்திடுவோம் - இவர்
மாண்டிட சட்டங்கள் விதைத்திடுவோம்..!
பாரதத் தாயவள் மடிநிறைத்தே - அவள்
பாங்குற வாழ்ந்திட வழி செய்குவோம்....!

உனக்கென்ன தலையெழுத்து...?

நீ
செம்மண்ணில் விளைந்த செந்தாமரை...
இந்த
கரும்மண்ணில் வந்து முளைக்க
உனக்கென்ன தலையெழுத்து...?
நீ
ஊரெல்லாம் உற்சாகமாய் இழுக்க
ஆசைப்படும்
திருவாரூர்த்தேர்
இந்த ஒட்டுக்குடிசையில் அடைபட
உனக்கென்ன தலையெழுத்து....?
நீ
ஊர்ச்சனம் முகந்து குடிக்க
உபயோகப்ப்படும்
சிறுவாணி வெள்ளம்
இந்த சன்னியாசியின் கமண்டலத்தில் அடைபட
உனக்கென்ன தலையெழுத்து....?
நீ
உலகமெல்லாம் போற்றும் குளிர்நிலா
இந்த ராப்பிச்சைக்க்காரனின் அடிமையாகிட
உனக்கென்ன தலையெழுத்து...?
நீ
எல்லாருக்கும் நன்மை செய்யும்
மதர் தெரெசா
இந்த நோயாளிக்கு சேவை செய்ய
உனக்கென்ன தலையெழுத்து....?

உன்ம‌த்த‌மாகுத‌டி....

முண்டுகட்டி கார்கூந்தல் முடிச்சுபோட்டுப் போகும்பெண்ணே
செண்டுகட்டி ஆடுதடி எந்தன்மனம் உன்னைக் கண்டு
ரெண்டுதரம் மூச்சடைச்சே ரெக்கை கட்டிப்பறந்ததடி
உண்டுஇல்லை என்ற இடை உன்மத்தம் ஆக்குதடி....!

ஆடிமாதக் காத்துவந்து ஆளைமாத்திப் போட்டதடி
ஓடி வந்து கட்டிக்கடி ஒடிஞ்சு போகும் எந்தன் நெஞ்சு
சேடிப்பெண்கள் கூட என்னை சேட்டை செய்யும் கோலமடி
வாடி வந்து கட்டிக்கடி வாடிப்போகும் என் மனசு...!

கண்டாங்கிச் சேலையில் கணுக்காலும் தெரியுதடி
கொண்டாட நானிருக்கேன் கொஞ்சிப்பேச வாடிப்புள்ளே
வண்டாடும் சோலையிலே வக்கனையாக் காத்திருப்பேன்
பொண்டாட்டி யாகி நீயும் புருஷனாக ஏத்துக்கடி...!

ஊரெல்லாம் என்னைப்பாத்து ஒதுங்கித் தான்போகுதடி
பேரைக்கூட மறந்து விட்டேன் உன்னை மட்டும் மறக்கவில்ல
சீராக என்னை ஏந்தி சின்னதாகக் கண்ணடிச்சு
நாராகக் கிழிச்சுபோட்டு நர்த்தனமா ஆடுகிறே...?

தேன் துளிகள் பகுதி - 9

ஈழம்...

ஈழம் என்னும் வேழம்
ஈன்றெடுத்த வலிகள் ஆழம்...

வாழவழிகேட்டு வாடிய மனிதம்
வாழ்விழந்து சாய்ந்த கோலம்

பாழும் உயிரென பாவிகளின்
ப‌லியிடலால் வீழ்ந்துப‌ட்ட‌ ஓல‌ம்...

நாளும் உண்வுக்காய்
ந‌ல‌ம்கெட்டுப் புழுதியில் வீழும்...

க‌ண்ணீர் வ‌ற்றிப்போய்க் க‌ண்க‌ளில்
உப்ப‌ள‌ங்க‌ள் வதைப‌ட‌ங்க‌ளாய் வ‌ரைப‌ட‌ங்க‌ள்..

இல‌ங்கையின் வ‌ரைப‌ட‌ம் க‌ண்ணீர்த்துளிபோல்
இய்ல்பாய் அமைந்த‌து விதியா...?

இனிய‌ க‌ண‌ங்க‌ளுக்காய் இன்னும் கூட‌
காத்திருப்புக‌ளின் மிச்ச‌ங்க‌ள்...

என்றுதான் விடியும் இந்த‌ விதியின்
ஈழ‌ விளையாட்டுப்ப‌ட‌ல‌ம்.....?


சென்றானே...

சென்றானே என்னவன் என்காதல் மன்னவன
நின்றானே நிலைபெற்று நெஞ்சினில் தென்னவன்
முன்றானை தனில்முடிந்து வைத்தாலும் முன்னவன்
ஒன்றான எம்நெஞ்சம் தனைமுழுதும் தின்னவன்
கன்றாக தாயிழந்து கதறுகிறேன் அன்னவன்
என்றாலும் வருவானோ என்மனதில் நின்னவன்
நன்றாக நான்தொழுது வேண்டிடினும் பின்னவன்
குன்றாக எனைக்காகக வருவானோ பொன்னவன்..!

வருவாயோ....

வருவாயோ வந்தேன்மேல் பொழிவாயோ அருள்மழை
தருவாயோ முந்திவ்ரம் அழியாமல் தருநிழலாய்
அருமருந்தாய் சிந்திக்கும் வழிசொல்லி அருள்வாயோ
தருவாயில் வந்துநிதம் கழிவிரக்கம் ஒருவிதமாய்
குருவேபோல் வெந்தழியச் செழிக்கவைத்து அருகிருந்து
கருநிறந்தான் சிந்தனையில் வழிபெறவா திருக்கவைத்து
திருவாயால் செந்தமிழால் சுழிபிறழா கருத்தமைத்து
உருவான‌ ச‌ந்த‌முட‌ன் க‌ழிய‌ழகா த‌ருவேனே...

தேன் துளிகள் பகுதி - 8

ஏன்...?

இல்லை என்பார்க்கும் உண்டென்பார்க்கும் ம‌றைவாய்
எல்லையின்றி எங்கும்நிறைந்து எமையாளும் எம்மானே
தொல்லையில்லா உல‌க‌ம்த‌னை வ‌ழங்கித் தொலைக்காம‌ல்
கல்லாகிப் போன‌தேன் க‌ட‌வுளே ப‌தில்சொல்வாய்...!நாமென்று சொல்வோம்...!


நாமெனும் சொல் மறைந்திடும் அங்கே
நாகமாய் ஐயமுனைக் கடித்திடும் போது
ஆமென்று சொல்லி அடங்கிடும்போதே
ஆண்டான் அடிமை உருவாகிடுந்தான்
தீமைகள் மறையும் தீப்போன்ற‌ தூய்மையில்
தீர்ந்திடும் வாதங்கள் சொல்லிடும் வாய்மையில்
ஆமைகள் போன்றதோர் எண்ணங்கள் சாய்ந்திடும்
ஆங்கே குவிந்திடும் அன்பும் காதலும்...!


வார்த்தைக்காய் காத்திருந்து....

வார்த்தைக்காய்க் காத்திருந்து வசமிழந்தான் தன்னையே
வார்த்தெடுத்த சிலையவளின் மனமறிய‌ எண்ணியே
வேர்த்தமுகம் வழிந்திருக்க வேதனையில் வாடினான்
கோர்த்துவைத்த மலர்மாலை ஏற்பின்றி வாடியதாய்....!

வாடியதாய் ஒருநேரம் வாத்சல்யம் மறுநேரம்
கூடிநின்று கலந்திடத்தான் கோடிஎண்ணம் பலநேரம்
ஓடிய மணித்துளிகள் ஒன்றொன்றும் யுகயுகமாய்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம் அவளே....!


நாய‌ம்கேளுநீ...!

நாரணனே வந்துதித்து நாயம் கேளுநீ
சோரம்போன அர்ச்சகனை நொந்து போகநீ
ஓரடிதான் முதுகில்தந்து சொர்க்கம் சேருநீ
சீரழியும் பக்தர்களை வந்து காருநீ...!

வாடிப்போன பக்தருக்கு சோறு போடுநீ
ஓடிப்போன நீதிகளை தேடிப் பாருநீ
மோடிவித்தைக் காரங்களை மோட்சம் தாருநீ
கோடிநன்மை வந்துசேரும் எம்மைக் காருநீ..!


குறள் படிப்போம்...


குறளதை தினம் படித்தே நாம் நிதமதன் வழிநடந்தே
பிற‌ரது நிலை ம‌தித்தே மன வ‌லிமைக‌ள் பல ப‌டைத்தே
திற‌மைக‌ள் ப‌ல‌வ‌ள‌ர்த்தே தின‌ம் திருவ‌ருள் பெற‌நினைத்தே
ம‌ற‌வ‌ழித‌னை ம‌றுத்தே குலம் தழைத்திட வாழ்ந்திடுவோம்....

வினைதீர்க்கும் வழி...

உயர்கேள்வி ஞானம் உய்வெய்தும் ஆர்வம்
துயர்போக்கும் தானம் துணைநிற்கும் ஆக்கம்
அயர்வில்லா தீனம் அசைவில்லா மோனம்
வியர்வில்லா நாணம் வினையாவும் தீர்க்கும்!

தேன் துளிகள் பகுதி - 7

நாவ‌ட‌க்க‌ம்...

அடங்கும் நாவினுக்கு அவனியே அடங்கும்
அடக்கும் விழைவதுவோ அமரருள் அடக்கும்
அடங்கா நாகமது மகுடிக்கு அடங்கும்
அடங்கா காயமது நிலத்தினுக்கு அடங்குமே!

சிவ‌ன் குற‌ள்....

அவனுள்ளே நானென் றுளத்திலெண்ணி - நித்தமும்
சிவனுள்ளே ஆழ்ந்திடுவாய் நீ.

உறுதிகொள் நீ....

கருணைப் பார்வையாலும் கள்ளமிலாச் சிரிப்பினாலும்
திருவான முகத்தாலும் திமிரிலாக் குணத்தாலும்
உருவான அன்புப் பேழையே எனதுயிரே
ஒருநாளும் மறவேனுனை உறுதிகொள் இதைநீயே...!


உனக்காக...!

உன்னோடென் றானவரை உயிருடனே வாழ்ந்திருப்பேன்
என்னஇடர் தான்வரினும் எதிர்த்துநின்று போரிடுவேன்
சின்னதொரு துயருனையே சீரழிக்க வந்தாலும்
என்னையே இழந்தெனிலும் உன்னையே காத்திருப்பேன்...!


தாய்....


உந்தன் நலம்மட்டு மென்றும் கருதியே
தந்தனள் தன்னுதிரம் தனையுருக்கிப் பாலாக்கி
சிந்திய வியர்வையைச் சோறாக்கி ஊட்டினள்
சிந்தித்துப் பாரந்த அன்னையின் தியாகத்தை...!

முன்னேறு....!

முன்னேறு முகம்திரிந்து நோக்காமல் என்றும்
உன்னாலும் முடிமென் றெண்ணம் விதைத்திடு
பின்னால் வருவதை எண்ணிநீ கலங்காமல்
என்னவலி வந்திடினும் உதறிநீ முன்னேறு...!

தோல்விகள் உன்னைத் துவள‌வைக்கும் போதெல்லாம்
சேல்விழியாள் அபிராமி அவளை என்றும் தொழுதிடு
ஊழ்வினை நம்மை உறுத்துமென் றெண்ணாமல்
வாழ்க்கையில் முன்னேறு கால்விழும் தோல்விக‌ள்...!

ப‌டைத்தாயே...

படைப்பாயா எம்மையுமோர் மடைப்பாயாய் எல்லோரும்
ம‌ட‌க்கியே அட‌க்கியே வைத்திடும் பாயானோம்
உடைப்பாயா எம்துய‌ர‌ம் உன்னையே ச‌ரணடைந்தோம்
துடைப்பாயா எம்க‌ண்ணீர் தூய‌வ‌னே எம்மிறையே...!

ஆணினந்தான் என்றென்றும் எமையாண்டு இய‌ந்திர‌மாய்
பேணுகிறோம் என‌ச்சொல்லி பேதைமையை எள்ளிநித‌ம்
பூணுகிறோம் கைவில‌ங்கு க‌ழுத்தினில் தாலிஎன்றே
நாணுகிறோம் எம்நிலைக்கு காத்திடுவாய் எம்மிறையே...!

தேன் துளிகள்.. பகுதி - 6

தொடர்வாய்....!

தொடர்வாய் நின்ற தொடர்வாய்த் தாக்குதல்
தொடர்வாய் நீயும் தொடர் வாய் அறியாமல்
தொடர் வாயறிந்தால் தொடர் வாய்த் தாக்குதல்
தொடர் வாய் மறப்பாய் நன்மை தொடர்வாயே...

பொருள்:

தொடருவாய் நீயும் உன் தொடர்ந்த வாய்த்தாக்குதலை உன் ஆணவத்தால் அனைவர்மீதும். நீ வாழ்வைத் தொடரும் வழி அறியாமல் தான் ( வாய் = வழி) இவ்வாறு வாய்த்தாக்குதல் தொடர்கிறாய். எப்போது நீ வாழும் வழிஅறிகிறாயோ அப்போது நீ வாய்த்தாக்குதல் தொடரும் வழி மறப்பாய். அனைவருக்கும் நன்மை செய்வதைத் தொடர்வாயே...!


செருக்கு...!


இருக்குதே பணமென்றார்ப் பரித்து நிற்காதீர்
கருக்கிளநீர் கெட்டிடாத தன்மைதான் கொண்டதேபோல்
மனமதனை தெளிவுபெற வழிவகை யறிந்துநீவிர்
சினமதனைக் களைந்தேதான் வாழ்வாங்கு வாழ்வீரென்றும்.

போவேனோ உனை விட்டு...!

போவேனோ உனைவிட்டு வெகுதூரம் தானிங்கே
சாவேனோ என்கனவை நடுவழிதான் மறந்து
நோயாலோ தீயாலோ வல்வினையின் நாவாலோ
போயாகிநான் மறைவேன் உனைமட்டும் மறவேனே...!

முதுமைக் காதல்...!

இனியகாதல் இளமையின் சுகமாய்
தனிமை துரத்திச் சிறப்பது காதல்
கனியது சுவைத்து வளம் தரும் போல
முனிவரும் விரும்பும் முதுமைக்காதல்..!

எண்ணப் பிணைவுகள்...

நினைவுக்குளத்தில்
சந்தர்ப்பக்க‌ற்கள் தவறி வீழுமபோது
படிந்து போன‌ நெகிழ்வுப்பாசிக‌ள்
க‌ல‌ங்கி மேல் வ‌ந்து
க‌ண்க‌ல‌ங்க‌ வைப்ப‌து புதித‌ல்ல‌....

காத‌ல் என்னும் ஒற்றை ம‌ந்திர‌ம்
க‌ரு நாக‌த்தையும்
க‌ட்டுண்டு போக‌வைக்கும்...

க‌ட‌ந்து போன‌ நினைவுக‌ளும்
கலைந்து போன‌ க‌ன‌வுக‌ளும்
குடிகார‌னின் உள‌ற‌ல் போல‌
அடிக்க‌டி வ‌ந்து
அய‌ர‌ வைக்கும்....

க‌டந்த பாதையில் க‌வ‌ன‌ம் இருந்தாலும்
விட‌மாய் நெஞ்சில் ப‌திந்திருந்தாலும்
க‌ட‌மைக‌ள் ந‌ம் கால்க‌ளைக்
க‌ட்டிவிட‌க்கூடாது.....

வாழ‌வைக்குமென‌ எண்ணிய‌ காத‌லை
வீழ‌வைப்ப‌தாய் க‌ருமாற்ற‌லாமா...?

ஓர் அபலையின் அவலக்கதை...

‘’ என் மார்புச்சேலை விலகிக்கிடக்கிறது....’’

அந்தப் பெண்ணின்
முனகல் குரலை முடிக்க விடவில்லை...

‘’ ஆகா.. அற்புதம்’’ என்றது ஓர் ஆண்குரல்...

‘’ எங்கே எங்கே ‘’ எட்டிப்பார்க்கும்
இன்னொரு ஆண்முகம்...

‘’ என்ன அழகு ‘’ ரசித்து வியந்தது
மற்றொரு சாண்பிள்ளை...

‘’ சரியாகத் தெரியவில்லை ‘’
கவலையுடன் ஒரு வீர மகன்...

இப்படிப் பல அறிமுகம்
எல்லாமே வெறிமுகம்....

‘’ என் மார்புச்சேலை விலகிக்கிடக்கிறது...
யாராவது சரி செய்யுங்களேன்...’’

சோகத்துடன் புலம்பியது
இருகைகளையும் இழந்த
அந்த அபலையின் அழுகுரல்....!

கருக்கலைய சம்மதியோம்...!

ஆண்டுக்கொருமுறை வரும்அறுவடை நாளுக்காய்
அன்புநீர் தெளித்து விழி வாசலில் காத்திருந்தான்....

மனவயல் முழுக்க நம்பிக்கை நாற்றுகள்
எதிர்பார்ப்புக் காற்றில் சிலு சிலுத்தன...

எகிறிப்பறந்துவரும் சூழ்நிலை வெட்டுக்கிளிகளை
தன் கைப்பொமமையைத் தக்கவைக்கப் போராடும்
பலவீனக் குழந்தையாய் விரட்டினான்...

திருவிழா வசந்தங்கள் தரும் திகட்டாக சுவை புசிக்க
புது வகுப்புச்செல்லும் சிறுமாணாக்கனாய்க் காத்திருந்தான்...

இளம்பச்சை நாற்றுகளைப் பசிகொண்ட ஆடுகள்
புசித்திட விட்டுவிடாது விழிவியர்க்க பார்த்திருந்தான்...

கடும்புயல் மழைகளை கட்டுப்படுத்த இயலாதெனினும்
தன்வயல் பட்டுவிடாமல் க்டவுளிடம் உருகிநின்றான்...

சதிவலிது தானெனினும் அதனைவிட
விதிவலிது என உணர்ந்து
மதிமுழுக்க நல்லெண்ணம் நிறைத்து நின்றான்...

அந்த நாளும் வந்தது.....

காத்திருந்து விருந்து புசிக்கும் இரவுப்பிச்சைக்காரனாய்
கால்கடுக்க நின்று செய்த தவம் பயனுறுமோ என எண்ணி
காலதேவனின் அலட்சியப்பார்வையை லட்சியம் செய்யாமல்
கவலையுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது.....

வடித்துச் சமைத்து வடிவாகப்பறிமாறும் நேரம்
வாய்வைக்கவந்த நாயின் விதி சொல்வதா...?

கருக்கொண்ட மேகங்கள் பொழிந்துவிடத் தயாராகும்போது
எங்கிருந்தோ வந்த சூறாவளிப் பெருங்காற்று
எங்கோ தள்ளிப்போன சோகம் புனைந்துரைப்பதா...?

ஏழைகளுக்குமட்டுமே சந்தர்ப்ப சூழல்கள்
எதிராக நிற்பதேன்....?

காரணம சிந்திப்போம் களைவோம்...
களைய முடியாதவற்றை கருவறுப்போம்....!

எது எப்படியாகினும்

ஏழைப்பசியாளனின் உணவுக்கனவுகள்
கருக்கலைய சம்மதியோம்....!

அல்விதா...!
அல்விதா.......!


நீயும் நானும் ஒன்றுதான்....
எப்படி என்று கேட்பாய்
நம்மில் யார் தவறு செய்தாலும்
தண்டனை இருவருக்கும் தானே....!

நேற்று நான் செய்த தவறுக்கு
இருவருமே தண்டித்துக்கொண்டோம்...
இன்று உன் தவறு.....
தண்டனை என்னவோ பொதுதானே...?

தண்டனை அனுபவிக்கும் போது
உனக்கும் வலிக்கும்தான்
எனக்கு இதயச்சுனாமியே
எட்டிப்பார்த்துப் போகிறதே....!

யாரைக்குறை சொல்ல...?
நம்மைப் படைத்த இறைவனைத்தானே...?
நாம் விதைத்த வினைகளுக்கு
வேறுதினையா முளைக்கும்...?

நீ என்னவோ சாதாரணமாகச் சொல்லிப் போனாய்...
சம்மட்டிகளாக விழுந்த அந்த
சண்ட மாருத இடிகள்
என் சகலத்தையும் குதறிப் போனதை
நீ அறிவாயா...?

கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா?
நம்குழந்தை இன்னொரு பெண்ணைத் தாயென்று அழைப்பது....
அதனினும் கொடுமை என்னவென்று சொல்லட்டுமா...?
அருகிருந்தும் அன்னைமடி கிடைக்காத
குழந்தையின் அழுகை தான்...!

என்றோ ஒருமுறை நீ சொல்லிப் போனாய்...
உன்னைக்காணாத போது
என் கண்களிரண்டும்
புண்களிரண்டாய் மாறிப்போகிறது என்று...
இன்றுதான் அதன்அர்த்தம் உணர்ந்தேன்...!

எத்தனை முறை விரட்டினாலும்
எத்தனம் விடாத ஈக்களைப் போல
இதயம் என்னவோ உன்னைச் சுற்றிதான்...
பூச்சிக்கொல்லி திணறடிக்கும் போதும்
இறக்க விரும்பி இடைவிடாத பறப்பு...!

கொன்ற இதயத்தைத் திரும்பிப்பார்க்காமல்
சென்றுவா....!
என் இதயச்செல்கள் இறந்துவிட்டாலும்
இரத்த வெப்பம் தணியாது
உன்னை மீண்டும் காணும்வரை....!

காத்திருப்பு...!காத்திருப்பு...!

யுகங்களாய்க்காத்திருந்தது
இப்படி கணங்களில் முடிவதற்கா...?

அக்கம் பக்கம் பார்த்து
எக்குத்தப்பாய் ஆகிவிடுமென்றே
திக்கித்தவித்து பயந்துபோய்
எக்கச்சக்க இன்பங்கள் இழந்தோம்...!

காத்திருப்பது தான் காலமெல்லாம் விதி என்றால்
அந்த
காதலுக்கே விடை சொல்லத்தோன்றிடுமோ..?

உனக்கென்ன நீ சூரியன்...
பலவித கிரகங்கள் உன்னைச்சுற்றிலும்...
எனக்கிருக்கும் ஒரே சூரியன் நீதானே..?

உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!