Wednesday, June 6, 2007

பழையன கழிதலும்.....

வாழ்க்கைப் படிக்கட்டின்
கடைசிப்படியில் பாட்டி
முதல் படிக்கு
முயன்று கொண்டு பேத்தி!

பாட்டியின் கேள்வி:
உன் காலத்தில் இந்தளவாவது
விளைச்சல் காணுமா?

பேத்தியின் பதில்:
என் காலத்தில்
பசியே இல்லாதாகும்
மருந்தொன்று காண்பேன்.

பாட்டியின் ஐயம்:
என் காலம் போல்
உன் காலமும் அடுப்படியிலேயே
உருண்டு போய் விடுமோ?

பேத்தியின் தெளிவு:
அடுப்பெரிக்கச் சொல்லி
அடக்க வரும் ஆணின்
இடுப்பொடித்து அவனின்
இறுமாப்பை எரிப்போம்.

பாட்டியின் எரிச்சல்:
இக்காலம் சாதியின் பிடியில்
இடர்படுகிறதே...

பேத்தியின் தேற்றம்:
என் காலம்
சாதியின் சமாதிக்காலம்
என் போன்றோர் கையில்
சமத்துவச் சாட்டை!

பாட்டியின் அவலம்:
இன்னும் ஆண்களின்
கொட்டம் அடங்கலையே
பெண்ணுக்குத் தீங்குகள்
தொடர்கின்றனவே?

பேத்தியின் சீற்றம்:
கல்பனா சாவ்லாவின் சாதனைமுதல்
கிரண் பேடியின் கம்பீரம் வரை
முன்னேறிய நாங்கள்
இன்னும் முன்னேற
யார் தடுப்பார்கள்?
இன்னொரு பாரதி வராமலா போவான்?
எங்கள் துயரை வரையாமலா போவான்?

பாட்டியின் துயரம்:
வரதட்சணை எங்களை
வாழவிடவில்லையே
உங்கள் எதிர்காலம்
ஒளிர்ந்திடுமோ கண்ணே?

பேட்டியின் ஆறுதல்:
இன்னும் ஆண்களின்
ஆன்மா செத்துவிடவில்லை.
பத்தில் நாலு பேர்
கல்யாணக் கையூட்டை
பகிஷ்கரிக்கிறார்கள்
பத்துமே பத்தரைமாற்றாக
மாறத்தான் போகிறது.

பாட்டியின் நிம்மதி:
உன் பேச்சு கேட்டு
என் ஆன்மாவுக்குப் புல்லரிக்கிறது
எல்லாமே உன் எண்ணம்போல்
எளிதாக நிறையட்டும்!
இனி என் கட்டை
இன்பமாய் வேகும்!

பேத்தியின் முடிவுரை:
எண்ணியதை எண்ணியபடி பெற
எண்ணுவோர் திண்ணியராகட்டும்!
உங்கள் அனுபவம்
எங்களை எச்சரிக்கட்டும்!
இன்னும் பல்லாண்டு வாழ்வாய்
பாட்டி!

No comments:

Post a Comment