Sunday, June 17, 2007

கவித்துளிகள்

கலைவேந்தன் கவித்துளிகள்

பராபரமே பரம்பொருளே பரஞ்சொதீ பற்றற்றே
தராதரம் உணராது நல் தீது அறியாது உமை
சிராதாரமாய் உணர்ந்து தமை உருக்கி தவம் கண்டு
நராதாரி மெய் துறந்து பிறவித் துயர் களைவோமே!

**********************************************************************

போகின்றவர் கொண்டு போவதென்ன இங்கே
வாழ்கின்றவர் வைத்து வாழ்வதையே விட்டு
சாகின்ற போது காதற்ற ஊசியும் இல்லாது
வேகின்றபோது வேதனையின்றி போவதெ மிச்சம்!

**********************************************************************

காதலெனக் கூறி காமந்தனை செய்யும்
பாதகரை வெட்டிப் பாடையில் அனுப்பும்
சோதனை விதியொன்றை வைத்திடுவோம் சபைதனிலே
போதுமென விட்டோடி ஒளிந்திடுவர் காமுகரே!

**********************************************************************

முன்னேயும் பின்னேயும் நான்குபேர் பல்லக்கை
தூக்கவும் காக்கவும் நூறுபேர் கொண்டவன்
நாட்டையும் வீட்டையும் காக்காத பண்டாரம்
அவனியில் பவனியில்! ஏற்குமோ நல்மனம்?

**********************************************************************

போகுவதேன் வாழ்வின் முத்தான மதிப்புகள் (values)
வீழ்குவதேன் சான்றோரின் சத்தான விதிப்புகள்
மாள்குவதேன் மானிடன் மனச்சான் றுகள்தாம்
தோல்விதான் வந்திடுமோ மனிதனின் வேள்விக்கே?

**********************************************************************

ஈந்து வாழ்தலுக்கீடு இணை ஏதுமில்லை
தாழ்ந்து போவதில்லை தரக்குறைவும் ஏதுமில்லை
சோர்ந்துபோன மானிடர்க்கு சோறிட்டு குறைவதில்லை
காந்தம்போல் கடவுளிங்கு குடிகொள்வார் உன்னகத்தே!

**********************************************************************

அரசியல் என்றொரு மர்மக்கூடம்!
அனைவரும் அங்கே போடுவர் ஆட்டம்
இங்கே பானையில் பருக்கை தேடும்
இச்சைமுத்து பசியில் வாட்டம்!

**********************************************************************

சமத்துவம் என்பதை சமத்து வமாய் சமைத்து
சட்டுவத்தை மட்டும் காட்டிவிட்டு சாதத்தை மறைத்து
சத்துள்ளதை தான் மட்டும சுவைத்து
சொத்தை தான்சேர்த்துவிட்டு சொத்தையை தந்துவிட்ட
வித்தைதான் இங்கே ஜனநாயகம்!

**********************************************************************

மட்டற்ற மகிழ்ச்சிகள் கணநேரமும் ஏழைக்கில்லை
பற்றற்ற வாழ்க்கை வாழவும் முடியவில்லை
இரக்க மற்ற வயிறு! இறக்கவும் துணிவில்லை!
அரக்கர்கள் திருந்தும் நாள் எந்நாளோ தெளிவில்லை!

**********************************************************************

நிலையென நினைத்தே நிலைதடுமாறும் நிறைவிலாநிலைமை
நினைத்ததை நிகழ்த்திட நிதம் போராட்டம்!
நிம்மதியில்லை நித்திய நித்திரை நிரந்தரமில்லை.
நிறுவுக நிலையாய் நிம்மதி வாழ்வே!

**********************************************************************

ஒன்று மட்டும் இதயத்தை ஒப்படைத்த இறைவன்
இரண்டு கண்களால் காணவைத்தான்..
காரணம் யோசித்தேன்...
நல்லவை கெட்டவை இரண்டையும் பார்
நன்மையை மட்டுமே மனதில் வை!
காரணம் இன்றி காரியம் காணுமோ
இறைவன் கணிதம் தவறாகுமோ?

**********************************************************************

ரசிக்கின்றேன் இயற்கையை
எத்துணை மருக்கள்
எங்கள் நிலாவில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

எத்தனை ஊழல்கள்
எங்கள் அரசியலில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

எத்தனை அசிங்கங்கள்
எங்கள் சினிமாவில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

ஏனென்றால் நான்
எதையும் தாங்கும்
இந்தியன் அன்றோ?

**********************************************************************

தீஞ்சுவை கவிவடிக்க தேமதுரத் தமிழ்கேட்டேன்
வாஞ்சல்யத் துடன்என்னைக் காப்பாய் வடிவேலா!
முத்தமிழ் மன்றத்து முதிர்ந்த பெருமக்கள்
சத்தமிட் டென்னை சாபமிடா வரம்தருவாய்!

**********************************************************************

நாமென்ற சொல்லை ஏற்றிடுவோம் இன்றே
நானென்ற சொல்லை மாற்றிடுவொம் நன்றே
யாமொன்றும் சளைத்தவர் இல்லை மற்றோர்க்கு
யாதும் பெறுவோம் நாம் ஒன்றிணைந்தால்!

3 comments:

  1. எதுகைகளை இன்றைய புதுக்கவிதைகள் மறந்துவிட்டன. யாரோ சிலர் வகுத்த விதிப்படி இலக்கணங்கள் செத்துக்கொண்டிருக்கும் வேளையில் தக்க சமயத்தில் கலைவேந்தன் போன்ற ஆட்கள் வெளியே வருகிறார்கள்..

    நல்ல கவிதைகள்... மீண்டுமொருமுறை படித்துச் செல்லுகீறேன்

    நன்றி

    ReplyDelete
  2. சந்தமுள்ள நல்ல கவிதைகள் மறைந்து வரும் இக்காலத்தில் நல்ல கவித்துளிகளை வழங்கியுள்ளீர்கள் மிஸ்டர் கலைவேந்தன்!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. அன்புள்ள கலை வேந்தன் ! நான் ஒரு மலையாள ப்ளோக்கர். சமீபத்தில் தான் தமிழை எழுத கற்றுக்கொண்டேன். தமிழ் மீது ஏற்ப்பெட்ட ஆர்வ்வத்தால் முத்தமிழ் மன்றத்தில் என்னை பதிவு செய்துக்கொண்டேன். அங்கிருந்து தான் உன்கள் ப்ளோகின் கண்ணி கிடைத்தது. கவிதைகள் மிகவும் கருத்துள்ளதாக இருக்கிறது. குறிப்பாக இன்றைய ஜனனாயகம் ஒரு கேலிக்கூத்து ஆகி வருவதை சுருக்கமான வார்த்தைகளால் அருமையக வர்ண்ணித்துள்ளீர். இந்த ப்ளோக் என்னுடைய ஃபேவறைட் ப்ளோகாக எண்ணூகிறேன்.
    நன்றி .. வணக்கம் !!

    ReplyDelete