Saturday, November 19, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - ஐந்து

41.2002.

பணியதில் அவன் நேர்மை பணிவினில் பண்பதனில்
பிணியெவர்க் கெனினுமவன் பரிவினைக் காட்டியதால்
துணிவுக் கொருமனிதன் என்றபேர் பெற்றதனால்
கணிணியில் சிறப்பெனவும் பணியிடம் போற்றியதே..!


42.2003.

ஓர்தங்கை கரைசேர்த்த கடமையைச் செய்தயிவன்
நார்தனி நூலாக நொந்தது போல்நொந்தும்
மார்நிறை மனத்துடனே மறுதங்கைக் கோர்வரனை
வேர்வரை வெந்தாலும் கனிமுகத்துடன் சேர்த்தான்..!


43.2004 

தனக்கென ஓர்பொருளை வாங்கிடத் தயங்கிடுவான்
சினமதை நாசியினில் சடுதியில் கொண்டாலும்
மனத்தள வில்சேர்ந்தோர் மேலது பரிவுகொண்டு
கனத்ததோர் சுமையிருந்தும் கனிவுடன் காத்திடுவான்..!


44.2005.

பணிகளில் முன்னேற்றம் பல்வித மாணாக்கர்
அணிகல னாக்கிடவே அவர்க்கொரு வழிகாட்டி
மணிகளில் மாமணியாய் மாற்றிட துணை செய்து
பிணியெது மின்றியவன் பிழைத்திருந் தனன் காணீர்..!


45.2006.

வழமையில் வாழ்வதுவும் கடமையில் கருத்ததுவும்
குழம்பிய மனத்துடனும் குமுறிடும் கடனதுவும்
நிழலெனத் தொடர்ந்திடவே நிம்மதி இழந்திடினும்
குழந்தையைப் போலவன்தான் குடும்பத்தில் வளையவந்தான்..!


46.2007

பஞ்சினில் பெருந்தீயும் பாய்ந்தது போலொருநாள்
பிஞ்சன்ன அவன் இதயம் இயங்கிட மறுத்ததுகாண்
மஞ்சென ஒருதோழி மறுதாயாய் வந்தவுடன்
தஞ்சமென தன்தாயை அவளினில் கண்டனனே..!


47.2008

அன்னையை அவன்மனந்தான் அனைவரில் கண்டாலும்
முன்னைய மாதரிடம் நுகர்ந்திடா வாஞ்சையதை 
கன்னலைத் தோற்கடிக்கும் கவின்மொழி யாளவளில்
தன்னையும் மறந்தனனே அன்னையை உணர்ந்தனனே..!


48.2009

சொத்தேதும் சேர்த்ததில்லை சொந்தமெனத் தங்கையரின்
அத்தனை சுகத்தினுக்கும் இவன்வழி காட்டிடினும்
பித்தனைப் போலிவனை பின்புறம் தூற்றினரே
அத்துடன் பெண்களிலே தங்கைகள் வெறுப்பானார்..!


49.2010

எத்தனை நல்லவனாய் இவன்வலம் வந்தாலும்
முத்தனை குணங்களதை முழுமையாய்க் கொண்டாலும்
பித்தனிவன் கடும்சீற்றம் பின்னுக்குத் தள்ளியதே 
செத்திவன் விழும்போது இக்குறை மாறிடுமோ..?


50.2011

இன்றுடன் இவன்வாழ்வில் சினமதைக் கைவிடுவான்
நன்றுடன் நல்வாக்கு நலம்பெற வழங்கிடுவான்
ஒன்றல்ல இரண்டல்ல ஓரைம்ப தைத்தொட்டான்
என்றும் அன்புடனே எவருடனும் இணைந்திருப்பான்..!

No comments:

Post a Comment