Friday, November 18, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - ஒன்று

ஐம்பதில் வளைந்திடுமோ..?

1.1962

அணங்கொருத்தி யவளுடந்தான் அண்ணலவ னிணைந்ததனால்
சுணங்கியவள் கருவாகிப் பெற்றனளோர் குழவியுந்தான்
இணங்கியவள் பெற்றதொரு சாபமுந்தான் பலித்ததுவோ
பிணங்கியவள் பிணமானாள் குழவியவன் அழுதனனே..!


2.1963.

பெற்றவளை யிழந்ததனால் முலையமுது இன்றியவன்
உற்றதொரு தந்தையவன் ஏழ்மையதன் பலன்சுகித்தான்
மற்றைவர் மழலையர்கள் மகிழ்வுடனே களிக்கையிலே
முற்றமதில் முட்டியது தேய்ந்திடவே வளர்ந்தனவன்..!


3.1964.

மெல்லமாய்க் காலூன்றி வெல்லமாய்ப் புன்னகைத்து
செல்லமாய் அணைப்போர்கள் இல்லனாய் வளர்கையிலே
இல்லையோர் சுகமெதுவும் முல்லையது வனந்தனிலே
மெல்லமாய் முகிழ்த்ததுபோல் கிள்ளையவன் வளர்ந்தனனே..!


4.1965.

வாரிய ணைத்தவனை உச்சிமோந்து கன்னமதில்
மாரியாய் முத்தமிட்டு மகிழ்வூட்ட யாருமின்றி
ஓரியாய் வளர்ந்தவனை ஓர்பாட்டி ஆதரித்தாள்
சேரிணையாய் யாருமின்றி சேவலது வளர்ந்ததுவே..!


5.1966.

சிங்கமது அவன்பிறப்புக் கட்டமதில் அமைந்ததனால்
தங்கமதைக் கட்டியன்பால் தளைபோட ஆருமின்றி
எங்கனும் அவன்சீற்றம் பிறவியதன் குணமாகி
வங்கமதன் புயலதுவாய் வகுப்பொன்றில் சேர்ந்தனனே..!


6.1967.

தனிமையதில் வளர்ந்ததனால் தண்மையது குறைவெனினும்
கனிமொழியில் சிறந்தவனாய் கல்வியதில் வல்லுனனாய்
இனியதொரு சில்வண்டு இசைப்பதுபோல் தமிழ்மொழியில்
பனிமழையாய் பண்ணிசைத்து பார்ப்பவரைக் கவர்ந்திழுத்தான்..!


7.1968

ஓருண்மை பகிர்வதனால் ஒழுங்கீனம் கருதாதீர்
பேருமது இராமன்தான் பெண்களுடன் பழகுவதில்
சீருமது குறைவில்லை சீண்டுவதில் சிறுமியரை
ஓருவகை கண்டவனும் ஒருவகையில் கிருட்டிணன்தான்..!


8.1969.

எண்வயதில் எண்மதிதான் எழுத்ததனில் விற்பனனாய்
கண்மையது இட்டவனும் காரிகைபோல் சிலநேரம்
பெண்மையதன் நளினமும் பெற்றதனால் களிப்புற்றான்
உண்மையதைப் பகிர்வதிலே ஒருபோதும் தயங்கிலனே..!


9.1970.

நான்காம் படிவமதில் பள்ளியதன் நாயகனாய்
வான்தானி வனெல்லை என்றெவரும் போற்றிடவே
மீன் தான் நீர்நிலையில் துள்ளியது வீழ்வது போல்
மான் தான் போலிவனும் ஏழ்மையையும் மறந்தனனே..!


10.1971

பள்ளிப் பருவமதில் சிட்டெனவே பறந்தாலும்
துள்ளித் திரிந்தவனும் தூய்மையனாய் வளர்ந்தாலும்
எள்ளி நகைத்தவர்கள் ஏழ்மையதை ரசித்தாலும்
உள்ளியது பெற்றனவன் கல்வியதில் சிறந்தனனே..!

No comments:

Post a Comment