Saturday, November 19, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - மூன்று

21.1982.

இருபது வயதுகளில் இளைஞரெலாம் இன்பமுறும்
விருப்பமெலாம் அவன்துறந்து விதியின் வழிஏகினனே
தருவதற்கு நீர்வளந்தான் இன்றியது கருகுதல் போல்
தருவதற்கு எவருமின்றி திருவதற்கு ஏங்கினனே..!


22.1983.

கல்லூரி வாழ்வதனில் களிப்புமிகக் கண்டிடினும் 
கல்லூரில் வாழ்ந்துவந்த பாறைமன ஊர்மக்கள்
செல்லாத காசு இவன் செங்கல்வி பெறுவது ஏன்..?
சொல்லூற வாழ்த்திடினும் செயலூறத் தூற்றினரே..!


23. 1984.

இளங்காளை இவன்மெதுவாய் இளங்கலையன் ஆகினன்தான்
விளங்காத விதியதனை விதிர்விதிர்க்க வென்றனன்தான்
களங்கமிலா இவன் உள்ளம் கல்வியகம் பிரசித்தம்
களங்காணப் புறப்பட்டான் கல்வியதால் பணிதேடி..!


24.1985.

அற்றைக் கிருந்த பணியின்மைப் பிரச்சினையும் 
முற்றும் கற்றிடவும் முதுகலைக்கு வித்திடவும்
கற்றை நூல்நெய்து கலைவண்ணப் புடவைசெய்து
கற்றும் கொண்டிவனோ கலிவயிறும் நிறைத்தனனே..!


25.1986.

முதுகலைப் பயின்றிட்ட முன்வசந்த காலமதில்
புதுகலையாம் காதலிலும் கைதேர்ந்து சிறந்திடவே
வ்து கலையாள் வந்தனளே வாழ்வதற்கு வழிகாட்ட -
அதுகலைந்து போனதுமே மதுவதனில் மூழ்கினனே..!


26.1987

முதுகலையும் பணிகாட்டத் தவறிய நிலையதனில்
எதுவழி யென்றிவனும் தலைதெறிக்க நிற்கையிலே
புதுவழியாய்ப் புகுந்தனனே பத்திரிகை நிருபனாய்
அதுபோதா தென்றிவனும் இளங்கல்வி யும்பயின்றான்..!


27.1988.

பட்டங்கள் பல பெற்றும் பட்டபாடு தீரவில்லை
பிட்டங்கள் தெறிக்க இவன் பணிதேடிக் களைத்தபின்னர்
விட்டவிதி இவன் தன்னை விரட்டியதே தலைநகரம்
இட்டமாய் ஏவல்பல செய்தவனும் உயிர்வாழ்ந்தான்..!


28.1989.

கருணைக் கடலன்ன கடவுளவன் கண் திறக்க
திருவருளால் திறைதேடி வந்தவனும் பணிகண்டான்
ஒருவரது உதவியையும் ஒருபோதும் பெற்றிடாமல்
திருவதனின் முகம்கண்டான் முதன்முதலாய் வாழ்க்கையிலே..


29.1990.

பட்டதுன்பம் போனதென்று சிறுநிமிரல் கண்டவனோ
விட்டகுறையது தொடர வீடதனின் வறுமைதீர
கிட்டியது அத்தனையும் கொட்டியவன் குடும்பமது
முட்டமுதன் முதலாய் வயிறார உண்டதுவே..!


30.1991.

எத்தனை ஏக்கங்கள் ஏந்திழையின் ஈர்ப்புகள்
அத்தனையும் ஒவ்வொன்றாய் அகற்றியவன் தன்னில்லம்
முத்தனைய அன்னமதை முழுவயிறாய் உண்டிடவே
சித்தனைப் போலவே சிந்தையதில் சிறந்திருந்தான்..!

No comments:

Post a Comment