Sunday, May 25, 2008

எனது குறுங்கவிகள் சில!

எனது குறுங்கவிகள் சில!

1.
அங்கமாக்கி அனைவரையும் அணைத்து செல்வோம் வா!
தங்கமான தாய்நாட்டுக்குப் பெருமை சேர்ப்போம் வா!
சிங்கம்போல சிலிர்த்தெழுந்து சிறுமை தீர்ப்பொம் வா!
பங்குபோடும் பகைவர்களைப் பதறவைப்போம் வா!
2.
ஞாலத்தி லுன்னைக் கொணர்ந்திட்ட தாயைநீ
கோலமாய் கூடத்தில் வைத்துநீ கும்பிடு!
மூலமே அவள்தா னென்பதை உணர்ந்திடு
சூலமேந்திய மகிஷாசுரி அவளென்று போற்றிடு!!
3.
சுயநலமே வாழ்க்கையென்று எண்ணியிராதே
கயவர்களின் எண்ணிக்கையில் கலந்துவிடாதே
மயங்கிப்போய் மதிகலங்கி சிறுமைப்படாதே
உயர்வான மனிதன் நீ மறந்து விடாதே!
4.
மாறவே மாறாத மமதை மயக்கும்
மனிதனின் மனவமைதி மன்னிப்பில் மட்டுமே
மன்னிக்கும் மனங்களை மனிதம் மதிக்கும்
மன்னியுங்கள் மற்றவரை மன்னுலகம் மகிழும்!
5.
கண்டேன் பாசத்தின் எல்லைதனை உன்னில்
உண்டென்று உணர்ந்தேன் தாய்மையும் உலகில்
அன்புக்கு அணையில்லை அடக்கிட வழியில்லை
உன்முன் தோற்பதில் என்றுமே வெற்றியே!
6.
வாழ்வீரே யென்றெமை வாழ்த்தியே மகிழ்ந்துடன்
தோழமை காட்டிட்ட தேவியாய் - கோழைமை
போயின்று யார்வரினும் நேர்நின்றெ திர்நோக்கித்
தாயினைப் போல்காக்கும் சேய்!
7.
ஒருமுறை பார்க்கத் துடித்தும் வராமல்
திருமுகம் காட்ட மறுத்தாய் - கருவண்ண
கண்ணனே என்னை திருடிய கோமானே
உன்னையே தாஎனக்கின்றே உனை!
8.
உயிர்கரைந்து நின்றதடி எந்தனுள்ள முந்தான்
வயிரமாய் மின்னுதடி உன்னால் - பயிருக்காய்
மழைபொழிந்து காத்திட்ட வானமாய் என்னுள்
நுழைந்தவளே நீயென்றும் வாழி!
9.
இதுவன்றோ காதலென நானறிந்தேன் வான்மதியே
மதுவருந்தும் போதுணரும் மயக்கத்தை நானறிந்தேன்
தேமலரின் புத்துணர்வா இல்லை - இதுபோழ்தில்
சோமபானம் போலுணர்ந்தேன் நான்!
10.
சமைத்திடு மனமுடன் மணாளன் வருவான்!
சமைத்திடு மணமுடன் மன்னவன் வருவான்!
சமைத்திடு கனிவுடன் கண்ணாளன் வருவான்!
சமைத்திடு இனிப்புடன் கண்ணனே வருவான்!
11.
கண்டுகேட்டு ணர்ந்துனை சேர்ந்திட வந்தேனே
விண்டிலா சோர்வுடன் ஓடோடி - கோபமாய்
ஒருபார்வை பார்த்திட்டாய் ஒடுங்கினேன் நானே
திருவருள் செய்திடு நீ!

No comments:

Post a Comment