Tuesday, April 10, 2012

கண்ணகிக்கோர் காணிக்கை.. ( கவியரங்கக் கவிதை )

கண்ணகிக்கோர் காணிக்கை..

தமிழ்வணக்கம்

தன்னில் இருந்து தரணிக்கெலாம் கருவளித்து
கருச்சிதைக்க வந்தோர்க்கும் உந்தன்
உருச்சிதைக்க நினைத்தோர்க்கும் 
ஒவ்வாத கனவதுவாய்
மாண்பதனில் மேன்மையளாய்
சால்பினில் மேருவதாய்
தான்சிறந்த தலைமகளே..
வான்சிறக்க உதவிடும்
மானமிகு மாமழையே..
கற்புத்திறனழியா காரிகையே
வேற்றுமொழி கொஞ்சம் 
மாற்றாய்க் கலந்தாலும் 
தன்னிலையில் தவறாத
கன்னியவளே 
தமிழே வணக்கம்..!

அவைத்தலைவர் வணக்கம்.

அன்புக்கும் பண்புக்கும் பணிவுக்கும் 
பொறுமைக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும்
குறும்புக்கும் கருத்துக்கும் 
குவிந்ததோர் புலமைக்கும்
உவமையாய் பலநேரம்
உவமேயமாயும் திகழ்கின்ற
ஔவையாம் அவைத்தலைவியை
அவைசிறக்க வணங்குகிறேன்..!

கண்ணகி ‍ என்கற்புப்பார்வையில்..

கற்புத்திறன்களால் காவியளானாய்
இன்றுவரை பெண்களுக்கு
மேவியளானாய்..
கண்ணகியே உந்தனுக்கு
என் 
கவிதை வணக்கம்..

அன்றொரு நாளுந்தன் கணவனவன் சற்றேயுன்
முன்றானை முடிச்சதனில் வீழ்ந்திடா பிழையதனால்
சென்றானே உனைத்துறந்து உன்குற்றம் தானென்பேன்..
என்றாலும் பின்னும்நான் தீவிரமாய் யோசித்தேன்.

இன்னும் யோசித்தால் உந்தன் மணமதுவோ
பின்னும் யோசியாமல் செய்துவைத்த பாவைமணம்.
ஒன்னும் அறியாத பேதைநீ..பாவிகளின்
துன்னும் குற்றமதாம் துரிதமாய துன்மணமே..

பனிரெண்டு வயதினிலே மான்போல் ஓடிநிதம்
இனிதாக விளையாடும் பேழைச் சிலையன்றோ 
தனிமை யறியாத தனியவளே உன்மணம்
கனியாத பருவமதில் செய்தது அவர்குற்றம்..

கணவனுக்கு காமமது ஊற்றிட உன்கையில் 
தணவதுவாய் ஏந்திய பருவப்பாத்திரம் தான்
குணமதில் குழந்தையாம் உன்கையில் ஏதுமில்லை
மணமுள்ள மலர்தேடும் வண்டினமாய் மாறினனே..!

உந்தன் குறைஅவனை உந்திய தால்தானோ
முந்தானை விட்டவனும் மாதவியின் சிற்றாடை
கந்தமா யுணர்ந்தவனைக் கண்டியாது விட்டொழித்தாய்..
அந்தப் பிழையுனது சுட்டதுவே கூடலினை..

காமத் தீயதுவை எதிர்கால முந்தனுக்கு
மூட்டிய போதினில் மூழ்கிவிட்டான் மாதவியில்
சாமத்தில் பொருளிழந்து சன்னத மிழந்தவனை
கோபத்தில் எரியாது காத்திட்ட காரிகை நீ..!

வேசத்தாள் விட்டொழிந்து வேகங்குறைந் தவன்தான்
மாசறு பொன்னெனவும் காசறு விரையெனவும்
மோசடியாய்ப் புகழ்ந்தவனை முற்றுமாய் ஏற்றனைநீ
மாசம் ஆறினுக்குள் மண்ணடியில் போய்மறைந்தான்.

பருவம் வந்தறியாப் போதினிலும் பின்னர் 
அருவக் காமனவன் வந்தணைத்த போதினிலும்
உருவம் இழக்கவில்லை கருவும் ஏந்தவில்லை
கருவதனை ஏந்திடவும் ஏதும் நடக்கவில்லை.

உன்னை எண்ணினால் வியப்பே வந்துதிக்கும்
பொன்னை ஒத்தாற்போல் இருந்தனை அந்நாளில்
என்னை நினைத்தனனோ ஏந்திழையாள் உன்னைவிட்டு
முன்னம் மாதவியும் பின்னர் மரணமதும் 

கொண்டேகி ஒழிந்தனனே கோவலன் ஆயினன்கொல்
பண்டை ஊழதுவால் கேவலன னாய்மடிந்தான் 
தண்டைச் சிலம்பதுவும் தப்பாகிப் பிழைத்திருக்க
மண்டபத்தில் மாதுஅவள் மையலில் பாண்டியனும்.

பட்டறியாக் காமத் தீயதுவால் உன்னொற்றை 
தொட்டறியா அமுததனம் அழுதகணம் தீயதுவாய்
பட்டினைப் பெருந்தீ பற்றியது போலன்றோ
விட்டெறிந்த உன்முலைதான் கூடலுக்கு எரியாச்சு.

பொற்குழலாள் போதைதரும் பொன்மயிலாள் மாதவியும்
தற்கணவன் தவறியதால் மாண்டகோப் பெருந்தேவியும்
கற்பினில் சிறந்தவரே ஐயமேது மிலைஎனினும்
தற்காத்துக் கொண்டாய்நீ கற்பினுக் கணியே நீ..!

முடிந்துரை மொழி

கண்ணகிக்காய் வாதாடி கவிதைகள் எழுதுவதோ
கண்ணிமைக்கும் நெரத்தில் கைகூடும் எவருக்கும்
எண்ணத்தில் எனக்குள் எழுந்தல ஐயங்கள்
திண்ணமாய் எழுதிடவே இவ்வாய்ப்பைப் பெற்றேன்யான்.

எந்தன் உளறலில் எள்ளளவும் பிழையிருப்பின்
இந்த அவையாரும் தலைமை அவ்வையரும்
முந்தியே மன்னித்துப் பொறுத்திடவே வேண்டுகிறேன்
தந்த வாய்ப்புக்கும் நன்றிகூறி அமர்கின்றேன்..!

No comments:

Post a Comment