Tuesday, April 10, 2012

கலைவேந்தனின் நல்வழி வெண்பாக்கள்..

கலைவேந்தனின் நல்வழி வெண்பாக்கள்...!

1.இறைப் பெருமை

வாழ்வும் வளமும் தெளிமனமும் இன்னுறவும்
தாழ்வும் தரித்திரமும் நோயதுவும் - ஏழ்மையும்
யாரார்க் கெதுவென வாய்பார்த் ததனையும்
தீரா தளிப்ப திறை!!


பொருள் : நல்லோர்க்கு நல்வாழ்வும் வளமையும் தெளிவான மனமும் தீயோர்க்கு தரித்திரமும் தாழ்மையும் பிணிகளும் அவரவர் வழிப்படி(வாய்=வழி) எவர்க்கு எது தகுமென இந்த உலகத்துக்கு (குவலயம்=பூவுலகம்)தருகிற இறைவன் பெருமை மிக்கவன்!

2.தாய்ப் பெருமை

தன்னுயிரை ஈந்துபின் தன்னுதரம் தானீந்து
மன்னுபுகழ் நாம்பெறவே ஏங்கிநிதம் - சின்னதொரு
கட்டெறும்பு ஊர்ந்தாலும் ஓடிவந் தேயெம்மை
சிட்டுபோல் காப்பவள் தாய்!


பொருள் : மகவுக்கென் தனது உயிரையே அளித்து தனதுவயிறாகிய கோயிலலயும் வழங்கி (தன்உதரம்=தன்வயிறு) நிலையான புகழ் நாம் பெற வேண்டி (மன்னு=நிலையான)ஏங்கித்துடித்து சிறிய கட்டெறும்பு நமை நோக்கி நகர்ந்து வந்தாலும் துடிதுடித்து ஓடிவந்து நம்மை சிட்டுக்குருவி தன் குஞ்சைக்காப்பதுபோல் காக்கும் நடமாடும் தெய்வம் தாய்!

3.தந்தை பெருமை

நமைபெற்ற தாயையும் நம்மையுந்தான் தாங்கி
இமைமணியைக் காப்பதுபோல் நாளும் - சுமையெனவே
என்றுமே எண்ணாது நற்கடமை ஆற்றியே 
நன்றி கருதா உளம்!


பொருள் : நம்மையும் நம்மைஈன்ற தாயையும் காத்து போற்றி இமையானது தன் கண்மணியைக்காப்பதுபோல் எப்போதும் காத்து ஒரு நாளும் நம்மை ஒரு சுமைஎன நினைக்காமல் தம் கடமைகளை ஆற்றி அதற்காக நன்றியையும் எதிர்பாராத இன்னொரு தெய்வம் தந்தை!

4.ஆசிரியர் பெருமை

குற்றங் களைந்து உறுதுணையாய் தானின்று
உற்றதோர் வாழ்வுநெறி ஈந்துபின் - கற்றது
தெள்ளிநிதம் பூவுலகில் யாவரும் போற்றிடவே
உள்ளது ரைக்கும் குரு!


பொருள் : மாணவர்களின் குற்றங்குறைகளைக் களைந்து அவருக்கு உற்ற வழித்துணையாய் இருந்து வாழ்வு நெறிகளைக் கற்பித்து கற்றுத்தந்தவைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க அறிவுரைகள் கூறி
இவ்வுலகில் பெரும் மதிப்புபெற்று விளங்கும் நல்லாசிரியர் இன்னுமொரு தெய்வம் போன்றவர்!

5.தமிழின் பெருமை

ஈர்வரியால் வாழ்வுமுறை ஈந்துமொரு மூதுரையும்
சார்மறையாம் நாலடியும் கம்பனுடன் - ஏழ்மையிலா
சொல்வளமும் மாளாப் பொருள்வளமும் கொண்டுலகில்
பல்கலையும் ஆண்ட தமிழ்!


பொருள் : இரண்டு வரிகளில் வாழ்க்கை வழிமுறைகளைத் தந்த திருக்குறளையும் மூதுரை நாலடியார் கம்பராமாயணம் ஆகிய மாபெரும் இலக்கியங்களைத் தம்மில் கொண்டு குறைவே இல்லாத சொல்வளங்களும் அழியாத பொருள்வளங்களும் கொண்டு பல கலைகளையும் ஆண்டுகொண்டு இருக்கும் தமிழ் மேன்மையானது.

6.தமிழகப்பெருமை

இன்னல்செய் தேமகிழும் கீழ்க்குணமும் போருளமும்
தன்னலமும் இன்றியே இவ்வுலகில் - அன்னதொரு
நாடொன் றருமையே என்றிடும் பேர்பெற்று
ஈடிலா செந்தமிழ் நாடு!


பொருள் : பிறருக்கு தீங்கு செய்து மகிழும் கீழான குணங்களும் சண்டையிடும் போர்க்குணங்களும் தன்னலமும் இல்லாமல் இப்படி ஒரு நாடு இருக்கிறதே என்று உலகமே போற்றும் வகையில் புகழ் பெற்று விளங்குவது இணையற்ற நம் தமிழ்நாடு..!

7.தலைவன் பெருமை

தாயவள்தம் மக்களைத் தாங்குதல் அன்னவே
சேயது பெற்றவரைப் போற்றுதலும் - நோய்தனைப்
போக்கும் மருத்துவர் காட்டிடுமவ் வ‌க்கறையும்
வாக்குநலம் கொண்டதலை வன்!


பொருள் : ஒரு தாய் தனது குழந்தைகளைத் தாங்கிக் காப்பது போலவும் குழந்தைகள் தமது பெற்றோரைப் போற்றி மகிழ்வது போலவும் ஒரு நோயைப்போக்கிட மருத்துவர் காட்டுகின்ற அக்கறையையும் கொண்டு நன்கு பேச்சுத் திறன் படைத்தவனாக ஒரு தலைவன் அமைய வேண்டும்..! 

8.தொண்டன் பெருமை

தலைவன்சொல் வேதமென் றென்றுமே எண்ணார்
குலைத்தெங்கு போன்றே உதவி - மலைபோல்
சகமனிதத் தொண்டுடன் நல்நோக்கம் கொண்டு
இகம்மகிழ வாழ்வார் இவன்!


பொருள் : தலைவனின் சொற்களை அனைத்துமே வேதம் போல் மதித்து வழிபடாமல் நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தென்னையைப்போல மக்களுக்கு உதவி செய்து தன்னலம் பார்க்காமல் மலை போல மனிதத்தொண்டுகள் செய்து நல்ல நோக்கங்களைக்கொண்டு இந்த உலகம் மகிழும்படி வாழ்ப்வர்களே சிறந்த தொண்டர் ஆவார்கள். 

9.நட்பின் பெருமை 

குன்றின்மேல் வீழ்ந்துபடும் நீர்த்துளி போலன்றி
ஒன்றே கருத்தாகி யோரெண்ண மென்றெனத்
தீயதணைக் கும்போ தணைத்தா றுத‌லீந்தோர்
தாயெனக் காக்குமாம் நட்பு.
 

பொருள் : குன்றின் மேல் விழும் மழைத்துளிகள் குன்றினால் ஈர்க்கபப்டுவதில்லை. பட்டும் படாமல் வழுக்கிச்சென்றுவிடும். அதுபோன்று இருக்காமல் ஒத்த கருத்துகளை உடையவர்களாக இருந்து ஒரே நல்லெண்ணங்களைக்கொண்டு நண்பருக்கு தீங்கு வந்த போது அவரை அணைத்து ஆறுதல் கூறி ஒரு தாயைப்போல காபப்தே சிறந்த நட்பாகும்.

10. காதல் பெருமை

ஓருயிரென் றென்றும் ஒருமித்தே எண்ணமுமாய்
ஆருயிரை ஈந்தும் ந‌ல‌ங்காக்கும் கார்குழ‌லாள்
வேர்வையும் ப‌ன்னீராம் காதலில் காதலுந்தான்
கோர்வையாய் பொய்யுரைக்கும் பார்.


பொருள் : ஓர் உயிராய் ஒருமித்து பழகுவதும் ஒரே கருத்துக்களைக் கொண்டு இருப்பதும் தன் உயிரைத் தந்தாவது தனது இணையைக் காக்கும் தியாக மனமும் கொண்டும் இருக்கும் காதலில் பொய்யும் மிக அதிகமாக நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். எவ்வாறெனில் காதலன் காதலிக்கும் காலத்தில் காதலியின் வியர்வை கூட பன்னீராய் மணக்கும் என்றெல்லாம் பொய் சொல்லும் அளவுக்கு காதல் வேகம் நிறைந்ததாகும்.

11. பணத்தின் பெருமை

பத்துமே செய்திடும் அத்துடன் நில்லாதே
எத்துணை ஏலுமோ அவ்வாறே - அத்துட‌ன்
ந‌ற்றுணை யாவ‌தும் நாச‌ங்க‌ள் சேர்ப்பதும்
ப‌ற்றினை மாய்ப்பதும் காசு.


பொருள்: பணமானது பத்துவிதமான செயல்களைச் செய்வதோடு அதற்கும் மேலும் செயல்களைச் செய்ய வல்லமை மிக்கதாகும். பணமானது நல்ல நட்பையும் நாசங்களையும் செய்து மகிழும். சிறந்த மேலோர் பணத்தினைக் கொண்டு பற்றினை ஒழிப்பதும் உண்டு.

12. உறவுப் பெருமை

இல்லாமை வாருங்கால் இன்முகம் காட்டியே
இல்லாமை இல்லாமல் போக்கிடும் - வ‌ல்லாராய்
பொல்லாமை வாருங்கால் போர்வாளாய்க் காத்திடும்
வ‌ல்லாண்மை வாய்த்ததாம் கேள்.
[/color]

பொருள் : உறவானது ஏழ்மை வருங்காலத்தில் இன்முகத்தோடு அந்த ஏழ்மையைப் போக்க வேண்டும். தம் உறவினருக்கு எந்த வித தீமைகள் வந்த போதும் போர்வாள் போல அவர்களைக் காத்து நிற்கும். மிக்க வல்லமை மிக்கது உறவு என்பதாகும்.


13. இல்லறப் பெருமை

நோய்வின்றிக் காத்தோர் விருந்துடன ஈகையும்
ஓய்வின்றிப் பேணியே ந‌ல்லறம் - தேய்வின்றி
நன்மக்கள் ஈன்றவர் நானிலம் போற்றவே
மன்புகழ் காணில் லறம். 


பொருள் : இல்லறம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் விருந்தினரை நல்லபடி இன்முகத்துடன் ஏற்றுக் காக்க வேண்டும். நோய் நொடிகள் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களைக் காத்திட வேண்டும். நல்ல குழந்தைகளைப் பெற்று இந்த உலகம் போற்றிட அவர்களைப் பாதுகாத்து அழியாப்புகழ் பெற்று இல்லறம் சிறந்திட வேண்டும்.


14. க‌ண‌வ‌ன் பெருமை
வழிநிறை மாறாம‌ல் வாழ்நெறி மீறா
சுழிநிறை மாகடல் தாண்டி - விழிநிறை
இல்லாள் கரமதில் தன்கரம் நீங்காதான்
நல்லோர் புகழ்நா யகன்.


பொருள் : கணவன் என்பவன் தன் வாழ்க்கையில் தவறான வழியில் செலலாமல் இல்லறம் என்னும் பெருங்கடலை தனது மனைவியின் கரங்களைப்பிடித்து கடக்க வேண்டும். இவ்வுலகம் போற்றும் அளவுக்கு சிறந்த கணவனாக விளஙக வேண்டும்.

15. மனைவியின் பெருமை.

கட்டியோன் கண்கண்ட தேவனவ னென்றெண்ணி 
ஒட்டியுற வாடிநல் வாய்காட்டி - சுட்டியே
விட்டு விலகாது நல்லமைச்சாய் தானின்று
கட்டிலில் தாலாட்டும் தாய்.


பொருள் : மனைவியானவள் தன்னைக்கட்டிய கணவனைத் தலைவனாக மதித்து கடவுளாக எண்ணி ஒட்டுதலுடனும் ந்ல்ல வழிகளைக் காட்டியும் கணவனை ஒரு போதும் விட்டு விலகாமல் நல்ல தொரு அமைச்சராக இருந்து தவறு செய்யும் நேரம் தட்டிக்கேட்டு கணவனை கட்டிலில் ஒரு தாய் போல தாலாட்டி மகிழ வைக்க வேண்டும்.

16. உழவர் பெருமை 

நிழல்தனைப் போலிவர் நம்வாழ்வில் நீங்கா
துழைத்தலால் நம்முயிர் காத்தே - விழலும்
தழைத்துநல் மண்ணதாய் மாற்றிடும் மாண்பின்
உழவினால் உய்யும் உலகு.


பொருள் : நம்மோடு நிழலாக இருந்து நமது வாழ்க்கையில் ந்ம்மை விட்டு நீங்காமல் உழைத்து நமது உயிரைக் காத்து வரும் உழவர்கள் கை பட்டால் தரிசு நிலங்கள் கூட நல்ல வளம் மிக்க மண்ணாய் மாறிவிடும்.அத்தகைய உழவர்களாலும் உழவினாலும் தான் இந்த உலகம் வாழும். 

17. கூடா நட்பு

சேர்ந்தாரைக் கொல்லும் பெருநோய தன்னவே
சேர்ந்திட்ட தீநட்பு கொல்லுமாம் ‍.. நேர்ந்தாரை 
காத்திடும் நற்றெய்வம் போலவே காத்திட
வாய்த்திட்ட நட்பதே சீர்.


பொருள்: உடம்போடு ஒட்டிக்கொண்டு நம்மைக் கொல்லும் பெரும் வியாதியைப் போல நம்முடன் இணைந்திட்ட தீய நட்பு நம்மைக் கொன்றுவிடும். தம்மிடம் வரம் வேண்டி நின்ற பக்தனைக் காத்திடும் நல்ல தெய்வத்தைப் போல உதவும் நட்பு வாய்ப்பதே மிகச்சிறப்பானதாகும்.

18.நிலையாமை

பேறெனப் பெற்றதிரு போம்வழியார் தாமறிவார்
வேறெதும் தந்திடாது ஊறினையன்றி ‍- ‍‍நூற்றினில்
வாரிவ ழங்கிடும் காண்பாய் மதியது
பாரினில் வாழ்ந்திடும் நாள்.


பொருள்: நாம் நிலைத்தது என்று நினைத்துச் சேர்த்த பொருட் செல்வம் போகும் வழி எவ்வாறு என நாம் அறியாமலேயே அழிந்து படும். விதியின் வழி எவ்வாறோ அவ்வாறே நம் வாழ்வு நிலைக்கும். எனவே நிலையாத இந்த வாழ்க்கையில் அனைவருக்கும் வழங்கி ஆதரவு அளித்து வாழும் மனிதர்களே உலகில் நிலைத்து வாழ்பவர் ஆவார்.

19. அகந்தை.

தானென் றகந்தையால் வீழ்ந்தோர் பலருண்டு
வானமே யாகினும் மாரியாய் - தானதும்
பொய்த்திடின் நாள்பட போற்றலும் போய்நிதம்
கைச்சொல்லுக் காளாகு மே.


பொருள்:

தானென்று அகந்தை கொண்டு இருப்போர் பலர் வீழ்ந்துபட்டிருக்கிறார்கள். வானம் மிகப்பெரிதெனினும் மனித வாழ்க்கைக்கு பல்விதமாய் ஊன்றாய் இருந்தாலும் மழையாய்ப் பொழியாமல் ஏமாற்றிவிட்டால் வானத்தைப்போற்றிய மக்களே தினம் அதைத் தூற்றிட முன்வருவர்.

கைச்சொல் = கசந்த சொல்

20. உலக வழக்கு.

நீயொன்று எண்ணிடில் நேருமே மற்றொன்று
நாயென்று ஊர்பேசும் நாயங்கள் கேட்டிடினே
நோயொன்று மில்லாமல் நோகவைத்து வாழாமல்
சேயைப்போல் வாழ்ந்திடுவாய் நீ..


பொருள் :

இந்த உலகத்தில் அனைத்தும் நீ எண்ணியது போல் நடந்திடாது. நீ ஒன்று நினைத்தால் அதுவே நடந்திடாது வேறொன்று நடக்க வாய்ப்புண்டு. எவரிடமும் நியாயங்கள் கேட்டுப் போரிடாதே. அவ்வாறாயின் உன்னை துச்சமென நாயைப்போல் இவ்வுலகம் உன்னை நினைக்கும்.எந்த வித நோய்க்கும் இடம் தரமால் பிறரை நோகவைத்து வாழ்ந்திடாமல் ஒரு குழந்தையின் மனநிலையில் எதையும் இலகுவாக எடுத்து வாழ்வாயாக.

21.உறவினர் இயல்பு

கேளிரும் வாரார் சடுதியில் மானேயுன்
தோள்சுமை ஏற்றிடவே தோல்வியில் - வாளிப்பு
சற்றே குறைந்திடினும் ஏகிடுவர் தூரமாய்
கற்றே தெளிந்திடு நீ!
 .

22. பேதலிப்பு

பேதலிக்கும் நன்னெஞ்சை நேராக்கி நாளுமொரு
மோதலெனு மோர்கொடுமை சீர்பெறவே - சோதனைகள்
தான்வரினும் தாங்கிடுமோர் எஃகிதயம் கொண்டேநீ
மேன்மைபெற வேண்டிடுவேன் யான்.


பொருள்: மனமானது என்றும் பேதலிக்கும் இயல்புடையதாகும். அத்தகு மனதை நேர்வழியில் மாற்றி தினந்தோறும் மோதலும் வம்புமாக வாழும் கொடுமையை சிறப்பானதாக மாற்றிக்கொள்ளவேண்டும். எத்தகு சோதனைகள் வந்தாலும் அதனைத் தாங்கிக்கொள்ளும் இரும்புமனதைப் பெற்று நீ இன்புற்றுவாழ இறைவனைவேண்டுவேன்.

23. மூட நம்பிக்கை

நாளிது நன்றில்லை கோளின்று தீயதுவாம்
தேளிது திங்களாம் தேறாதோர் - நாளுமே
நன்றாஞ் சமயமதை சோம்பலில் விட்டாரே
ஒன்றுஞ்செய் யாமலே பாழ்!


பொருள்: இன்றைய நாள் சரியில்லை. இன்றைய கிரகநிலை சரியில்லை தீங்கானது. இன்று தேள்மாதம் மோசமான வாரம் இன்றைய நாள் தேறுவதில்லை. என்றெல்லாம் நல்லவை செய்யவேண்டிய தக்க சமயந்தனை சோம்பலில் கழித்து ஒன்றும் செய்யாமல் பாழாக்கி இருப்பர் மூட நம்பிக்கையாளர்.

24. பகைவெல்லும் வழி

நட்பு கனிந்திட்ட தோர்கணத்தில் நீங்கிடுமாம்
முட்புதராய் மண்டிய தோர்பகையும் - கட்டாய்
கரும்பாங்கே காத்திருக்க ஓர்யானை மெல்லா 
இரும்பினா லான கழி.


பொருள் : எப்படிப்பட்ட முட்புதரைப்போல் மண்டிவிட்ட பகையாயினும் அதனை மனதில் கனியும் நட்பினால் நீக்கிவிடலாம். கரும்பானது கட்டுக்கட்டாய்க் காத்திருக்க யானையானது இரும்பிலான கழியை மெல்லாது. அதே போல் நட்பிருக்க பகையை நல்லோர் நாடமாட்டார்கள்.

25. இலங்கைக்கொடுமை

கைக்கொண் டெழுதினேன் கட்டழகுப் பைந்தமிழில்
தைக்குமோ அக்கொடுஞ் சிங்களர்க்கு - உய்க்கும்
வழிகள்பல் லாயிரம் வாகாய் இருக்க
அழிவுகளேன் கொண்டார் நிதம்?


26. அழகு நிலையாது

அழகெனும் நில்லா நிலைமேல் நிதமும்
நிழலாய்த் தொடர்ந்திட்ட கோனும் - தழலாய்க்
கொதித்தடங்கிப் பின்னுணர்ந்து கோடியுமி ழந்தே
பதிவிரதை யும்மிழந்தான் பார்.


பொருள்: 

நிலையாமை பொருந்திய அழகு எனும் நிலை மேல் மயங்கி நிழலைப்போல் தொடர்ந்து கொஞ்சகாலம் களிப்புடனே பொங்கி மகிழ்ந்து பின் உணர்வு நிலைபெற்ற போது தன்னிடமிருந்த கோடிகளையும் கோடித்துணியையும் இழந்து தன் உயிரினும் மேலான பதிவிரதை மனைவியையும் இழந்து இறந்தே போனான் கோவலன் எனும் செல்வந்தன்!

27. கடவுள் உறைவிடம்

காணேனே இவ்வுலகில் வேறெங்கும் கண்டேனே
மாணமிகு மாந்தரின் கண்ணியத்தில் - நாணயத்தில்
தாங்கும் மகனவன் தாயன்பில் ஏழையர்தம்
ஏங்கிடும் கண்ணில் இறை.



பொருள்: 
மதிப்பிற்குரிய வாழ்வு நடத்தும் மனிதரின் கண்ணியத்திலும் நேர்மையெனும் நாணயத்திலும் தன் தாயைகண்கலங்காது காக்கும் மகனின் தாயன்பிலும் ஏழையின் ஏக்கம் நிறைந்த கண்களிலும் தவிர இவ்வுலகில் வேறு எங்கும் கடவுளைக் காண்கிறேனில்லை!

28. சனிக்கிரக மகிமை.

தேவனுமன் னான்முகனும் தேர்ந்ததொரு மாமுனியும்
மூவடியால் மண்ணளந்த மாலவனும் - சீவனது
நாள்முடிக்கும் காலவ னுஞ்சிவனும் சுற்றிவரும்
கோள்களின்கோ காரிக் கடி.


பொருள் : தேவர்களாயினும் நான்முகனாகிய பிரமனாயினும் மாமுனிவர்களாயினும் மூன்று அடிகளால் உலகை அளந்த திருமாலாயினும் காலதேவனாகிய கல்கியாயினும் சிவனாகினும் சுற்றிவருகின்ற கோள்களின் அரசனாகிய சனிகிரகத்துக்கு அடிமைப் பட்டவர்களே.

காரி = சனி

29. வாழும் முறை

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துபார் என்றும்
செயலிலும் சொல்லிலும் ஒன்றென - கையகத்தில்
தீஞ்சொற்கள் இன்றியே நாளும் மகிழ்ந்திரு
பூஞ்சோலை யாகும் உலகு.


பொருள் : நாம் சொல்லும் சொல்லிலும் செயல்களிலும் மாறுபாடில்லாமல் ஒன்றாகவே இருத்தல் வேண்டும். தீமைதரும் சொற்களை என்றும் மொழியாமல் மகிழ்வாக வாழ்ந்தால் இந்த பூவுலகம் பூஞ்சோலையாகத் திகழும்.

30. துதிசெய்வோர்

சிந்தனையு மற்றுச் செயல்வழி சீர்கெட்டு
நிந்தனை பெற்று ஒழுகுவர் - அன்னவரை
வந்தனை செய்தே மதிகெட்டு வாழ்வோரின்
மெய்தோறும் தீயாம் நினை.

No comments:

Post a Comment