Tuesday, April 10, 2012

விழி இழந்தும் ஊமைகளாய்..

விழி இழந்தும் ஊமைகளாய்..

படம்

இன்று பலநேரம் உறக்கமில்லை
கனவுகளின் தொல்லைகளால்..

கதறிய பிஞ்சுகளின் கண்ணீர்ச் சிதறலில்
உதறித்தள்ளும் கொடுங்கோலர் குதறலில்
குண்டடி பட்டுச்சிதைந்த ஒருமார்பில்
பாலுக்குப் பதிலாய் உதிரம் குடிக்கும் மழலைகள்
சுவைமாறிப் போனதும் தாயின் தலைவருடல் போனதும்
அறியாமல் உணராமல் அலறத்தலைப்பட்டதும்
கால்சிதறிப்போனபின்னும் உயிர்பிழைக்கவெண்ணி
நத்தைபோல் நகரும் வயதானவரின் ஓலமும்

மாறி மாறிவந்து கனவுகளாய்ச் சிதைக்கையில்
பலநேரம் உறக்கம் வருவதே இல்லை..

நிலைமாறும் பாரீர் நல்காலமொன்று வரும்பாரீர்
உலைபொங்கும் காலம் வரும் ஊர்களிக்கும் நேரம்வரும்
மெசையாவைப்போல பலகுரல்கள் ஒலிப்பதும்
அசையாமல் கிடந்து ஈக்களுக்கு உணவளிக்கும்
மறத்தமிழனின் மரத்த உடல்களின் 
இறந்தகாலக் கனவுகள் ஆங்காங்கே மினுமினுக்கும்.
ஒருமடக்குத் தண்ணீருக்காய் உடல் மறைத்துப் போராடும்
சகோதரியின் நிலைகண்டு ஊமைச் சகோதரனின் 
உதிரம் துடிக்கும் கண்ணீர் அருவியாய்க் கொட்டும்..

இத்தகு கனவுகளுடன் உறக்கச்சாத்தியம் எவ்விதம்..?

இன்று பலநேரம் உறக்கமில்லை
கனவுகளின் தொல்லைகளால்..

No comments:

Post a Comment