
உற்றவரென்று எண்ணியிருந்த சிலர்
எட்டி உதைக்கும் போது...
அடுத்திருந்து அழுதுதேற்றி
எட்டிப்போய் பரிகசிக்கும் போது...
நட்பென்று பேர் சொல்லி
நகம் நான் சதை நீ என்றே தினம்கூறி
நடுக்காட்டில் விட்டோடிய போது...
எதிரிக்காய் தீட்டுவதாய் கத்தியைக் காட்டி
எதிர்பாராமல் கழுத்தை நெருங்கும் போது ...
நீ இந்நாட்டின் பெர்ட்னாட்ஷா
உன் மூளை அருங்காட்சிக்கு அருகதை
என்றெல்லாம் கூறி
பின்னால் வாய் மூடி அழுத்தமாய்ச் சிரித்தபோது...
உன்னைப்போல் ஒருவன் இனி பிறக்க வேண்டும்
என்ன தேடினாலும் கிடைக்காத வைரம் நீ
என்றெல்லாம் உயர்த்திவிட்டு
நல்ல தொரு நகைச்சுவை இல்லையா எனும் போது...
இதயத்தில் நீ தான் இனி யாருமில்லை
உதயத்தில் வேறொருவன் என்று கூறும்போது...
பன்னீரால் உனக்கு முழுக்காட்டு எனச்சொல்லி
வென்னீரைத்தலையில் வாரிக்கொட்டும் போது...
அழகியென்றால் அது நீமட்டும் தான்
என நிதமும் ஏற்றிவைத்துப் பின்
பழகியபின் பார்க்கலாம் வருகிறேன் எனும் போது...
தாயெனத்தாங்குவேன் ஒருபோதும் கைவிடேன்
போயெனக்கு உன்னிதயம் அறுத்துவா எனும்போது...
ஊரே கைகொட்டிப் பாராட்டி பரிசளித்து
யாரே நீ என்று எக்காளமாய்ச் சிரிக்கும் போது...
பெருங்கவிஞன் நீதான் மற்றெல்லாம் வெறுங்கவிஞர்
அருமையான வித்தகன் உனைப்போலில்லை எனக்கூறி
உருப்படாத உனக்கு பெருமை ஒருகேடா
உன்னைவிட நல்லோர் இதோபார் போடா
என்றென்னை எல்லாரும் புறக்கணிக்கும் போது...
வலி...!