
இன்று புதிதாய்ப் பிறந்தேன்...
கண்கள் திறந்தன இன்று..
இமைமூடிய மயக்கத்தில்
இமயமலைச் சாரலாய்ப் பொழிந்த
உன் சாகசப்பேச்சுக்களில்
சாரலாய்ப் பொழிந்த அந்த
குளிர்ப்போர்வைகள்
என் இதயச்சூட்டைத்தணித்ததாய் எண்ணி
கருகும் இதயம்
புகைவிட்டழுததை உணராமலேயே
காலம் போயின...
விழிகெட்ட பின் என்ன
வேதாந்தம் என்று கேட்கலாம் ...
விழிகள் கெட்டன..
இதயம் சருகாய்க் கருகின..
ஆயினும்
உயிர்த்துடிப்பு அடங்கும்முன்
உணர்வைப் பெற்றுவிட்டேன்..
கோடி நன்றிகள்..
உன் சாதுர்ய சிற்றொடர்கள்
உண்மையாய் எனக்கான மட்டுமான
சொற்றொடர்கள் என்று
புளகாங்கிதமடைந்திட்ட போதினில்
கண்களில் படும் அனைவருமே உனக்கு
கண்ணாடிக்கோப்பைகளாய்
உனக்கான பொழுதுபோக்கு விசைகளாய்..
என்பதை அறிந்து
என்னையும் தேற்றிக்கொண்டேன்..
என்போன்றவர்கள் உன்னிடமிருந்து
பிழைத்தெழ பிழை திருத்தி எழ
கண்கள் மூடி பிரார்த்திக்கிறேன்...