
1.வாழ்வும் இறுதியும்..
அன்றோரு நாள்
நெற்றியில்
குங்குமமும் விபூதியும்
ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து
இறைவழிபாட்டுக்கென
கறை படா வெள்ளுடையில் வந்தாய்...
குங்குமம் நீ தரும் வாழ்வையும்
விபூதி என் இறுதியையும்
அப்போதே காட்டி நின்றதோ...?

2. ஒட்டிய உதடுகள்..!
ஓர் இனிய கணத்தில்
உன் உதட்டை என் உதட்டால்
ஒற்றி எடுத்தேன் நான்...
மின்னலாய் ஒளிப்புன்னகை
உன் முகத்தில் விரியக்கண்டேன்...
அடுத்த கணம்...
கார்மேகம் சூழ்ந்தது உன்னை...
நாம் இணைவோமா என்று
ஏக்கக்குழந்தையாய் கேட்டாய் நீ..
உன் பிணைக்கைதியை
இப்படிக் கேடகலாமா என்றேன் நான்...

3. உனக்கு மட்டும் ஏன்...?
இருமலும் ஜலதோஷமும்
ஒன்றாய் வாட்டுகிறதென
நாம் சந்தித்த கணங்களில்
சிந்திக்கொண்டே முனகினேன்..
என் அருகில் உராய்ந்து
முகமெல்லாம் உரசி
எதையோ உறிஞ்சி சுவாசித்தாய்..
என்ன செய்கிறாய் என
புரியாமல் கேட்டேன்...
உனக்கு மட்டுமேன் இந்த உபாதை?
எனக்கும் வரட்டும் ஜலதோஷமென்றாய்..
நான் சிலிர்த்துப் போனேன்...!

4. சாகவும் தயார்..!
வாழ்ந்து சலித்துவிட்டது.
சாகத்தோன்றுகிறது என்று
சோகத்துடன் சொன்னேன் நான்...
கதிரவன் மறைந்ததும்
கூம்பிடும் தாமரையாய்
உன் வதனம்
சுருண்டு போயிற்று...
என் அருகாமை இருந்துமா அப்படி..
எனில் என்னை நேசிக்கவே இல்லையோ..?
எப்படி தோன்றும் அப்படி என்றாய்...
என் இறுதி ஊர்வலத்தில்
நீயும் கலந்துகொள்வாய் எனில்
தினமும் சாகத் தயார் தான் என்றேன்...!

5. சரிதானா இது..?
பலவீனமான ஒரு கணத்தில்
உன் இடையைச் சுற்றி வளைத்தேன் நான்...
புவியீர்ப்பு விசையினும் மேலாய் இந்த
கவியீர்ப்பு விசை வலிமையானது என்றாய்...
சரித்தேன் நான்
சரிந்தாய் நீ..
சரிதானா என்றேன் ..
தெரியாது என்றாய்..
மணமாகும் முன் இது
சரியா என்றேன்...
வெட்கமாய்க் கவிழ்ந்தாய்..
விலகினேன் நான்...!

6. வினாயகர் சம்மதிப்பார்...
காதல் எனக்கு சலிக்கிறது என்றேன்...
விசை அணைத்த தொலைக்காட்சியாய்
இருண்டது உன் முகம்...
காதல் தான் சலித்தது எனக்கு
கல்யாணம் செய்வோமா என்றேன்..
என் மாமன் என்ன சொன்னார் என்று
ஏக்கமாய்க் கேட்டாய் நீ...
காதலித்தது நாம்..
கலக்கப்போவதும் நாம்..
அவர்கள் சம்மதமெனில் நல்லது ..
இல்லையெனில்
நமது கல்யாணத்திற்கு
வினாயகர் சம்மதிப்பார் என்றேன்..
விண்மீன்களாய் உன்
கண்மீன்கள் ஒளிர்ந்தன..

7 ஆடை நீ மீதி நான்...
ஏடு மிதக்கின்ற பாதாம் பாலினை
ஒரே பெரிய க்ளாஸில்
இருவரும் குடித்தோம்...
ஆடையை நீ எடு மீதியை
நான் அருந்துகிறேன் என்றாய்...
அர்த்தமுடன் சிரித்தேன்..
ஆடையை நான் எடுத்தால்
மீதியும் எனக்கே என்றேன்...
புரியாமல் வழக்கம்பொல்
அசடு போலச்சிரித்தாய்..
அர்த்தத்தை காதில்
மெல்ல விளம்பினேன்...
அடச்சீ ... காமாந்தகா என்று
செல்லமாய் அடித்தாய்..
இன்றுவரை எனக்கு அது
வலிக்கவே இல்லை...!

8. மழையில் நனைந்த மலர்...
நாம் சுற்றித்திரிந்த ஒரு பொற்காலத்தில்
மழையில் நனைந்து உன் ஆடை
உன் உடலோடு ஒட்டிக்கொண்டது..
அனைவரின் பார்வைக்கும்
இரையாகிறேன் என்று அழுதாய் நீ..
***************************
ஊரார் பார்வையை
சட்டையே செய்யாமல்
என் மேல்
சட்டையே இல்லாமல்
உன்னருகில் ஒட்டி நடந்தேன்..
கடவுளாய் என்னை உயர்ந்து நோக்கினாய்..

9. மல்லிகையும் காதலியும்..
நானே கேட்காமல்
மல்லிகைப்பூ வாங்கியே
தரமாட்டாயா..? என்றாய்...
கடவுள் கூட கேட்டதில்லை
அதனால்
வாங்கித் தந்து பழக்கமில்லை என்றேன்...
இன்று வரை நான்
மல்லிகைப்பூ வாங்கித் தரவே இல்லை...
என்றாலும்
என்னை அதற்காய் நீ
வெறுத்ததே இல்லை...!

10. ச்சீ ... போடா... படவா...
சிறு வயது முதலாய்
எனக்கு ஒரு கனவென்றாய் ஒரு நாள்...
நான் தானே அந்த கனவு நாயகன்
என்றேன் பல்லிளித்தே நானும்...
ச்சீ... போடா ... என்றுவிட்டு
உதட்டைக் கடித்துக்கொண்டாய்...
ஆகா என் செல்லம் எனக்கு
வரமளித்துவிட்டது என்றேன்..
இப்படி அழைப்பது தான்
அந்த கனவு என்று சொல்லி
தரையினில் கால்விரல் கோலம் போட்டாய்..
கடவுளின் வரத்திற்காய்
பக்தனின் ஏக்கம் கேள்விப்பட்டதுண்டு...
வரம் தர ஏங்கும் கடவுளை
முதன் முதலில் காண்கிறேன் என்றேன்...
ச்சீ... போடா... படவா ... என்றாய்..
புல்லரித்துப் போய்
புதுப்பூவாய்ச் சிரித்தேன் நான்...

11. கோபம்..
கோபம் வந்தால்
என் மார்பில்
செல்லமாய்க் குத்துவாய் நீ...
அதற்காகவே பலமுறை
கோபப்படுத்திப் பார்த்தேன் நான்..

12. ஐ லவ் யூ...
என் முதுகில் என்னவோ
எழுதினாய் ஒரு நாள் நீ..
என்ன எழுதினேன் சொல் என்றாய்..
புரியவில்லை என்றாலும்
ஐ லவ் யூ என்றேன் நான்...
ச்சீ.. போடா...
கண்டுபிடிக்க முடியாமல்
திகைக்கமாட்டாயா சிறிது நேரம் என்றாய்...
உண்மையை மறைத்துப்
புன்னகைத்தேன் நான்..

13. உவப்பு மூட்டை..
என்னை முதுகில் சுமக்க
முடியுமா உன்னால் என்றாய் ஒருநாள்..
அஞ்சு மூட்டை சுமப்பவன் நான்..
இந்த
பஞ்சு மூட்டையை மாட்டேனா என்றேன் நான்..

14. ஈர மிட்டாய்...
நீ காத்திருந்த கணங்களில்
ஒரு நாள்
நான் வரத் தாமதித்தேன்..
கடைசித்துண்டு கடலைமிட்டாயை
உன் வாயில் நீ இட்ட கணம்
என் வரவால் வருந்தினாய்நீ...
எனக்கு
உலர்ந்த மிட்டாயை விட
ஈர மிட்டாய் பிடிக்குமென்று
இதழ்களிலிருந்தே
இதழ்களால் பறித்துக்கொண்டேன்...

15. பிறந்த நாள் ட்ரெஸ்..
உன்னை ஒரு முறை
உன் பிறந்த நாள் ட்ரெஸில்
பார்க்க வேண்டும் என்றேன்..
அடடா பிறந்த நாளுக்கு இன்னும்
நாள் இருக்கிறதே என்றாய்..
இன்று கூட சாத்தியம் தான் என்று
நமுட்டுச்சிரிப்பு சிரித்தேன் நான்..
புரிந்த பின் என்னைத்
துரத்தித் துரத்தி அடித்தாய் நீ...
16. பார்த்தால் பசி தீருமா..?
மாலை நேரம் .. பூங்காவில் நாம்..
பசிக்கிறது என்றேன்..
என் தங்கமே.. கொண்டு வந்த லஞ்ச்சும் தீர்ந்ததே..
என்ன செய்வேன் என்று பதைத்தாய்..
நான் உன் மடியில் சாய்ந்துகொண்டேன்..
*******************************************************
*******************************************************
பார்த்தால் பசிதீரும் என்று சொன்னது பொய்யல்லவா என்றேன்..
ஏன் அப்படி சொல்கிறாய் என்றாய்..?
உண்டபின் தானே என் பசி தீர்ந்தது என்றேன்..
வெட்கமுடன் போடா படவா என்றாய்..
17. பிரார்த்தனை..
எனக்கான தேவைகளுக்கு
நான் செய்த பிரார்த்தனைகளை விட
உனக்கானதே அதிகம் என்றேன்..
அட மடையா..
உன் பிரார்த்தனையே என்னை வேண்டி தானே..?
பின் எதற்காக இந்த அங்கலாய்ப்பு..?
சுயநலக்காரா...
என்று என் முகத்தில் இடித்தாய்..
களவு பிடிபட்டவனாய்
காதல் தழுவ பார்த்தேன் நான்..
என்மேல்
கால் நழுவ சாய்ந்தாய் நீ..!