
அன்னையென்றே நானும்....
மழலையீன்ற மணிவயிறென
மற்றோரைச் சொல்வீர்கள்...
விழலில்லா நிலத்தையும்
பூமாதேவி என்பீர்கள்...
குழவியொன் றீந்திடாமல்
குறைபட்ட பாவியாய்
அழக்கூட வலுவில்லாது
அவச்சொல் சுமக்கிறேன்...
நிலம்பழுதென்றே
நிதம் கூவிநிற்பீர்
விதைபழுதா என்றே
விசாரித்திருப்பீரா..?
மாவடு கடித்திட
மனசெல்லாம் உண்டெனக்கு...
ஆவது வழியறியாது
நோன்புகள் நேர்கிறேன்....
போவதுவும் வருவதுவும்
பொல்லாங்கு சொல்லுவதை
வாயது அடைத்தே
வாடிப்போய் நிற்கிறேன்...
நோயல்ல இதுவென்றே
நோகித்தான் பறைகிறேன்..
சேயறியா நாய்களும்
இத்தனை இழிபடுமோ..?
மகவில்லா மாதர்கள்
மாந்தரில் கணக்கில்லையா?
முகவரி இல்லாத
மடல்போல்தான் அலைகிறேன்...
இகமே சரியில்லை
பரலோகம் எனக்கெதற்கு....?
அகம்குளிர அன்னையாய்
அழைக்கப்பட மாட்டேனா..?
தாய்மை முகவரியைத் தேடி அலையும் இக்கவிதை அன்னையாகா பெண்களின் ஏக்கத்தை அழுத்தமாக அடயாளம் காட்டியுள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புள்ள கலைவேந்தன்,
ReplyDeleteமலடி என்ற உயிர் குலைக்கும் வீணர்களின் ஒரு சொல் வீணற்று போகாதோ? என்ற மங்கையின் நிலையை சித்தரித்து காட்டியிருப்பது அருமை...
மனையின் முகப்பை(மனைவியை) குறைசொல்லும் உலகம். என்றைக்கு பார்க்கும்? என்றும் அடித்தளமும்(கணவனும்) உறுதியோ? என்று...
அன்பு கலை,
ReplyDeleteபெண்ணின் மன உணர்வுகளை மட்டுமே அறிந்தவன் நீ என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேல் உயர்ந்துவிட்டாயடா எல்லோர் மனதிலும் இப்படி ஒரு கவி எழுதி....
என்ன ஒரு சொல்லாடல்...
என்ன ஒரு வேதனை, அழுத்தம் ஒரு தாயாகாத பெண்ணின் வேதனை உணர்வுகளை அப்படியே உன் கவிதையில் கொட்டி அடுக்கிவிட்டாயே இனி சொல்ல ஒன்றுமில்லை எனக்கு என்றது போல்...
ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறாள்? மகள் என்ற நிலையில் இருந்து சகோதரி என்ற நிலையில் இருந்து மனைவி என்ற நிலையில் இருந்து உயர்வுப் பெற்று பின் தாய் என்ற இந்த இருசொல் பெண்ணை பூரணமாக முழுமையாக்குகிறது... இதை நான் சொல்லவில்லை... ஒவ்வொரு பெண்ணின் மனதில் ஏற்படும் ஏக்கம் இது....
தாயாக துடிக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த உலகம் தரும் அடிகளை அந்த வலிகளை அவமானங்களை அவச்சொற்களை அப்படியே தன் தன் மனதுக்குள் நிலத்தை மட்டும் பழுதென்று சொல்கிறீரே விதை பழுதென்று சொல்வீரா... ஹப்பப்பா எப்படியடா வார்த்தைகளை கோர்க்க எங்கே இப்படி கற்றாய்?
விதை பழுதானாலும் மூடி மறைக்கும் மோசமான உலகம் தான் இது...
எல்லா குறைகளையும் பெண்ணின் மேல் சுமத்தி பெண்ணை கேவலப்படுத்தி தாய் ஆகமுடியாத நிலை என்று மலடி என்ற முத்திரை குத்தி
சாவின் விளிம்பிற்கே தள்ளிவிடும் கொடிய உலகினை கண்முன் நிறுத்தினாயடா இந்த கவிதை மூலம்....
அன்பான பாராட்டுக்கள்
அன்புத்தோழி
மஞ்சுபாஷிணி