Saturday, December 11, 2010

சொல்லத் தெரியா உணர்வுகள்..!

சொல்லத் தெரியா உணர்வுகள்..!

உள்ளத் தெழுந்ததை உணர்வினில் வடித்திட
வெள்ளமாய்க் கவியெழுதும் கவிஞனல்ல யான்..
முள்ளில் பட்டதோர் துன்பம் பகிரயான்
உள்ளில் உனைஇருத்தித் தொடங்கிடுவேன் கேளாய்..!

முன்னமொரு நாளுன்னைக் காணாத போதினில்
கன்னலாய் இனிந்துரைத்த இன்மொழி கண்டுநானும்
மின்னலடித்தாற்போல் மையலுற்றேன் கடிபோழ்தில்
இன்னமும் அப்பொழுது இனிதாய் சுவைக்கிறதே..!

அல்லியாயுன் முகிழ்வும் அலர்ந்ததோர் புன்னகையும்
முல்லைச் சரமதனை முற்றத்தி லுதிர்த்தாற்போல்
அல்லும்பகலுமாய் அணங்குன் மகிழ்வலையே
எல்லையின்றி எனையூக்கி எனைமறக்கச் செய்தனவே...!

அன்றியுமுன் முகமோ அணங்குந்தன் இன்குரலோ
என்றுதான் மகிழ்வுதரும் என்றெண்ணி ஏங்கியெனை
முன்றினில் முதுவெயிலில் மயங்கிட்ட எறும்பன்ன
அன்றில் பறவையாய் அணங்குன்னை ஆர்த்திருந்தேன்..!

வந்தது பொற்காலம் வனமதில் மேகமதை
முந்திய நோக்கினில் மகிழ்ந்தாடும் மயிலன்ன
சிந்திய உன்முகத் தோற்றமதில் எனையானும்
மந்தியது கண்ட மேதாவியென மகிழ்ந்தேன்...!



உன்னழகு முகமதனை முதன்முதல் கண்டபோதில்
என்னை யிழந்தனன் என்வச மிழந்தனன்யான்
அன்னம்முன் அன்றாடக்காய்ச்சியின் முகம்போலே
சின்னதோர் குழவிமுன் விளையாட்டுக் கலன்போலே..!

பனியினில் முகிழ்த்ததோர் பளிங்கு மலரெனவே
இனிமையைக் குழைத்தநல் கவிமகள் நிலவுமுகம்
குனித்ததோர் பொற்செவ்வாய் குழிவிழும் கன்னமதும்
இனித்ததே என்னுள்ளம் இயங்குதல் மறந்ததுவே...!

பசித்திட்ட பரமஏழைக் கெதிரினில் வைத்ததோர்
புசிக்கநல் அறுசுவைக் கலமதும் பொன்னதுவாய்
வசிக்க வழியிலா ஏழைமுன் மாளிகையாய்
நசிந்த பக்தன்முன் வரம்தந்த சிவனுருவாய்...!

இன்னும் பலவிதம் பரவசம் கொண்டனன் யான்
மின்னும் வானவில் மடிதனில் விழுதல் கண்டேன்
ஒன்னும் போதெல் லாமெனுள்ளம் மிதக்குதடி
என்னை மறந்தபின் உன்னுருவம் பதிந்ததடி...!

இசைதரும் இன்புணர்வை உன்குரல் தந்ததடி
விசைகொண்ட பந்ததுவாய் உந்துதல் உணர்ந்ததடி
தசையும் அதனுள்ளே இசைவான குருதியுமே
அசைந்தது உன்குரலால் அல்லும் பகலுமதே...!




செல்பிறவி விட்டகுறை இப்பிறவி தந்ததுவோ
நல்பிறவி என்பதனால் உந்தன் விழிபட்டதுவோ
மென்துறவி அன்னதொரு தவப்பேறு வந்ததுவோ
உன் உறவில் அகமகிழ்ந்தேன் என்பிறவி சிறந்ததுவே..!


துன்பியலில் உழன்றுநிதம் துறவறமும் கண்டவன்யான்
மென்னிதழில் உன்மலர்ச்சி என்னை நிதம் வென்றதுவே
இன்புறுதல என்பதனை இழந்துநிதம் நொந்தவ்னை
உன்முறுவல கொண்டு நிதம் பேரின்பம் தந்தனையே..!


தீராத கதைகள்பல தினந்தோறும் நாம்கதைத்தோம்
வேராக உறவதுவும் மனநிலத்தில் படர்ந்ததுவே
நேரான உன்பேச்சு நேர்வழியைத் தந்துதினம்
சீரான வழிகாட்டி சிறப்புறவே செய்ததுவே..!


கவிப்பேச்சு கவின்பேச்சு கலைப்பேச்சு கதையாச்சு
புவிப்பேச்சில் புன்முறுவல் கலந்ததுமே வனப்பாச்சு
தவிப்பேதும் அறியாத தவழுகிற தமிழதுவும்
குவிப்பாச்சு குன்றுபோல குறைவேதும் கண்டிலனே..!


நாடோறும் நாம்மகிழ்ந்தோம் நாளெல்லாம் களித்திருந்தோம்
தேடாத கவிச் செல்வம் தேடிநிதம் அடைந்திட்டோம்
மேடேறும் நதியதுவும் வேகந்தனில் குறைவதுபோ்ல்
வாடாமல் காலமதும் கடந்ததுவே களிப்பதனில்..!

No comments:

Post a Comment