Saturday, October 16, 2010

நட்புக்கு வயது நாற்பத்தி இரண்டு..!
அன்னையாய் அரவணைத்த ஆருயிர்த்தோழிக்கு..........!


1. 
தன்னலத்தைத் தானுதறி தரணியெலாம் போற்றிடவே 
கன்னல் தரும் இனிய சுவை மொழியதுவே தன்மொழியாய்
மின்னலிடை தேவதையாய் மெல்ல இவள் இறங்கிவந்தாள்
சின்ன இதழ் சிமிழ் சிரிப்பில் ஒரு வயதில் மனம் கவர்ந்தாள்!


2. 
சிற்றிடையில் சின்ன உடை மெல்லியதோர் புன்னகையாம்
கற்றுக்கொள்ளும் ஆர்வமுடன் கண்களிலே குறுகுறுப்பு
பற்றிக்கொண்ட பொருளனைத்தும் பாங்குடனே போட்டுடைக்கும்
வெற்றித்திரு மகளாயிவள் இருவயதில் மனம்கவர்ந்தாள்!


3. 
முத்தாய்பிறர் முகம்பார்த்து முறுவலால் மனம்கவர்ந்து
சித்துவிளை யாட்டாயிவள் சின்னச்சின்ன குறும்புசெய்து
எத்தனைவலி என்றாலும் சத்தமுடன் அழுதிடாமல்
முத்துப்பல் முளைத்துவர மூவயதில் முறுவலித்தாள்!


4. 
வாய்திறந்து பேசுமிவள் நாள்தோறும் மழலை மொழி
சேயிவளோ நடந்திடவே நாற்புறமும் கொலுசு ஒலி
தாயவளின் மனம் குளிர தத்தையிவள் கொஞ்சு மொழி
தூயவளும் நடனமிட்டாள் நான்காவது அகவையிலே!


5. 
பஞ்சனைய பாதமுடன் பாங்காயிவள் நடந்துசென்று
துஞ்சுமிரு கண்களுடன் தூயதொரு உடையுடுத்தி
கெஞ்சுமிவள் முகமதுவோ பள்ளிதனைப் புறம் ஒதுக்க
மஞ்சுஇவள் கல்விபெற ஐந்தாவது அகவை கொண்டாள்!


6. 
ஆறுதலைக் கூறும்முகம் ஆறாத சினக்குணமும்
ஊறுவிளை விக்காத உன்னதமாம் அருட்குணமும்
சீறுதலைத் தன் இயல்பாய் சின்னதொரு தவறினையும்
கூறுகின்ற நீதியுடன் மூவிரண்டாம் வயதடைந்தாள்!


7. 
எண்ணெழுத்தும் ஏனைய எல்லா படிப்புமிவள்
கண்ணெனக் கற்றாலும் கணக்குமட்டும் கடினமுடன்
மண்ணையெல்லாம் மனம் நிறைந்த அன்பினால் ஆளவந்த
கண்ணழகி ஏழாண்டில் எடுத்து வைத்தாள் தன் பாதம்!


8. 
குறும்புப் புன்னகை குறுகுறுப்பு நிறை கண்கள்
எறும்புக்கும் தீங்கெண்ணா இளகிய மனத்துடையாள்
ஏழை எளியவர்க்கு என்றும் உதவும் குணம்
தாழை மலர் மணத்தாள் எட்டாம் அகவையிலே! 


9. 
செல்வந்தர் குலமென்னும் செருக்கு குணம் ஏதுமின்றி
சொல்வண்ணம் கேட்டுநல் குழந்தையெனும் பெயரெடுத்து
மெல்லிய மேனியளாள் மென்னகை யாளிவள் தான்
வல்லிபோல் வளர்ந்தெழிலாய் ஒன்பதில் அடி வைத்தாள்!


10. 
பத்தரைமாற்றுத் தங்கம்போல் இவள்குணந்தான் 
எத்தனை வலியிலும் கொண்ட நல் உறுதியில்
எத்துணையும் பிறழாது கடமையில் கருத்துமாய்
அத்துனை சிறப்பினளாம் பத்தாம் அகவையிலிவள்!


11. 
திண்மையாய் மலர்ந்திட்ட புதுமைப் பெண்ணிவள்தான்
கண்மையும் வரைந்த நல்லழகு முகத்துடனே
உண்மையும் நேர்மையும் இருகண்களாய் வாழ்பவள்
பெண்மையாய் மலர்ந்தனள் பதினொரு அகவையில்!


12. 
வகுப்பினில் சுட்டியாய் படிப்பினில் கெட்டியாய்
பகுத்துணரும் பதுமையாய் பலர்புகழும் செல்லமாய்
தொகுத்தவற்றில் தொக்கிநிற்கும் தொன்மையிலும் தொன்மையாய்
தகுதியுடன் குறும்பினளாய் பனிரெண்டில் அடிவைத்தாள்!


13. 
சுறுசுறுப்பில் எறும்பினமாய் கலகலப்பில் காசொலியாய்
சிறுசிறு குறும்புகளில் சிட்டுக்குருவி போலே
வறுமை எனபதன் வாசனையும் அறியாமல் 
சிறுமையைச் சாடியே நல் பதின்மூன்றும் அடைந்தனளே!


14. 
ஒன்பதாம் வகுப்பினிலே ஒன்றிப்போய் படித்தாலும்
என்புடனே தோலுமாய் மெல்லியளாய் வளர்ந்திருக்க
பண்பதிலும் பணிவினிலும் சற்றேனும் குறையாமல்
தண்பதிலைக் கொண்டவள் மலர்ந்தனள் பதினான்கில்!


15.
அழகுநல் பெட்டகமாய் அணஙகிவள் அவதரிக்க
பழகுதற் கினியவளின் பாங்கான குணங்கண்டு 
தழலிடைப் புழுவெனவே காதல்கொண்டு மடல்களுடன்
விழைந்தனர் இளைஞர்பலர் இனிய இவள் பதினைந்தில்!


16. 
பருவம் பலவிதமாய் அழகினை அள்ளித்தர
உருவம் துமிகூட உள்ளதினும் மாறாமல்
திருவாய் திக்கெட்டும் இவள் குணம் பரவிடவே
வருவார் பெண் கேட்டிவள் பதினாறாம் பருவத்தில்!


17. 
எதிலும் மயங்காமல் எவரிடமும் உருகாமல்
விதிவழிதான் போவதெனும் விதியினை மேற்கொண்டு
பதிலுக்குப் புன்னகையே வேறொன்றும் இல்லையென
மதிவதனப்பெண்ணிவள் தான் பதினேழில் களம்புகுந்தாள்!


18. 
தஞ்சமென வந்தோரை தலைகாத்துத் தானுயர்ந்து
பஞ்சமென பரிதவிப்போர் நிலையுணர்ந்து தானுதவி
கொஞ்சம்போல் சிரித்து கொடுமைகண்டு மனம் பதறி
மஞ்சுபாஷிணி இவளும் பதினெட்டில் பதம்புகுந்தாள்!


19. 
முத்தென்பார் அவள்பற்கள் முல்லையென்பார் ஒருசிலரோ
கொத்துகொத்தாய் பூத்து நிற்கும் தென்னம்பூவென்பார்
பத்தோ பதினைந்தோ பற்கள்தான் பெரிதென்று 
ஒத்துப்போய் பேசினர் இவள் பத்தொன்ப தாம்வயதில்!


20. 
என்றும் இவளுக்கு விநாயகரே துணையாவார்
நன்றும் தீதும் அவர்பாதம் வைத்திடுவாள்
ஒன்றும் நேராமல் அவர்காத்து வருகையிலே
வென்றுவிட்டார் இவள்மனதை சம்பத்குமார் இருபதிலே!


21. 
மங்கையாய்ப் பிறந்து மாதவம் செய்த இவள்
தன்கையை உவந்தளித்தாள் சம்பத்திடம் மயங்கி
கங்கையும் சரஸ்வதியும் கடலிலே கலந்தாற்போல்
சிங்கமுடன் சேர்ந்துநல் இல்லறம் இருபத்தொன்றில்!


22. 
வாய்மையைத் தன்வழியாய் வழிவழியாய்க் கொண்டவள்
தாய்மையைக் கண்டனள் தன்னலமே கருதாமல்
தூய்மையின் உறைவிடம் தும்பைப்பூ மனமுடையோள்
சேயொன்றை ஈந்தனள் இருபத்தி ரண்டில் இவள்!


23. 
கட்டிய கணவனும் ஒட்டிய உறவுகளும்
தொட்டுத் தொட்டு கூடிவந்த பந்தங்களும் சொந்தங்களும்
சிட்டாய்ப் பறந்திவள் செய்துவந்த சேவைகளில்
மட்டற்று மகிழ்ந்தனர் இவளிருபத்து மூன்றினிலே!


24. 
சந்திர வதனமுகம் என்றும் மலர்ந்திருக்க
வந்ததே கொஞ்சம் தனிமையது வாட்டிடவே
சொந்தங்கள் ஆயிரந்தான் இருந்திட்ட போதினிலும்
வந்தவர் கடல்கடந்தார் இருபத்து நான்கினிலே! 


25. 
தனிமையிலே இனிமை காணும் முயற்சியில் தான்மனம்
இனிமேலும் பொறுக்கும் நிலை இல்லையெனும் உளம்
வரிவரியாய் கணவன் முகம் மடலில் கண்டு சுகம்
சரிவரவே முகம் திருத்தா இருபத்தைந்தாம் அகம்!


26. 
காத்திருந்த கண்கள் கண்ட காட்சி தந்த இதம்
பார்த்துபார்த்து கணவன் முகம் நிஜத்தில் கண்ட சுகம்
சேர்த்து வைத்த இறைவணங்க ஷிர்டி சென்ற பேறு
வேர்த்திடாத மஞ்சு வைத்த பாதம் இருபத்தாறு!


27. 
தேடிவைத்த அன்பு எல்லாம் அருவிபோல கொட்டும்
வாடிவிட்ட மலரும் கூட மஞ்சு கண்டு மலரும்
நாடிநிதம் சென்றவர்கள் நலமடைவர் என்றும்
ஓடியிவள் உழைத்திட்ட அகவை இருபத்தேழு!


28. 
தாயாயிவள் காட்டும் தாய்ப்பாசம் மகனறிவான்
சேயாயிவள் காட்டும் மகள்பாசம் தாயறிவாள்
ஓயாது பார்த்திருக்கும் கனிவறிவான் இவள் கணவன்
சாயாத உழைப்பினளாம் இருபத்து எட்டாண்டில்!


29. 
அன்பினா லணைத்தே இவளருமைச் சகோதரத்தை
துன்பம் தீர்த்துநல் துணைநின்றே எந்நாளும்
என்பினைத் தேய்த்து நல்லுறவுக்காய் தினமுழைத்து
தன்பிணைப்பால் இருபத்துஒன்பதில் அவள் நுழைந்தாள்!


30. 
தவறினைக் கண்டாலே தைரியமாய் கேட்டிடுவாள்
தவறோ தனதென்றால் தானும் பணிந்திடுவாள்
சுவரினைக்கண்டுவிட்டால் சித்திரம் வரைந்திடுவாள்
தவம்போல் வாழ்ந்தவளோ முப்பதில் அடிவைத்தாள்!


31. 
கழுகுக் கூட்டமெல்லாம் கண்டபடி சுற்றும்போதும்
அழுகிய இதயமுடன் அழுக்கினைத் துப்பும்போதும்
வழுவிலா மனத்துடன் வஞ்சியவள் காத்துக்கொண்டாள்
முழுமதிப் பெண்ணிவள்தன் முப்பத்தொன்றாம் அகவைதன்னில்!


32. 
முதிர்வான பெண்ணரசி முழுமதிபோல் முகவழகி
பதிவிரதை வார்த்தைக்கு பதவுரையாய் விளங்குபவள்
சதிபதிக்குள் அகந்தைஎனும் ஆமைதனை நுழைக்காமல்
கதிபதியே யாய்முப்பத் திரண்டகவை ஆனவளே!


33. 
கொள்ளை கொள்ளையாய் அன்பினைப் பொழிந்திடுவாள்
வெள்ளைச் சிரிப்பினில் எவரையும் கவர்ந்திருப்பாள்
தள்ளியே நிற்காமல் அரவணைத்துச் சென்றிடுவாள்
கள்ள மில்லாத இவள் முப்பத்து மூன்றகவையானாள்!


34. 
பாசமிகு அண்ணனை இழந்ததாய் அழுதவள்
நேசமுடன் அவரை நினைவிலே போற்றினள்
வேசமிடும் மனிதரில் வேதனை கண்டவள்
வாசமல ரன்னவள் முப்பத்து நான்காண்டினிலே!


35. 
இழந்ததன் அண்ணனை தன்வயிற்றில் மீண்டும்
உழவன் தன் நிலத்தினில் கண்டெடுத்த புதையல் போல்
குழந்தையாய்ப் பெற்றவள் குமுதமாய் மலர்ந்தனள்
முழுநிலவு போன்றவள் முப்பத்து ஐந்தினள்!


36 
கன்றினைப் பிரிந்திட்ட தாய்ப்பசு போலவே
அன்னையிவள் தன் மகனைப் பலநேரம் பிரிந்தனள்
தன்மன வேதனை யாவையும் மறைத்தவள்
புன்முகம் கொண்டவள் முப்பத்து ஆறினில்!


37 
பாலை நிலத்தினில் சோலையாய் வாழ்பவள்
சேலை கட்டிய காந்திபோல் தூயவள்
காலையும் மாலையும் தொண்டு மனத்தனள்
சாலை கடந்திடாள் முப்பத்து ஏழிலும்!


38.
முப்பத்து எட்டினில் எட்டிடும்போதினில்
தப்பேதும் செய்யாத பக்குவ மனதுடன்
செப்புச்சிலைபோல் என்றும் செழிப்பவள்
இப்புவி போற்றிட இல்லறம் காப்பவள்!39.
முத்தமிழ் மன்றமெனும் தேனடை கண்டனள்
அத்தனும் அன்னையும் நட்பினில் கண்டனள்
அன்னையாய் என்மனம் குளிரச்செய்தனள்
என்னுடன் நட்பினள் முப்பத் தொன்பதில்


40 
நூற்பொரு ளுணர்ந்தவள் நூதனம் கற்றவள்
ஏற்புடை கருத்துடன் ஒத்தனள் ஏந்திழை
பாற்குடம்போன்றொரு பவித்திரமானவள்
நாற்பது நிறைந்த என் ஆருயிர்த் தோழியே!


41.
சாய்பா பாவின் சாந்த முகத்தனள்
தூயதாய் இல்லறம் செழித்திட வாழ்பவள்
சேய்போ லென்னையும் காத்திடும் தோழியாம்
வாய்மை தவறாதவள் வாஞ்சை மனத்தினள்!


42.
ஆய கலைகள் எத்தனை யுண்டென 
தூய மனத்தினள் தோண்டிக் கடைந்தனள்
வேயெனத தோன்றிப் பின் குழலாய் மாறினள்
தாயவள் அன்பினில் நாற்பத்து இரண்டினில்!


43.
ஆகமம் போற்றிடும் ஈசனின் ஆசியில்
ஏகத் தந்தனன் இறைவன் ஆசியில்
சோகம் தீர்ந்திட சோர்வெலாம் போகிட
தாகமதனில் நீரே நீ வாழி என் தோழி...!


என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் மஞ்சு...!

No comments:

Post a Comment