Sunday, July 24, 2011

இன்றைய மனிதர்கள் - மரபுவழிப்பார்வை யொன்று..!




இன்றைய மனிதர்கள் - மரபுவழிப்பார்வை யொன்று..!

வெள்ளமென தோன்றி நிற்கும் தன்னரிப்பைத் தான்தீர்க்க
கள்ளமாய்க் கலந்தேனும் களிதீரக் காண்கின்ற
குள்ள நரிக்கூட்டந்தான் கூடிக்கூடிப் பேசிடினும்
உள்ளம் நிறை நண்பரென உருவாகி நிற்பாரோ..?


உண்மைக்கு விலையில்லை பகட்டுக்கே பவிசெனவே
கண்மையால் கண்ணதுவின் கோணலை மறைத்தால் போல் 
பெண்மைக்கும் போற்றிவைத்த மாண்மைக்கும் பழிசேர்த்து
தண்மையின்றிப் பொய்பேசும் மாந்தர் தாம் நிலைப்பாரோ..?


நாளெல்லாம் கதைபேசி நாலுகுணம் தான் துறந்து
வேளைக்கொரு வாசகரைத் தேடுகின்ற நூலகமாய்
மூளையது பிறழ்ந்திவர் முன்னோரைத் தான்மறந்து 
கீளையது தான்விட்டு வேறுகிளை பாய்கின்றார்..!


பழகிய கணம் மறந்து பகட்டுக்குத் தான்மயங்கி
அழகிய கணங்களை அக்கணமே தான்மறந்து
நிழல்களின் பிரதிதனை நித்தியம் என நினைந்து
தழலுணரா எறும்பெனவே தான்கெட்டு அழிகின்றார்..


நிதர்சனம் அறியாமல் நிதானந் தானிழந்து 
முதல்முதல் கண்டறிந்த முத்துக்களை தானெறிந்து
விதம் விதமாய் மலர்கண்டு வியந்துநிற்கும் வண்டினமாய்
இதயம் தொலைத்து இவ்வாழ்வைத் தொலைத்திடுவார்..!


இம்மனிதர் நிலைகண்டு சினமெதுவும் வரவில்லை
தம்மை உணராத தரமதனை அறியாத
பொம்மை மனிதரென நகைபுரிந்து நிற்கின்றேன்
இம்மையும் மறுமையும் துலங்கிட வாழ்த்துகின்றேன்..!

4 comments:

  1. கலை அண்ணன் அவர்களுக்கு
    இன்றைய மனிதர்களின் யதார்த்த வாழ்கையை
    மிக அழகாக கோர்த்து இருக்கிறீர்கள்
    மிகவும் அருமை பாராட்டுக்கள்

    உங்கள் கவிப்பணி தொடரட்டும்

    ReplyDelete
  2. மனிதர்களின் பொய் புரட்டும் வஞ்சகமும் ஏமாற்று முகமும் கண்டு மனம் வருந்தி இப்படி இருக்கிறார்களே என்று கோவப்படாமல் நன்றாய் இருக்க வாழ்த்துகிறேன் என்று சொன்னது மிக அருமை கலை....

    நட்புக்குள் நயவஞ்சக கூட்டம் இருந்துவிட்டால் நட்பு கூட பழுதாகிவிடுமே என்று மனம் பதறவைக்கும் வரிகள்...

    உண்மைக்கு காலமில்லை என்றும் பொய்க்கும் பகட்டுக்கும் தான் மனித கூட்டம் நம்பிச்செல்கிறது என்றும்

    பொய் பார்க்க அழகாய் இருந்தாலும் நேர்மையையே சிதைக்கும் சொல்லாததால் பொய்யை நினைத்து மனம் கலங்கி வரைந்த வரிகள் சிறப்பு கலை.

    நாலு குணம் என்று சொன்னது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு தானே கலை? மனதை நூலகம் போல் வைத்துக்கொண்டு வேளைக்கொரு வாசகரைத்தேடி என்ற உவமானம் வெகு அருமை கலை...

    மிக அருமையான வரிகள் பழகின நாட்கள் மறந்து பகட்டுக்கும் பளபளக்கும் மயங்கி நிழலை நிஜம் என்று நம்பி நெருப்பை தொடும் விட்டில் பூச்சி போல சென்று நெருப்பை தொட்டு அழிகின்றனர் என்று சொன்னது மிக அருமை...

    நியாயம் என்ன என்பதை அறிய முயற்சிக்காது நிதானம் இழந்து தன்னுள் நல்விதையென நல் குணங்களை ஒதுக்கி மலருக்கு மலர் தாவும் வண்டினத்தை உவமையாக மனித மனதை சொன்ன விதம் அருமை.....

    அனுபவமும் வயது முதிர்ச்சியும் தான் காரணம் இதை எல்லாம் கண்டபின்னும் கோபிக்காது சோபிக்காது கிடக்கும் மனித மனங்களை பொம்மையென உணர்வுகளில்லா ஒரு உணர்ச்சிகளற்ற பொம்மைக்கு ஈடாய் இப்படி இருக்கும் மனிதர்களைப்பற்றி சொன்ன விதம் மிக சிறப்பு கலை..

    ரொம்ப நாட்கள் கழித்து உன் கையால் வரையப்பட்ட பாக்களாக இந்த அருமையான கவிதையை வாசித்து பின்னூட்டமிட எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன் கலை.

    இன்னும் இதுபோல் நிறைய கவிதைப்பூக்கள் மலர்ந்து மணம் வீச என் அன்பு வாழ்த்துகள் கலை.

    ReplyDelete
  3. மிக்க நன்றி செய்தாலி..!

    மிகவும் மகிழ்ச்சி மஞ்சு..!

    ReplyDelete
  4. கவிதை மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete