Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 61 - 70

61.

கடன்பெற்றோ ருள்ளம் கலங்கியே நிற்றல்
விடமுண்ட ஓர்பசு அற்று.


62.

துணையாகும் நட்பது ஈர்பக்கத் தீயின்
அணைத்தெறும்பைக் காத்திட லற்று.


63.

வரையின்றி ஈயுமவ் வள்ளலையு மோர்நாள்
வரையின்றித் தூற்று முலகு..


64.

நூறுபெற்றும் நூலோர் அவைதனில் சீர்பெறா
பேறுபெற் றென்ன பயன்.


65. 

தோதுடன் தீயதுவும் நன்றாய்ந்து இன்னலதை
ஏதுவாய் தீர்த்தல் அறிவு.


66.

அரிது செயல்வல்லான் உண்டெனில் ஆங்கே
பெரிதாகப் போற்றப் படும்.


67.

பரிசினை வேண்டா பதவியும் வேண்டா
கரிசனம் கொண்டவர் நட்பு.


68

பயக்குஞ்சொல் பாங்காய் பயற்க பயனில்
மயக்குஞ்சொல் வீணே அறி.


69.

கூற்றுவன் வந்தக்கால் கூவிப் பயனேது
போற்றுதற் கேற்றபடி வாழ்.


70.

வீண்பழியும் பொல்லாங்கும் நேர்பகையும் இம்மூன்றும்
நாணெனக் கொல்லும் எமன்.

எனது குறட்பாக்கள்..! 51 - 60

51.

சேர்ந்திழுக் குங்கால் செழுமை பெறுந்தேர்போல்
ஊர்கூடி வாழ்தல் நலம்.


52.

குடித்துக் குடலில் புழுசேர்த் தவனை
அடித்தே விரட்டி விடு.


53.

நலமின்றி நூறாண்டு வாழ்தலினும் சீராய்
சிலவாண்டு நோயின்றி வாழ்.


54.

துயர்துடைக் குங்கரங்கள் தூயன கொண்டே
அயர்தனைப் போக்கிடும் நட்பு.


55.

யாரெதைச் சொல்லினும் ஏற்றிடும் சிற்றறிவு
பேரதைப் பாழ்த்திடும் பார்.


56.

செயல்வல்லன் சொல்வல்லன் ஆயோ ரிவரினும்
சொல்லிய செய்வன் சிறப்பு.


57.

ஒழிக புறங்கூறல் மற்றோரை அன்றேல்
பழிபெற்றுப் பாழா குவர்.


58.

சற்றேனும் யோசி சடுதியில் செய்யுமுன்
கற்றோர்க் கழகே யது.


59.

பண்பெனும் தெய்வகுணம் கற்றதனால் வாராது
முன்செய் தவத்தால் வரும்.


60.

பொடிதெனினும் சீர்மிகு காரம் குறையா
கடுகில் குறையுண்டோ சொல்.


எனது குறட்பாக்கள்..! 41 - 50

41.

செல்பவர் செவ்வழிச் செல்லின் புறமது
சொல்பவர் சொல்லென் செயும்.


42.

நஃகுதல் நட்பன்று என்றும் இடர்தோறும்
எஃகுபோல் காத்தலே நட்பு.


43.

உண்டெனில் ஊர்ப்பசி தீர்த்தலும் இல்லெனில்
மண்டிலம் நீத்தலும் நன்று.


44.

கூறிட்டே நாடதைக் கொன்று குவித்திடுவார்
சேறில் உளையும் பதர்.


45.

மதியேதும் கூறிடு மவ்வழிச் சென்று
விதியதன் நேர்விடல் தீது.


46.

வருதே வறுமைப் பிணிதருதே வென்று
கருதா துழைப்பாய் நிதம்.


47.

பாம்பின் விடமேற கொள்ளும் வெகுநேரம்
தாம்புரிந்த பாவம் மிகும்.


48.

சாற்றுக சாந்தோறும் சான்றான்மை அஃதின்றேல்
நோற்றும் எதுவாம் பயன்.


49.

இங்கிந் நொடியது வாழ்க்கை யெனவெண்ணி
சங்கே முழங்கி விடு.


50.

முகத்திரு கண்பயனென் கொல்நோக்கின் இன்றேல்
அகத்திரு மெய்ஞ்ஞானக் கண்.


எனது குறட்பாக்கள்..! 31 - 40

31

வளர்பிறையும் தேய்பிறையும் ஆங்கே மனிதன் 
தளர்வறியா வாழ்க்கை நகும்.


32.

எண்ணியிருந் தாலொரு தூயதோர் எண்ணமே
அல்லது எண்ணா திரு.


33.

பகர்வது என்றும் பயனேற்க அன்றேல்
பகராமை அல்லதே மேல்.


34.

காண்கின்ற காட்சியெல்லாம் மெய்யல்ல மானேயுன்
மாண்புடை சிந்தைசெய் சீர்.


35.

பார்வையா லோர்முறை நோயதைத் தந்தொரு
பார்வையால் தீர்த்தனள் பார்.


36.

அன்றுவந்தாய் நன்றுவந்தாய் நாமுவந் தோம்நன்றாய் 
இன்றென்னைக் கொன்றது மேன்..?


37.

கவிபடைத்துச் சொல்லுடைத்துப் பார்க்கின்றோம் நீரோ 
செவியடைத்துச் சாகின்றீ ரே.


38.

எழுந்து நடந்த கதிரோன் முகத்தில்
விழுந்து தெறிக்கும் பனி.


39.

தன்மையா லுன்னைக் கவர்ந்தோர் பொருட்டேநீ
உண்மையாய் வாழ்வாய் நிதம்.


40.

பாரிங்கே பாரின்கீழ் பாரழிவு என்பாரே
பாருக்கு முன்முந்து வர்.

எனது குறட்பாக்கள்..! 21 - 30

21.

என்றும் மறவா முதற்காதல் நல்மனதின் 
ஆழம் பதிந்து விடும்.


22.

மேன்மையுள்ளங் கொண்டோர் புவியாள்வர் மற்றையோர் 
சூன்யமாய்ப் பின்தொடர் வார்.


23.

உள்ளதே போதுமெனும் உள்ளத்தோர் பூவுலகில்
எள்ளளவும் தேயா தவர்!


24.

துணையாகும் நன்னெறி துய்த்து உயர்வோர்
இணையாவர் என்றும் இறைக்கு!



25.

கரைந்துண்ணும் காகத்துள் சேர்ந்திருக்கும் நேசம்
விரைந்துண்ணும் மானிடர்க்குண் டோ.
 

26.

தருவானெ மக்கருள் தாந்தோன்றி யானோன்
வருவானென் றோர்த்திடு நீ.
 

27.

மருந்தென வேண்டாம் மருத்துவந்தான் வேண்டாம்
விருந்தை ஒழித்திட்டக் கால்.
 

28.

உனக்கென்று ஓர்வழி நேர்நிலைப் பார்வை
சினக்குணம் இல்லாமை மேல்.
 

29.

வரும்போகும் ஓர்நிலையில் நின்றிடாது ஓடும்
தரும்இன்னல் என்றும் திரு.
 

30.

செல்வதோ இவ்வுலகை விட்டொன்றும் செய்திடாமல்
வெல்வ துவகை உணர்.





எனது குறட்பாக்கள்..! 11 - 20

11.

பேச்சினில் பண்பதுவும் பண்பது செய்கையிலும்
மூச்சாய் இருப்பின் சிறப்பு.


12.

அவனுள்ளே நானென் றுளத்திலெண்ணி - நித்தம்
சிவனுள்ளே ஆழ்ந்திடுவாய் நீ.


13.

தேனதுவும் பாலும் திகட்டாத முக்கனியும்
மூனதுவும் ஒத்தவள் நீ.


14.

சக்தியும் மாறி சகதியாய் ஏகிடும் 
புத்தியோ மாறிடின் தான்.


15.

புரிதலில்லா கேண்மையும் புன்னகை மாய்த்திட்ட 
பெண்மையும் மேதினியில் பாழ்.


16.

தாம்தம தென்றே நிதமெத்தி வாழ்ந்தவர்
போமென்ப காரிருள் பால்..


17.

தவிர்க்குஞ் செயல்களை நீக்காது ஆற்றின்
தவிக்கும் நிலைவரும் காண்.


18.

பணியெனக் கூறின் வணங்கா தலையும்
பணியும் முடிதிருத்துங் கால்.


19.

வைத்ததோர் பாசமும் சேர்த்திட்ட நேசமும் 
கைத்தலாமோ காலத்தால் தான்.


20.

காணுகிற காட்சியும் ஈர்வரை வாராதே
மாணும் மதியதுவே சீர்.