
எம் பாவம் தானென்ன...?
உழைத்தால் சோறு உண்டென் றார்கள்
பிழைத்தால் மானமாய்ப் பிழைஎன் றார்கள்
இழைந்தே பொழுதை இழுத்திட முயன்றும்
குழைந்த எம்வயிறு நிறைந்திட வில்லை...!
கெட்டும் பட்டணம் போ என்றார்கள்
கிட்டும் உனது பேறென் றார்கள்...
எட்டும் திசையிலும் ஏகினோம் ஆயினும்
ஒட்டும் வயிற்றுக் குணவிலை எங்கிலும்..!
கலைக்கொரு உயர்நிலை எங்குமேயுண்டு
விலையிலா இசையது உருக்கிடும் என்றனர்..!
நிலையிலா மனிதரைப் பாடுத லததினும்
தலைவனின் புகழைப் பாடினோ மெங்கும்..!
வந்தனர் கேட்டனர் மகிழ்ந்தனர் ஆயினும்
தந்தது என்னவோ பாராட்டொன்றே...
இந்தஉம் மிசைக்கு ஈடிலை என்றனர்..
தந்த புகழுரை உண்டியும் நிறைக்குமோ...?
எங்கள் வறுமை எத்தனை கொடிது
எங்கினும் நோக்கினும் கிடைத்தலும் அரிது..
தங்கச்சிலையாய் செழித்த எம்மக்கள்
அங்கம் கறுத்தே அழகை இழந்தனர்..!
நாமகள் கையதன் நல்லதோர் வீணையாம்
யாமேன் இங்ஙனம் புழுதியில் படிந்தோம்..?
தாழையின் அகந்தை அழித்தவன் பிரமன்
ஏழைஎங்களைக் காத்திட வல்லனோ...?