Friday, August 12, 2011

கனவுகளின் வயது 65..!


படம்



கனவுகளின் வயது 65..!

வருடங்கள் பல உருண்டோடிவிட்டன..
நம் தாத்தாவுக்கு எள்ளுருண்டைகளும்
அவரின் தாத்தாவுக்கு கொள்ளுருண்டைகளும்
வைத்துப் ப்டைத்து
நம் கடமையைச் சரிவர செய்துவிட்டோம்..


கண்ணீர்விட்டு வளர்த்த இப்பயிரைக்
கருகத்தான் விடவில்லை நாம்..
வளமான உரத்திற்காக
உருகத்தான் விட்டுவிட்டோம்..


அண்ணல் காட்டிய வழிகள் நெடுகவும்
அருகம்புல் வளர்த்துவிட்டோம்..
அவர் வைத்திருந்த கைத்தடிக்கு
தங்கப்பூண் மாட்டிவிட்டோம்..


கோடித்துணிக்கு வக்கற்றிருந்த 
சில குடும்பங்கள்
கோடிகளில் வலம் வரவிட்டோம்..


சுதந்திரக்காரணத்தால் 
சிறை நிறைந்த காலம் போய்
தந்திரக்காரர்களுக்காய் 
சுகவாசஸ்தலங்களாக்கினோம்..


கல்வியில்லா கிராமங்களில் கூட
செல்விகள் சித்திகள் செல்வங்கள் 
மானாட்ட மயிலாட்டஙக்ள்
நாமாட வைத்துவிட்டோம்..


இனி என்ன செய்யப்போகிறோம்..?

நாம் நன்றாய் உறங்கலாம்..
கனவுகள் நன்றாய் வளர்க்கலாம்..
வல்லரசாய் சிறக்கலாம்..
எதிர்காலத் தலைமுறைக்கு 
தலை சிறந்த லாலிபாப்கள் வழங்கலாம்..


ஆம்.. நிறைய யோசிக்கலாம்..
கலாம் கலாம் கலாம்..
விறைத்து நின்று 
சந்தர்ப்பக்காற்றினில் படபடக்கும் 
தேசிய கொடிக்காய் 
கண்கலங்க வணங்கலாம்..!

1 comment:

  1. குழந்தை பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அந்த குழந்தையை நல்லபடி வளர்த்து ஆளாக்கி தனித்தன்மையுடன் பிற்காலத்தில் விளங்க என்னென்ன பாடுபடவேண்டும்?

    சுதந்திரம் பாடுபட்டு வாங்கி கொடுத்தாச்சு நமக்கு.... ஆனால் அந்த சுதந்திரத்தை நல்லபடி பயனுள்ளதாக ஏதேனும் செய்தோமா? அரசியல்வாதிகளின் கைகளில் ஊழலில் முங்கி அரசியல் சாக்கடையில் புரண்டு சுதந்திரம் படுகின்ற பாடு அதை வரிகளில் சுத்தியல் கொண்டு அடிப்பது போல நெருப்பு மசியில் சாட்டை தோய்த்து சுழற்றி அடிப்பது போல சிறப்பான வரிகள் கலை.....

    சீரிய சிந்தனை... நேர்மையான குடிமகனின் எண்ணங்கள் இப்படி தான் இருக்கும் என்று ஆணித்தரமாய் சொல்லவைத்த வரிகள்.....

    தாத்தா காலத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாளை சிறப்பாக தான் கொண்டாடுகிறோம்.... மிட்டாய் வழங்கி, நடனங்கள் அமைத்து சல்யூட் வைத்து கொடியேற்றி.... அதன்பின் அந்த நாளை மறந்துவிடுகிறோம்....

    அவரவர் இஷ்டம்போல் செயல்படுகின்றனர்..... ஒரு காலத்தில் சிறைகள் வழிந்தது தியாகிகளால் ஆனால் இப்போதோ சொர்க்காபுரி ஆகிவிட்டது அரசியல்வாதிகளால்....

    இனியாவது விழித்தெழுங்கள், கனவு கண்டுக்கொண்டு இருப்பதை நிறுத்தி நினைவாக்க முயலுங்கள் செயலாற்ற தொடங்குங்கள்..

    நேர்மையான அரசியல்வாதியை தலைவனாக்குங்கள்.... நாட்டை சீர் அமைக்க தொடங்கட்டும் வேள்வி என்றவகையில் அமைந்த அசத்தலான வரிகள் கலை.....

    அன்பு வாழ்த்துகள் கலை அற்புதமான வரிகள் கொண்ட கவிதை படைத்தமைக்கு....

    ReplyDelete