Friday, August 19, 2011

கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..







கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..




செங்கதிரோனின் பொன்னிறக்கரங்கள் 
எங்கும் தொட்டிடா கங்கைப்பூவே
மங்கையர் பூவினில் மயங்கிடு தல்போல் 
எம்கை கண்டதும் சிவந்திடும் பூவே
கொங்கை கண்ட குழவியைப் போல்தான் 
உள்ளம் கவர்ந்த குங்குமப்பூவே..
தன்கை நம்பிய தரமிகு உழவன் 
செங்கை வளர்த்த செம்மலர்ப் பொழிலே
கங்கைப் பூவே உன்னெழில் கண்டு 
மயங்கி மகிழ்ந்தேன் நற்சுவை தாராய்..


உண்டிநல் நிறைந்த உன்மத்தன் போல் 
கண்டுனை மகிழ்ந்தேன் கங்கைப்பூவே.
மண்டின நினைவினில் மயங்கியே மகிழ்ந்துனை 
மாந்தித் திளைத்திட மயங்கிடும் மனதை
முண்டி யடித்தே முடக்கி னன்யான் 
தண்மையின் அழகில் மடக்கினை பூவே
கொண்டு மகிழ்ந்துன் கோலம் கண்டிட 
உண்டு திளைத்துன எழிலதைப் பருகிட
உன்வடி வழகினில் உருகிக்களித்திட
பண்டைய நாள்முதல் பரிதவித்தனன் யான்...!


சிறுகக் குழைந்தே சிற்றிதழ் சிவந்திட
நறுமணம் கொண்டே நாடியைக் கவர்ந்திட
குறுமுகை செவ்விதழ் குவிந்து சிரித்திட
சிறுநகை புரிந்துன் இதழதை சுவைத்திட 
குறுகுறுத் திடுமென் குவிந்தநல் உதடும்
உன்னெழில் கண்டபின் ஊனினை மறந்தே 
முன்னெதிர் வந்துன் சிந்திடும் தேன்மழை
சின்னதோர் தேர்வடம் சிறுவர்கை பட்டதும்
மின்னலாய் ஒளிர்ந்திடும் ஓரதிசயம் போல்
கன்னலே உன்மது என்மதி மயக்கிடும்..!

2 comments:

  1. கவிதை வரிகளின் சிறப்பு வரிகளில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் மிளிர்கிறது....

    இயற்கையை வர்ணித்து பூவை வர்ணித்து அதன் அழகில் மதிமயங்கி வரைந்த கவிதை மிக அழகு கலை....

    கங்கை நீரை தான் பார்த்திருக்கிறேன்... ஆனால் கங்கைப்பூவென சொல்லி சிலாகித்திருக்கும் இயற்கை அழகை இத்தனை அழகாய் வர்ணித்திருக்கிறாய் கலை...

    உன் கைவிரல்களில் வரிகளில் வசப்படாமல் இருக்குமா என்று உன் கவிதை சொல்கிறது....

    ரோஜாவை பிடிக்காதவர் உண்டோ?

    ரோஜாப்பூவின் அழகை தான் நீ இத்தனை வர்ணித்திருக்கிறாய் என்று அழகிய ரோஜாப்பூ படம் பார்த்து அறிந்துக்கொள்ள முடிகிறது கலை....

    ரோஜாப்பூவின் சிறப்பையும் அது தரும் சுகந்த மணத்தையும் அதன் எழிலையும் அதன் அழகையும் வித்தியாச தலைப்பிட்டு கங்கைப்பூவென பாராட்டி வரைந்த அற்புதமான கவிதை வரிகளுக்கும் அழகிய ரோஜாப்பூ படத்துக்கும் என் அன்பு வாழ்த்துகள் கலை...

    ReplyDelete
  2. ரோஜாவை பிடிக்காதோர் யாருமே இல்லை...

    ரோஜா பூவின் சிறப்பை அதன் அழகை அதன் பயனை சிலாகித்து நீ எழுதிய வரிகள் அத்தனையும் படிக்க படிக்க இனிமை...

    ரோஜாவை குல்கந்து செய்து சாப்பிட்டால் பெறும் கோடி நன்மைகளையும் அதன் சுகந்த மணத்திற்கு அடிமையாகாத மனிதர்களும் இல்லை என்பதை உன் ஒவ்வொரு வரிகளிலும் அறியப்பெற்றேன் கலை...

    அழகிய இயற்கை எழில் கவிதையாக நினைத்தேன்.. ஆனால் ரோஜாப்பூவுக்கு ஒரு அழகிய சிந்தனை கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள் கலை...

    ReplyDelete