Friday, November 18, 2011

ஐம்பதில் வளைந்திடுமோ..? பகுதி - இரண்டு

11.1972.

பாலக் கல்வியது பவ்யமாய்க் கற்றபின்னர்
மேலே படித்திட வசதியேது மிலையெனினும்
ஓலமிட்டு இவன்செய்த ஓயாத போராட்டம்
குமர குருபரப் பள்ளியது கண்டதுவே...!


12, 1973

ஏழாம் வகுப்பினிலும் இவன் சீண்டல் குறையவில்லை
ஆழாக்கு உயரத்தில் இவனிருந்தும் சாந்தியிடம்
தாழாத காதலினால் மடலெழுதிச் சேர்த்துவிட்டு
ஏழையவன் இன்கனவாய் ஏலாமல் போனதுகாண்..!


13.1974.

கொட்டாமல் விழித்து நிதம் கூர்மையனாய் வாசித்து
எட்டாமது படிவத்தில் ஏழாம் தரம் வந்தபோழ்து
முட்டைக் கண்ணனவன் சந்தானம் மிகநட்பாய்
விட்டுவிட்டுச் சென்றனன் காலனின் அழைப்பதனால்..!


14.1975.

பதின்ம வயதுக்குள் பவ்யமாய் நுழைந்த யிவன்
சதியேதும் உணராமல் தீக்கூட்ட மதில்கலந்தான்
விதியென்றே சொல்லுவதோ வீண்பழிகள் ஏராளம்
மதிநுட்பச் செய்கையினால் மீண்டெழுந்து வந்தனனே..!


15.1976.

பத்தாம் வகுப்பதனில் பலகுழப்ப மேகங்கள் 
அத்தனையும் எதிர்நோக்கி ஏழ்மையையும் வென்றயிவன்
வித்தனாய் முகிழ்ந்தனன் தான் விதியின் கைவிலகிடுமோ
சொத்தேதும் இல்லாமல் சொந்தமாய் உழைத்தனனே..!


16.1977.

வசவுகள் வாழ்த்துகள் வறுமையதன் ஏளனங்கள்
கசவுகளின் இடியிடையே கனவுகளின் தாலாட்டு
நெசவதுதான் கைகொடுத்து நேர்மையனாய் வைத்திடவே
வசந்தமாய் மேல் கல்வி வாசித்தான் இவ்வேழை..!


17.1978.

ஏழையாய் பிறந்தனன் தான் என்றாலும் எப்போதும்
கோழையனாய் வாழவில்லை கோபம்தில் குறைவில்லை
வாழ வழிகண்டான் வாசித்தும் மேலுழைப்பில் 
தாழாமல் தறிநெய்தே தறிகெடாமல் வாழ்ந்துவந்தான்..!


18.1979.

பள்ளியதில் ஓர்வயது கூட்டியே பதிந்ததனால் 
கிள்ளியெடுக்கவும் சதையேது மின்றி இவன்
முள்ளில் வாழ்ந்தாற்போல் இக்கிள்ளை வாழ்ந்ததனால்
எள்ளிநகையாடும் எலும்பினனாய் இவன் தேகம்..!


19.1980.

கணிதமும் அறிவியலும் கலந்திவன்தான் படித்தாலும்
கணித்ததனில் மதிப்பெண்கள் கணிசமாய்ப் பெற்றாலும்
கணித்ததொரு விதியதனின் கைவழியே நடமிட்டு
கணிதக்கல்வியது இயலாமல் தமிழ்படித்தான்..!


20.1981.

போராட்டம் தீரவில்லை பொழுதுநிதம் வாட்டியது
சீராட்டம் செய்துதர சிறந்ததொரு உறவின்றி
ஏராரும் வழியதனில் எருதுகள் செல்வதுபோல்
நீராரும் கண்களுடன் நீந்தினனே விதியாற்றை..!

1 comment: