Monday, January 18, 2010

அன்னையாக மாட்டேனா...?

மழலையீன்ற மணிவயிறென
மற்றோரைச் சொல்வீர்கள்...

விழலில்லா நிலத்தையும்
பூமாதேவி என்பீர்கள்...

குழவியொன் றீந்திடாமல்
குறைபட்ட பாவியாய்

அழக்கூட வலுவில்லாது
அவச்சொல் சுமக்கிறேன்...

நிலம்பழுதென்றே
நிதம் கூவிநிற்பீர்

விதைபழுதா என்றே
விசாரித்திருப்பீரா..?

மாவடு கடித்திட
மனசெல்லாம் உண்டெனக்கு...

ஆவது வழியறியாது
நோன்புகள் நேர்கிறேன்....

போவதுவும் வருவதுவும்
பொல்லாங்கு சொல்லுவதை
வாயது அடைத்தே
வாடிப்போய் நிற்கிறேன்...

நோயல்ல இதுவென்றே
நோகித்தான் பறைகிறேன்..

சேயறியா நாய்களும்
இத்தனை இழிபடுமோ..?

மகவில்லா மாதர்கள்
மாந்தரில் கணக்கில்லையா?

முகவரி இல்லாத
மடல்போல்தான் அலைகிறேன்...

இகமே சரியில்லை
பரலோகம் எனக்கெதற்கு....?

அகம்குளிர அன்னையாய்
அழைக்கப்பட மாட்டேனா..?

1 comment:

  1. மகவீனப்படாத ஒரு அபலையின் உண்மை வேதனையை இதைவிட அழுகுரலில் எழுத்தால் பதித்துவிட கலைமகளாலும் முடியாது. கலைவேந்தனால் மட்டுமே முடியும் என்று அழுத்தமாகச் சொல்லுவேன். மகவில்லா மாந்தரை கணக்கில் சேர்க்காத மக்களினம் வீழ பா புனைந்த கலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete